Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 101

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
681
அத்தியாயம் 101

முதல் கட்ட விசாரணையிலேயே ஏறக்குறைய இறுதி கட்ட விசாரணை போல் மதுராவிற்கு தேவையான தகவல்கள் அனைத்தும் கிடைக்க பெற, எதிர்பார்த்திருந்த தடவியல் அறிக்கைகளும் அதே தருணத்தில் வந்து சேர, வழக்கு கடைசி கட்டத்தை நெருங்குவதை எண்ணி நிம்மதி பெருமூச்சு உற்றவள்
பாண்டித்துரையை தொடர்பு கொண்டு ,

" பாண்டித்துரை ... வைஷ்ணவி சுஜாதாவையும் கஸ்டடில எடுங்க..."

" நானே சொல்லணும்னு நினைச்சேன் மேம் நீங்களே சொல்லிட்டீங்க ..."

" குடும்பமே இவ்ளோ பெரிய கொடூர சம்பவத்துல ஈடுபடும் போது ,
அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் எதுவுமே தெரியாதுன்னு சொல்றது நம்பற மாதிரியே இல்ல .... அவங்களையும் விசாரிப்போம்...
அப்புறம் ஒரு முடிவுக்கு வரலாம் ..." என முடித்தாள்.

வந்திருந்த தடவியல் அறிக்கை முடிவுகள்,
விசாரணையின் போது குற்றவாளிகள் கொடுத்திருந்த வாக்குமூலத்திற்கு பெரும்பாலும் பொருந்தி வர ,
ரஷ்யாவை சேர்ந்த லாராவும், உதய்பூரை சேர்ந்த ஷில்பாவும்
ஸ்நஃப் படங்களுக்காக கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது
நிரூபணமாக,
அந்த செய்தியை
நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்ததோடு
அந்த வழக்கை தொடுத்த ஷில்பாவின் தந்தைக்கும் பகிர்ந்தாள்.



சுதாகரன் மற்றும் சூரிய கிரனிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் கலந்து கொண்ட
செர்ரி சர்க்கரை ஆலையில் வேலை இருப்பதாக சொல்லி கிருஷ்ணாவிடமிருந்து விடை பெற, அன்றைய தினத்தை வீணடிக்க விரும்பாமல் கிருஷ்ணாவும் தன் குழுவினர் பணி செய்யும் இடம் நோக்கி பயணிக்க,
மலையடிவாரத்தை நோக்கி அவன் காரை செலுத்த முயலும் போது திடீரென்று
ஏகப்பட்ட இடையூறுகள் தலை தூக்க தொடங்கின.

வண்டியை இயக்க முடியாத அளவிற்கு தூசு மாசோடு சுழற்றி அடிக்கும் காற்று,
திடீரென்று சரிந்து விழும் சின்னஞ்சிறு பாறைகள் என
என்றும் இல்லாத அளவிற்கு பாதையில் சிக்கல்கள் ஏற்பட, அந்த மத்திய வேளையில் கூட ஐந்தாறு நபர்கள் குலுங்கி பேசி சிரிப்பது போன்ற அமானுஷ்ய ஒலிகளும் அவ்வப்போது அவன் செவிணை தொட்டுச் செல்ல
உடனே அவன் மனையாள் சொன்னது தான் நினைவுக்கு வந்தது.

அதற்கு மேல் பணித்தளத்தை நோக்கி பயணத்தை தொடராமல், மிகுந்த சிரமத்தோடு வீடு வந்து சேர்ந்தான்.

வந்து சேர்ந்தவனின் வண்டியின் நிலைமையும், அவன் முகத்தில் காணப்பட்ட களைப்புமே பிரச்சனையின் தீவிரத்தை பறைசாற்ற

" என்னாச்சு கிருஷ்ணா ..." என்றாள் பதற்றத்தோடு அவன் சரி பாதி .

கிருஷ்ணா , செர்ரி இருவரும் சூரிய கிரன் மற்றும் சுதாகரனின் விசாரணையில் மட்டுமே கலந்து கொண்டிருந்தாலும், மற்ற குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணை காணொளிகளை மதுரா அவர்களிடம் பகிர்ந்ததால், நீண்ட நாட்களாய்
அவன் மனதில் மண்டி கிடந்த பெரும்பாலான கேள்விகளுக்கு
விடை கிடைத்திருக்க, பதற்றத்தோடு கேள்வி எழுப்பிய மனையாளை பாசத்தோடு பார்த்தான்.

சமயோகிதமாக செயல்பட்டு, காற்றாற்று வெள்ளமாய் கரைபுரண்டு வந்த துன்பங்களிலிருந்து தன்னைக் காத்த
தேவதையாகவே எண்ணி அவளை பார்வையால் ஸ்வீகரித்தவன், மன உணர்வினை வெளிப்படுத்தாமல்
பயணத்தில் நடந்த இடையூறுகளை கூற கூற, பித்து சித்தரின்
வாக்கு மெய்யாகி வருவதை உணர ஆரம்பித்தாள்.

" மா தேவி..... பிரம்ம பௌர்ணமியை நெருங்க நெருங்க பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டு ஆன்மாக்கள் பேயாட்டம் ஆடும் ....

அலை கழிக்கும் அந்த ஆன்மாக்களிடமிருந்து
நின் கொற்றவனின் ஜீவனைப் பிடித்து நிறுத்தும் சக்தி சிவசாலிகிராமமே...."

மேற்கூறிய செய்யுள் பித்து சித்தர் மாதவிக்கு உரைக்கும் பொழுது, கிருஷ்ணா மாயோன் மங்கலத்தின் மண்ணைக் கூட மிதித்திருக்கவில்லை.

சித்தர்கள் சிவபெருமானின் மறு உருவங்கள் ...

தெய்வத்தின் தீர்க்கதரிசனம் பொய்க்காது என்பது போல்,
கடந்த சில நாட்களாக தான் தோண்டும் பணிகள் நடைபெற்று மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நாளை பிரம்ம பௌர்ணமி...

இன்று துர் ஆத்மாக்கள் ஆட்டங்கள் ஆட ஆரம்பிக்க,

இப்படி ஒரு அசாதாரணமான சூழல் எதிர்காலத்தில் நிகழும் என்று முன்பே உரைத்த பித்து சித்தர், அவைகளிடமிருந்து காத்துக் கொள்ளும் கேடயமாக
சிவசாலிக்கிராமத்தை பயன்படுத்துமாறு உபாயம் கூறியதும் நினைவிற்கு வர பக்திப் பெருக்கில் உயிர் உருகி,
" ஓம் நமசிவாய " என்றாள் பரவசத்தோடு.

அவள் முக உணர்வுகளை ஆழ்ந்து உள்வாங்கி கொண்டவனின்
மனதில் வேறு சில விடை தெரியா கேள்விகள் வியாபித்து இருக்க
கேட்க சமய சந்தர்ப்பம் சரியில்லாததால் தன்னுள்ளேயே விடை தேட முயன்றான்.


கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முன்பு
நந்தி தேவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட , மாயோன் கோவிலின் மூலவர் சிலைக்கு அடியில் இருக்கும் சுரங்கத்தின் வழியாக 11 கிலோ மீட்டர் பயணித்தால் , சுயம்புவான மரகத லிங்கங்கள், தலைமை சித்தரான போகர் ஒன்பது பாஷாணங்களை சேர்த்து பிசைந்து செய்த நவபாஷாண லிங்கங்களை கொண்டிருக்கும்
ரகசிய அறையை அடைய முடியும்.

அந்த அறைக்குள் பிரவேசிக்க, நந்தி தேவர் மலையில், நந்தி தேவர் ஜீவசமாதி அடைவதற்கு முன்பு கல்வெட்டில் செதுக்கி விட்டுச் சென்ற பிரவேச மந்திரத்தை நயனங்களால் தரிசித்து பிறகு அதனை உச்சாடனப்படுத்திக் கொண்டே சென்றால் ரகசிய அறையின் பிரதான மாயக் கதவு திறக்கும்.

அங்கு இறப்பே இல்லாமல் செய்யும் தேவ மூலிகையான 'சஞ்சீவினி', மற்றும் உயிர் காக்கும் மூலிகைகளான சிவ நேத்திரம், ஷதாவரி , பிராமி, அஸ்வகந்தம் மலிந்திருக்கும்.
ஆனால் அவைகள் அவ்வளவு சீக்கிரம் கைகளுக்கும் கண்களுக்கும் அகப்படாது.

'தம்பணா' மந்திரத்தை மானசீகமாக உச்சரித்துக் கொண்டே சென்றால்,
அம்மூலிகைகளை கட்டுப்படுத்தி கைப்பற்றலாம் .

பிறகு பனிப்பாறைகள், கூழாங்கற்கள், ஆற்று மணல், செம்மண் நிலம் ஆகிய நிலங்களை கடந்தால் பஞ்சமுக நாகமான வாசுகியின்
ஐந்து தலைகள் குடை போல் விரித்திருக்க, அதற்கு அடியில்,
மரகத லிங்கங்கள், நவ பாஷாண லிங்கங்கள் இருக்க, ஆதி பைரவர் உக்ர பைரவர் என்ற நாய்கள் அதனை பேணிக் காத்துக் கொண்டிருக்கும்.

அதனை வணங்கி அனுமதி பெற்ற பின்னரே லிங்கங்களை சுமந்து கொண்டு வந்து மூலவர் சன்னதிக்கு அருகில் பிரதிஷ்டை செய்ய முடியும்.

மேற்சொன்ன தகவல்கள் எல்லாம்
சங்கையா மூலம் அவன் அறிந்திருந்தவை.

அதோடு மாதவியும் பூடகமாக பிரம்ம பௌர்ணமிக்காக காத்திருக்குமாறு அவனிடம் சொன்னது,
விசாரணையின் போது தனலட்சுமி பேசியவைகள் ஆகியவற்றை வைத்துப் பார்த்தால் மறு தினமான
பிரம்ம பௌர்ணமி அன்று தானும் தன் மனையாளும் தம்பதி சமேதராய் பயணித்து ரகசிய அறையை அடைந்து அங்கிருக்கும் மரகதலிங்கங்கள், நவபாஷாண லிங்கங்களை எடுத்து வந்து
மாயோன் கோவிலில் மூலவருக்கு அருகில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக புரிந்து இருந்தவனுக்கு
எதற்காக அந்த தெய்வ கைங்கரியத்தை செய்ய தாங்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்பது மட்டும் புரியாத புதிராகவே இருந்தது.

சாதாரண மானுடப் பிறவிகளான தானும் தன் மனையாளும்
இந்த செயற்கரிய காரியத்தை வழுவின்றி செய்து முடிக்க முடியுமா... என்ற சந்தேகம் அவனுள் உதித்த அதே நேரத்தில் அவன் மனையாளிற்குள்ளும் அதே கேள்வி உதயமாக தங்கள் பிறப்பு ரகசியங்களை அறியாமல்
விடிந்தால் விடை தெரியும் என்றெண்ணி காத்திருக்கலானார்கள்.

ஓரளவிற்கு அனைத்து விசாரணைகளையும் முடித்துவிட்டு வீடு திரும்பிய மதுராவின் மனதிலும்
பிரம்ம பௌர்ணமியை பற்றிய செய்திகளே விரவி இருந்தாலும்,
அதனைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தாலும், சொல்வதற்கு ஆட்கள் இல்லை என்பதால் அடக்கி வாசிக்க ஆரம்பித்தாள்.

அவர்கள் நால்வர் குழுவில்,
மாதவிக்கு மட்டுமே மறு தினம் நிகழவிருப்பது ஓரளவிற்கு பரிட்சயம் ....
மற்ற மூவருக்கும் குறுக்கெழுத்துப் போட்டியில் வார்த்தைகளை தேடி கண்டுபிடிக்கும் நிலைமை தான். இருந்தாலும்
இத்தனை நாட்களாக அச்சுறுத்திக் கொண்டிருந்த மனித மிருகங்கள் அனைத்தும் கூண்டில் அடைக்கப்பட்டது ஒருவித நிம்மதியை தர, மாயோன் மங்கலத்தின் மர்மத்தை அறிய மறு தினத்தை எதிர் நோக்கினார்கள் அந்த மாந்தர்கள்.


மறுநாள் பொழுது புலர்ந்தது .

மாதவியின் அறிவுறுத்தலின் படி யாதொன்றும் உண்ணாமல் , நீர் கூட பருகாமல் நமசிவாய மந்திரத்தை 1008 முறை உச்சரித்தபடி விரதம் மேற்கொண்டான் கிருஷ்ணா.

மாதவியும் அதேபோல் விரதம் மேற்கொண்டு சூரியன் மறைவுக்காக காத்திருந்தாள்.

சூரியன் அஸ்தமித்து அடங்குவதற்கு முன்பே , சந்திரன் முழு வீச்சாக
பிரம்மாண்ட வெள்ளோளியோடு ,
குளிர்ச்சியை பரப்பியபடி வானத்தின் மத்திமத்தில் உலக பந்து போல் அகன்று விரிந்து காட்சியளிக்க,
தங்களது பணிக்கான நேரம் வந்துவிட்டதை உணர்ந்த மாதவி,

" மதுரா.... மயூ குட்டியோட நீ, செர்ரி , சங்கையா மாயோன் கோவில்ல இருக்கிற மூலவர் சன்னதிக்கு போங்க ... நானும் கிருஷ்ணாவும்
நந்தி தேவர் மலைக்கு போய் பிரவேச மந்திரத்தை தெரிஞ்சுக்கிட்டு
அங்க வரோம்...." என்றவள் ஞாபகமாக
சிவசாலிகிராமத்தை தன் கையில் இருக்கும் சிறு பையில் வைத்துக்கொண்டு , தன்னவனோடு
நந்தி தேவர் மலை நோக்கி பயணமானாள்.

இருவரும் கால்களில் செருப்பு அணியாமல் கரடு முரடான பாதைகளில் பயணிக்க தொடங்கினர்.

பிரம்ம பௌர்ணமி தன் ஒளிவெள்ளத்தை செலுத்தி, பாதை காட்டியது.

முதல் அரை மணி நேரம் சற்று சுலபமாக கடக்க, நேரம் ஆக ஆக
மிகுந்த அமானுஷ்ய ஒலியை பரப்பியபடி காற்று வீசத் தொடங்க,
பட்சிகளின் சப்தமும் செவியை பிளக்க, திடீரென்று அவர்கள் பயணித்த பாதையில் மின்னல் கோடு போல் பாதைகள் பிளவுற தொடங்க,
அருகில் இருந்த கற்பாறைகள்
பிளந்து கொண்டு உருண்டோடி அவர்களை நோக்கி வர,
சிவசாலிக்கிராமத்தை தன் இரு கைகளால் பற்றிக் கொண்டு மனதில்
ஈசனை பூஜித்துக் கொண்டே தன் கணவனோடு மலை பயணத்தை மேற்கொண்டாள் மாதவி.

இத்துணை தடங்களும் தங்களுக்குள் தான் முட்டி மோதியதே ஒழிய , அவைகளால் நாயகன் நாயகியின் ஆடை நுனியை கூட தொட முடியவில்லை.

இவையெல்லாம் இறந்து போன
ஆதிகேசவ நம்பூதிரி ஆன்மாவின் அழிச்சாட்டியங்கள் என்பதை அறிந்திருந்ததால், அந்த மாயைக்கெல்லாம் அஞ்சாமல் அஞ்சப்பனை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டே பயணத்தை தொடங்கினர்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு, நந்தி தேவர் மலையில் இருக்கும் நந்தி தேவரின் ஜீவசமாதியை அடைந்தனர்.

அங்கு வணங்கி வழிபட்டு அருகிலிருந்த பிரவேச மந்திரம் பொறிக்கப்பட்ட கல்வெட்டை கண்டனர்.

முதலில் கல்வெட்டு தங்கமாய் மின்னிய வெற்று தகடாய் காட்சியளிக்க, ஒன்றுமே புரியாமல்
நாயகனும் நாயகியும் உறைந்திருந்த நேரத்தில், வான் வெளியில் அசரீரி குரல் ஒலிக்கத் தொடங்கியது.

" கொற்றவனே வருக... கொற்றவியே வருக வருக .... தங்களின் வரவு நல்வரவு ஆகுக ....

எத்துணை நூறு ஆண்டுகள் தங்களது வரவுக்காக காத்திருக்கிறோம் தெரியுமா ....."

நடப்பது புரியாமல் இருவரும் அமைதி காக்க,

" நான் இந்த மலைக்கு அரசி .....
இங்கிருக்கும் சிவபோக சக்கரத்தையும், பிரவேச மந்திரம் பொறிக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்டையும் தங்களது வரவுக்காக இத்துணை ஆண்டு காலம் பாதுகாத்து வருகிறேன் ....

நான் கூறும் சில பாக்களை தாங்கள் திருப்பி கூறினால், பிரவேச மந்திரம் தங்கள் கண்களுக்கு புலப்படும் ...
என்ன... தொடங்கலாமா ..."

இருவரும் தலையசைத்து ஆமோதிக்க,
அந்த மலையரசி நான்கு வரி கொண்ட
செய்யுளை கூற, நாயகனும் நாயகியும் அதனை பின் தொடர்ந்து முடித்த மாத்திரத்தில், அந்த தங்க நிற கல்வெட்டு தகட்டில் பிரவேச மந்திரம் பொறிக்கப்பட்டது போல் பெரும் எழுத்துக்களில் தோன்றியது.

உடனே நாயகனும் நாயகியும் அதனை
படித்து முடிக்க,

" புரிந்ததா ...." என்றாள் அந்த மலையரசி.

ரகசிய அறையின் மாயக் கதவை திறக்கும் சூத்திரம் செய்யுளாக அங்கு கொடுக்கப்பட்டிருந்தது.

"புரியல ..." என்று கிருஷ்ணா மொழிந்ததும்,
அதற்கான விளக்கத்தை அந்த மலையரசி தெள்ளத் தெளிவாக விளக்கி

" வேறு ஏதாவது சந்தேகமா ..." என்றாள்.

ஆம் என்பது போல் தலையசைத்தவன்,

" நான் சில கேள்விகள் கேட்கணும் ....
அதுக்கு எனக்கு பதில் வேணும் ..."

" கேளுங்கள் இறையே ..."

" நாங்க ரெண்டு பேரும் சாதாரண மானுடப் பிறவிகள் ....
எங்களுக்கு எதுக்காக இத்தனை மரியாதை .... "
அந்த மலையரசி லேசாக சிரித்து விட்டு

" நீங்கள் இருவரும் மாயோன் கோவிலின் நாயகன் நாயகி அல்லவா ..."

" நேரடியா கேக்கறேன் ....
கிட்டத்தட்ட 1000 ஆண்டு பழமையான மாயோன் கோவிலோட சுரங்கத்துல இருக்கிற ரகசிய அறைல நாகங்கள், பைரவர்களால பாதுகாக்கப்பட்டு வர மரகதலிங்கங்கள், நவபாஷாண லிங்கங்களை,
பிரம்ம பௌர்ணமில வெளியே கொண்டு வந்து மூலவர் சன்னதில பிரதிஷ்ட பண்ற அளவுக்கு எங்க ரெண்டு பேருக்கும் என்ன தகுதி இருக்கு ..." என்றான் முழு வீச்சோடு .

" வேந்தனே..... பிறவிகளை உணராமல் இருப்பதால் இப்படி உரைக்கின்றீர்கள் ...

மாயோன் கோவிலின் மூலவரை பிரதிஷ்டை செய்த நந்தி தேவருக்கு இணையான அதிகாரம் பெற்றவர் தாங்களும், தங்களது தேவியாரும் தான் ...

இன்னுமா விளங்கவில்லை ....

தாங்கள் தான் மாயோன் கோவிலின் ஸ்தபதி மாயவன் ....

தாங்கள் மானசீகமாக காதலித்து மணக்க முடியாமல் மரணித்துப் போன
தங்களது காதலி மோகினி தான் ...
இப்பிறவியில் தங்களது பிராட்டியார் மாதவி ...."

இருவரும் அதிர்ச்சியா ஆனந்தமா என பிரித்தறிய முடியாத புதுவித உணர்வில் உறைந்து நிற்க,

" இப்பொழுது கூறுங்கள் ....
மரகத லிங்கத்தையும் நவபாஷாண லிங்கத்தையும் மூலவர் சன்னதியில்
பிரதிஷ்டை செய்ய தங்களை விட தகுதியானவர்கள் யாராவது இருக்க முடியுமா ...

அதுமட்டுமல்லாமல் இது ஈசனின் தீர்ப்பு ...."

இருவரும் கண்கள் பனிக்க,
விண்ணில் வெள்ளொளியில் தெரிந்த சிவலிங்கத்தை கையெடுத்து வணங்கினர்.

" கொற்றவா, பௌர்ணமி முடிவதற்குள் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமை காத்துக் கொண்டிருக்கிறது ....


இத்துணை ஆண்டு காலம் இப்பிறவியில் தாங்கள் கடந்து வந்த பாதைகள்,
தங்களை சூழ்ந்து இருந்த சூழ்ச்சியில் இருந்து காப்பாற்ற தங்களது பிராட்டியார் மேற்கொண்ட
தவ வாழ்க்கை முறைகள்
இனிமேல் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள்..... என அனைத்தையும் தாங்கள் அறிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டதால் , தங்களுக்காக காத்திருக்கும் சிவபோக சக்கரத்தில் சென்று அமருங்கள் .....

அஷ்டமா சித்திகளின் உதவியோடு
நின் மனக்கண்ணிற்கு காட்சிகள் வசப்படும் ....

வருகிறேன் தேவா ...
வருகிறேன் தேவி ... " என்றபடி அந்த மலையரசி விடை பெற,

தங்கத்தில் செய்த தாமரைப் போல் ஜெகஜோதியாக மின்னிக் கொண்டிருக்கும் சிவபோக சக்கரத்தில்
சென்ற அமர்ந்தான் நாயகன்.

கைதேர்ந்த நடிகன், தான் நடித்த முழு திரைப்படத்தை வெள்ளித்திரையில் பார்ப்பது போல் காட்சிகள் அவர்கள் முன்னே விரியத் தொடங்கியது.....

அவனைப் பற்றிய திரைப்படம் அல்லவா ....
அவன் பிறப்பு, படிப்பு, வாழ்க்கை காதல், திருமணம் ... அவன் சுற்றம் ...
அவன் அறியாமல் அவன்
சுற்றங்கள் ஆடிய ஆட்டங்கள், போட்ட திட்டங்கள் ... அதனை அவன் மனைவியாள் தன் சூட்சமத்தால் தகர்த்தெறிய மேற்கொண்ட முறைகள் ...

என ஒன்று விடாமல் அரங்கேற,
நாயகன் நாயகி இருவரும் அதில் லயிக்க தொடங்கினர்.

- மாயோனின் மாயங்கள் தொடரும்
 
Back
Top