Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 101

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
640
அத்தியாயம் 101


" அது .... கார்த்திகா .... இப்ப ... எப்படி "

முடிக்க முடியாமல் அவள் தடுமாற,
அவளது வினாவினை சரியாகப் புரிந்து கொண்டு

" அவ இப்ப உயிரோட இல்ல .... அவ மட்டும் இல்ல, அந்தப் பிரகாஷும் உயிரோட இல்ல ..." என தொடங்கியவன், அவர்களது மேல் தளத்து புதுமனை புகுவிழாவின் போது பிரபாகரனின் மூலம் கார்த்திகாவும் பிரகாஷூம் அந்நிய தேசத்தில் உயிர்விட்ட செய்தியை அறிந்து கொண்டதை சொல்ல,
அவள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க,

" இந்த மாதிரியான தப்பு பண்றவங்களுக்கு எல்லாம் இப்படித்தான் முடிவு அமையும் ...
என்ன ஒன்னு , எனக்கும் இந்த மாதிரி தான் நடந்திருக்கணும்... ஆனா நம்ம குழந்தை இறந்து போனதுக்கு என்னோட சந்தேகம் தான் காரணம்னு மனம் திருந்தி, இனிமே நேர்மையா இருக்கணும்னு முடிவெடுத்தேன் பாரு..
அங்க தான் கடவுள் என்னை காப்பாத்தினாரு... இல்லன்னா எனக்கும் அந்த உயிர் கொல்லி நோய் வந்திருக்கும் ... இந்நேரம் என்னை புதைச்ச இடத்துல மரமே முளைச்சிருக்கும் ....
பொதுவா எந்த உறவுலயும் நேர்மையா இருக்கிறது நல்லது ... அதுவும் கணவன் மனைவி உறவுல நேர்மையை கடைப்பிடிச்சா உடம்பு மட்டுமல்ல மனசு, பொருளாதாரம் , சமூக அந்தஸ்து , கூடுதலா கடவுளோட ஆசீர்வாதம்னு எல்லாம் நல்லா கிடைக்கும் ... இது நான் என் வாழ்க்கையில கத்துக்கிட்ட பாடம் .... "

என உருக்கமாக பேசியவனை அவள் பெருமையாய் பார்க்க,
" என்னடி என்னை முழுங்குற மாறி அப்படி பார்க்கற.... " என்றபடி நெருங்கியவன்,

" சரி, இவ்ளோ நேரம் தம் கட்டி பேசினேனே... எனக்கு ஏதாவது கிடைக்குமா ...." கண்களில் ஆசையோடு அவளது கன்னத்தை கிள்ள

" கிடைக்கும் கிடைக்கும் ஓங்கி ஒன்னு வச்சா கிடைக்கும் ..." என்றபடி புன்னகைத்துக் கொண்டே கையை உயர்த்தியவள்,

" ஸ்ஸ்ஸ்ஸ்...." என்று கூவியபடி மறுக்கணமே கையை தாழ்த்திக் கொள்ள,

" ஓ காட் .... உன் கை பிரச்சனையே மறந்து போச்சு .... வா நேரம் ஆச்சு .... மாமி உன்னை கூட்டிகிட்டு வர சொல்லி இருக்காங்க .... அங்கயே போய் டாக்டரை பாத்துக்கலாம் .... இந்த புடவையே நல்லா இருக்கு .... தலைய மட்டும் வாரி விட்டுடறேன்..."

என்றபடி அவளது பதிலுக்கு காத்திராமல் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து அவளது கலைந்திருந்த கூந்தலை மேம்போக்காக வாரி விட்டு, குழந்தைக்கு கொடுப்பது போல் நெத்தியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றையும் வாஞ்சையோடு பதித்துவிட்டு அவன் வாயிலை நோக்கி முன்னேற, வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவிற்கு காதலை சுமந்தபடி அவனைப் பின் தொடர்ந்தாள் நாயகி.

அவன் மேஜர் வீட்டு வாயிலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை இயக்க, அவள் அவனது தோளை பற்றிய படி வாகனத்தின் பின்புறத்தில் ஏறி அமர, அதனை
அந்த தெருவில் இருந்த அனைவரும் வழக்கத்திற்கு மாறாக நின்று பார்க்க, அதனைக் கண்டு கொள்ளாமல் கம்பீரமாய் வாகனத்தை இயக்கி வேகம் எடுத்தான் நாயகன்.


மருத்துவமனையில், படுக்கையில் சாய்ந்தமருந்தபடி சற்று புத்துணர்வோடு கர்னல் இந்திராவுடன் பேசிக் கொண்டிருக்க , அப்போது இளையவர்கள் உள்ளே நுழைய, அவர்களைக் கண்டதும்,

" வா செல்வி, வாங்க திவாகரன் ... உங்களுக்காக தான் காத்துண்டு இருக்கேன் ... மாமாவோட ஹெல்த் இப்ப ரொம்ப இம்ப்ரூவ் ஆயிடுத்து... இன்னைக்கே டிஸ்சார்ஜ் பண்ணாலும் பண்ணிக்கலாம்னு காலையில தான் டாக்டர் சொல்லிட்டு போனேர்..."

என்ற இந்திராவின் பார்வை எதேச்சையாக தாமரையின் கரத்தின் மீது பட்டதும்

" என்ன செல்வி .... ஏன் கை எல்லாம் ஒரு மாறி மஞ்சளா இருக்கு .... " என்றார் லேசான அதிர்ச்சியோடு.

எப்படியும் இந்திராவின் காதுகளுக்கு நடந்து முடிந்த பிரச்சனைகள் சென்று சேரும் என்பதால் , திவாகரன் நடந்த அனைத்தையும் ஒளிவு மறைவின்றி சொல்ல, பெரியவர்கள் கோபத்தில் கொதித்துப் போய்விட்டனர்.

" பிஜு இவ்ளோ தரம் இறங்குவான்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல .... சின்ன பையன் துருதுருன்னு இருக்கானேனு நினைச்சிண்டு இருந்தேன் ... ஆனா இப்படி ஒரு துருப்பிடிச்ச புத்தியோட இருப்பான்னு கொஞ்சம் கூட நினைக்கல .... சரி அவன் தான் அப்படின்னா, காலனில இருக்கிற மத்தவாலுக்கெல்லாம் எங்க புத்தி போச்சு ... அவன் பேச்சைக் கேட்டுண்டு இப்படித்தான் வீடு ஏறி வந்து சண்டை போடுவாளா ..." என கொதித்துப் போன இந்திரா,

" உங்களுக்கு நாளைக்கு தானே கல்யாண நாள் ..." என்றார் யோசனையோடே இளையவர்கள் இருவரையும் ஒருசேர பார்த்து .

அவர் சொல்ல வருவதை புரிந்து கொண்ட திவாகரன்,

" மாமி, நாங்க ரெண்டு பேரும் மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிறப்ப என் பொண்ணு இருக்கணும்னு ஆசைப்படறேன் .... என் பொண்ணு கிட்டயும் பேசிட்டேன் ... அவ வர வெள்ளிக்கிழமை என் மாப்ளயோட இங்க வரா... வர ஞாயித்திகிழமை சுபமுகூர்த்த நாள் ... அன்னைக்கு பத்மநாபசுவாமி கோயில் கிழக்கு கோபுரத்து பக்கத்துல இருக்கிற
ஒரு சின்ன மேரேஜ் ஹால எங்க கல்யாணத்துக்காக ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன் ... அதுக்கு நம்ம காலனில இருக்கிற ஆளுங்கள கூப்பிடனுமானு யோசிச்சுக்கிட்டு இருந்தேன் .... இந்த பிரச்சனைக்கு அப்புறம் எல்லாரையும் கூப்பிடனும்னு முடிவு பண்ணிட்டேன் ...."

திட்டவட்டமாக சொல்ல, பெரியவர்கள் அவனை ஆச்சரியத்தோடு பார்க்க, தாமரையோ ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் தன்னவனைப் பார்த்தபடி உறைந்து நின்றாள்.

அவனோ அவளது முக பாவத்தை கீழ்க்கண்களால் பார்த்துவிட்டு உள்ளுக்குள் புன்னகைத்துக் கொள்ள, அப்போது

" வெல் டன் திவாகரன் ... யூ ஹவ் டன் ஏ குட் ஜாப் ..." என கர்னல் பாராட்ட ,

" வழக்கம் போல ரொம்ப நன்னா யோசிச்சு முடிவு எடுத்திருக்கீங்கோ ... " என இந்திராவும் தன் பங்கிற்கு பாராட்ட, மெச்ச வேண்டியவளோ பொய் கோபத்தை கண்களில் காட்டிவிட்டு கழுத்தை திருப்பிக் கொள்ள, அதனைக் காணாதது போல் கண்டுகொண்டவன்,

" மாமி, நீங்க உங்க திங்ஸ பேக் பண்ணி வையுங்க .... நான் இவளை இங்க இருக்கிற டாக்டர் கிட்ட கூட்டிகிட்டு போயிட்டு வந்துடறேன் ... வந்ததும் கிளம்பலாம் ..."

என்றபடி அவன் முன்னோக்கி நடக்க, அவனைப் பின் தொடர்ந்தவள் அறையை தாண்டியதுமே,

" என்னங்க ... கொஞ்சம் நில்லுங்க ..." என்றாள் கோப குரலில்.

அந்த அழைப்பை எதிர்பார்த்திருந்ததால் உடனே திரும்பியவன் ,

"என்னங்க ... சொல்லுங்க ...." என அவன் குழைய,

" என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம ... நீங்களும் உங்க பொண்ணும் எப்படி இப்படி ஒரு திட்டம் போடலாம் .... நான் தானே கல்யாணம் பொண்ணு .. என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கணுமில்ல .... ஒரு பேச்சுக்கு நான் இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொன்னா என்ன பண்ணுவீங்க ..." அவள் மிடுக்காக கேட்க

" அப்படி கல்யாணம் வேண்டாம்னு சொல்றவ தான் என்னை இங்க பார்த்ததும் விக்கி விக்கி அழுதயா... ஓரு வேளை அப்படி ஒரு எண்ணம் உனக்கு இருந்தாலும் கைய கால கட்டி தூக்கிட்டு போயாவது தாலி கட்டாம விட மாட்டேன் ... உனக்கு என்னை பத்தி தெரியுமில்ல ..."

அவன் பதிலுக்கு அடாவடியாக சொல்ல, அவள் வாயடைத்துப் பார்க்க ,

" ஒன்னு சொல்லட்டுமா ... ஒரே பொண்ணுக்கு மூணாவது தடவையா தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்க போற ஒரே ஆள் நான் தான் ... " அவன் குரலில் குறும்பை கூட்டி பெருமிதத்தோடு சொல்ல,

" அதான் ஏற்கனவே என் கழுத்துல தான் தாலி இருக்கே.... "

" அதனால என்ன ... புது மாங்கல்யம் வாங்கி கட்டிக்கிட்டு புதுசா வாழ்க்கை தொடங்கலாம் ...."

என அவன் கிறங்கிய குரலில் பேசிக் கொண்டிருக்கும் போது , வேம்புவிடமிருந்து அழைப்பு வர, அழைப்பை அனுமதித்து அலுவல் ரீதியாக சில வார்த்தைகளை பேசிவிட்டு,

" நீயும், பழனி அண்ணனும் குடும்பத்தோட வர வாரம் சனிக்கிழமையே இங்க நம்ம ஃபேக்டரி கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்துடுங்க ... ஞாயித்திக்கிழமை காலைல முகூர்த்தம் ..."
என அவன் அழைப்பை துண்டிக்க,

" உண்மைய சொல்லுங்க ... எப்ப இவ்ளோ ஏற்பாட்டை பண்ணிங்க ..." என்றாள் ஆச்சரியமாய் .

" ஆக்சுவலி, நம்ம கல்யாண நான் அன்னைக்கே கல்யாணம் பண்ணிக்கணும்னு தான் பிளான் பண்ணேன் ... ஆனா அன்னைக்கு நாள் சரியில்லனு ஐயிர் சொல்லிட்டாரு ... அதன் ஒரு வாரம் தள்ளிப் போட வேண்டியதாயிடுச்சு ... இப்ப அதுவும் ஒரு வகையில நல்லதாயிடுச்சு ..."

என அவன் முடிக்க, பதின் பருவத்தில் நடந்த திருமணத்தின் போது வராத எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியும் தற்போது போட்டி போட்டுக் கொண்டு வர, கோடியில் ஒருவருக்கு கூட இப்படியான வாய்ப்பை காலமோ, கடவுளோ அமைத்துக் கொடுப்பதில்லை என்பதை அறிந்தவள் ஆதலால், கண்கள் பனிக்க, கடவுளுக்கு மானசிகமாக நன்றி சொல்ல, அவளது பார்வையில் இருந்தே மனதைப் படித்தவன்

" போன மாசம் யாராவது, அடுத்த மாசம் நீ ரொம்ப சந்தோஷமா இருப்பேன்னு ஜோசியம் சொல்லி இருந்தா நிச்சயமா நம்பி இருக்க மாட்டேன் ... ஏன்னா அவ்ளோ நொந்து போய் இருந்தேன் ... ஆனா ஒரு நொடியில எல்லாத்தையும் மாத்துற சக்தி காலத்துக்கும் கடவுளுக்கும் உண்டுனு இப்ப தான் புரியுது ... ரெண்டு பேருமே நிறைய கஷ்டப்பட்டுட்டோம் ... அதுலயும் என்னை விட நீ தான் அதிகம் கஷ்டப்பட்டிருக்க ... அதுவும் என்னால ... இனிமே அப்படி நடக்காது தாமரை ... நடந்ததுக்கெல்லாம் ஐ அம் சாரி ..." என்றபடி ஒரு நிறைந்த பார்வை பார்த்துவிட்டு அவளது கரத்தை மென்மையாக பற்றி கொண்டு மருத்துவரை நோக்கி அவன் முன்னேற,
அவனது மனையாள் மிகுந்த மகிழ்ச்சியோடு பின் தொடர்ந்தாள்.

அவளது கரங்களுக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டு அன்று மாலையே கர்னல் தம்பதியரோடு அவர்கள் வீடு திரும்ப , தாமரையின் கை காயத்தை மனதில் கொண்டு அன்றைய இரவு இந்திராவே சமைத்துப் பரிமாற, பழங்கதைகளை பேசியபடி வெகு நீண்ட நாட்களுக்குப் பிறகு வயிறார உண்டவன் ,
உறங்க மட்டும் வேறு வழி இல்லாமல் வழக்கம் போல் மேஜரின் வீட்டு மேல் தளத்தை முற்றுகையிட்டான்.

மறுதினம் தன் திருமண நாளை தன் ஆசை மனைவியோடு கர்னல் தம்பதியரின் ஆசிர்வாதத்துடன் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக கொண்டாட தொடங்கினான் ...

அதிகாலையிலேயே மகள் ஜோதி தன் கணவனோடு தாய் தந்தையரை தொடர்பு கொண்டு திருமண வாழ்த்து தெரிவித்து விட்டு, திருமண ஏற்பாட்டை கேட்டறிந்து கொண்டு தன் பயண விபரத்தையும் சொல்லிவிட்டு சற்று நேரம் குதூகலமாக அளவளாவி விட்டே அழைப்பை துண்டித்தாள் ....

அன்றைய பொழுது முழுவதும்
தன்னவளோடு கோவில், கடைத்தெரு , உணவு விடுதி என முதல் திருமண நாள் போல் கோலாகலமாக கொண்டாடியவன், அவ்வப்போது சிறு சிறு சீண்டல்களையும் சில்மிஷங்களையும் இலை மறை காயாக புரியவும் தவறவில்லை ...

இப்படியாக அன்றைய தினம் அழகாக கழிய, பரமுவின் தாயார் உடல்நிலை சற்று தேறி இருந்ததால் அவருடன் கூடுதலாக இரு தினங்கள் இருந்து விட்டு வருவதாக பரமு சொன்னதால், மறுநாள் அதிகாலையிலேயே மேஜர் மட்டும் ஊர் திரும்ப, அவரிடம் காலை உணவு நேரத்தின் போது , வரும் வாரம் நடைபெறவிருக்கும் தன் திருமணத்தைப் பற்றி சொன்னவன் உடன் பிஜுவால் நடந்த பிரச்சனையையும் மனம் விட்டு பகிர ,

" திவா, நீ அப்பவே பிஜுவோட கேடு கெட்ட எண்ணத்தை பத்தி எல்லார் முன்னாடியும் சொல்லி இருக்கலாமே .... ஏன் அமைதியா இருந்துட்ட ..." என அவர் பெரும் சினத்தில் வினவ,

" நான் அவன பத்தி சொல்ல போய், தேவையில்லாம தாமரையோட பேரும் அடிப்படும் மேஜர் ... அதனால தான் சொல்லாம விட்டுட்டேன் ... எனக்கு என் பொண்டாட்டிய பத்தி ரொம்ப நல்லா தெரியும் .... ஆனா மத்தவங்க பார்வையில அந்த விஷயம் என்ன மாதிரியான இம்பேக்ட்டை ஏற்படுத்தும்னு தெரியாது இல்லையா ... அதனால தான் அமைதியா இருந்துட்டேன் ..."

" நீ பேசாம இருந்திருக்கலாம் ... ஆனா நான் இந்த விஷயத்தை பத்தி தாமஸ், லூசி இரண்டு பேரையும் கூப்பிட்டு பேச தான் போறேன் ..."

என்றவர், சொன்னது போலவே, மறு தினமே தாமஸ் லூசி தம்பதியரை தனியே அழைத்து பிஜூவின் நடத்தையை சொல்ல ,
கொதித்துப் போய்விட்டார் லூசி.

தன் மகனின் பேச்சை நம்பி, தாறுமாறாக திவாகரன் தம்பதியரை சாடியதை நினைத்து வருந்தியவர், மைந்தன் என்றும் பாராமல் அவனை கன்னம் கன்னமாக தாக்கி,

" நீ இப்பவே ஊருக்கு கிளம்பு பிஜூ.... நீ இங்க இருந்தா உங்க அப்பா தாத்தாவோட மரியாதை எல்லாத்தையும் கெடுத்துடுவ .... எப்ப உன் மனசுல இந்த மாதிரியான வக்கிர எண்ணங்கள் எல்லாம் காணாம போகுதோ, அப்ப நீ இங்க வந்தா போதும் ..."

என விரட்டி அடித்து விட்டு, அடுத்த கணமே திவாகரன் தம்பதியரை சந்தித்து மனமார மன்னிப்பு வேண்ட, அவரது மனநிலையைப் புரிந்து கொண்டு அவர்களும் சமாதானப்படுத்த, இப்படியாக தொடர்ந்த பேச்சு வார்த்தை ஒரு கட்டத்தில் அழகிய நட்புறவிற்கு ஆரம்பம் ஆகிப்போக, உடனே மேஜர், திவாகரன் தம்பதியரின் திருமண அழைப்பிதழை அக் காலனியின் whatsapp குழுவில் பகிர்ந்து அனைவருக்கும் அழைப்பு விடுக்க, அதனைக் கண்டதும் ஏற்கனவே சிறியவனின் பேச்சைக் கேட்டு சில்லறை தனமாக நடந்து கொண்டு விட்டோமே என்று கூச்சத்தில்
குழம்பிக் கொண்டிருந்த
லதா நாயர், ரமணியம்மா உட்பட அன்றைய இரவு தாமரையின் குடியிருப்பிற்கு படையெடுத்து வந்திருந்த அனைவருமே திவாகரன் தம்பதியரை தனிமையில் சந்தித்து திருமணத்திற்கு நிச்சயம் வருவதாக மனமார சொல்லி தங்களது மன்னிப்பை பதிவு செய்ய, விழியில் விழுந்த தூசியாய் உறுத்திக் கொண்டிருந்த அந்த விஷயமும் சுலபமாக முடிவுக்கு வந்ததால், அன்றிலிருந்து கல்யாண வேலைகள் வெகு விமர்சையாய் களை கட்ட தொடங்கின.

தன்னை பற்றி அறிந்திருந்த நெருங்கிய நட்பு வட்டங்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்த திவாகரன், தன் தாய் தந்தை தமக்கையை மட்டும் திருமணத்திற்கு அழைக்கவில்லை ...

ஏனென்றால், இவர்களுக்கிடையே இப்படி ஒரு விவாகரத்துக் கூத்து நடந்தேறி இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது என்பதோடு அதனை தற்போது தெரியப்படுத்தினால் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க நேரிடும் என்பதால் அதனை முற்றிலுமாக கைவிட்டிருந்தான்.

இப்படியாக மேலும் இரண்டு நாட்கள் ஆரவாரத்துடன் கழிய,
தனது தாயின் உடல்நிலை நன்றாக தேறி இருந்த நிலையில் , பரமுவும் விஷயம் அறிந்து மிகுந்த சந்தோஷத்தோடு ஊர் திரும்ப, திவாகரனின் மகள் ஜோதியும் தன் கணவன் சூர்யாவோடு தாய் தந்தையின் திருமணத்திற்காக விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும், மனம் கொள்ளா மகிழ்ச்சியையும் சுமந்து கொண்டு நாடு திரும்ப , அவர்களை மிகுந்த உற்சாகத்தோடு விமான நிலையத்திற்கே சென்று திவாகரன் தம்பதியர் வரவேற்க,
இளையவளுக்கு புத்தி தெரிந்து, பெற்றோரரை இவ்வளவு நெருக்கமாக மிகுந்த மகிழ்ச்சியான மனநிலையில் கண்டதே இல்லை என்பதால், அவர்களை அப்படி கண்டதும் பூரித்துப் போனாள்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல், மகளின் பளபளப்பு சருமமும் , முகம் கொள்ளா புன்னகையும், சற்றே பூசி இருந்த உடல்வாகும் அவளது திருமண வாழ்க்கையின் இனிமையை பறைசாற்ற, சூர்யாவும் சற்று எடை கூடி மிகுந்த கம்பீரத்தோடும் களிப்போடும் கலகலப்பாக பெரியவர்களை நலம் விசாரிக்க, பயந்தது போல் ஏதும் இல்லாமல் மகளின் வாழ்க்கை இனிமையாக அமைந்திருப்பதை கண்டு தாமரை அகம் மகிழ , அப்போது

" அத்தை, நீங்க இவ்ளோ சீக்கிரம் இப்படி ஒரு நல்ல முடிவை எடுப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல .... என் அம்மா
தொடக்க காலத்துல சொத்து விஷயத்துல மாமாவை ஏமாத்தினா மாறி, எங்க நானும்
ஜோதியை ஏமாத்திடுவேனோனு பயந்து தான் நீங்க எங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கல ... ஆனா மாமா என்னை பத்தி நல்லா விசாரிச்சு புரிஞ்சுகிட்டு எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கப் போய் உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல பிரிவே வந்துருச்சு ... அத நினைக்கும் போதெல்லாம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.... இப்ப நாங்க நல்லபடியா வாழறோம்னு தெரிஞ்சதும் , நீங்க உங்க முடிவ மாத்திக்கிட்டு மாமாவோட சேர்ந்தது மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு அத்தை ... "

என்ற சூர்யா , திவாகரன் தம்பதியரின் விவாகரத்து குறித்தோ, தற்போது அவர்கள் மறுபடியும் மணந்து கொள்ளப் போவதை பற்றியோ தன் குடும்பத்தாரிடம் மூச்சு விடவில்லை என்பதையும் உணர்வுபூர்வமான குரலில், மொழிந்து முடிக்க, நெகிழ்ந்து போனாள் தாமரை.

பாவம் அவன் மேம்போக்கான காரணத்தை மட்டும் வைத்து அவர்களது பிரிவிற்கு தான் தான் காரணம் என வருந்தியது அவளுக்கு வருத்தம் அளித்தாலும், கண்மூடித்தனமாக தன் தாயை நம்பாமல் குடும்ப பிரச்சினைகளை அறிந்து நடுநிலையாக யோசித்திருந்தது அவளுக்கு நிம்மதி அளிக்க,

" நீயும் ஜோதியும் இப்ப சந்தோஷமா இருக்கிறத பார்த்ததும் தேவையில்லாம நான் உன்னை தப்பா நினைச்சிட்டேனோனு எனக்கு தோண ஆரம்பிச்சிடுச்சு ... உங்க மாமா மேல இருந்த கோவமும் போயிடுச்சு ... அதான் என் முடிவை மாத்திக்கிட்டேன் ... உன் கல்யாண விஷயத்துல நான் அப்படி பேசினத நினைச்சு உனக்கு என் மேல எந்த கோவம் இல்லயே ..." என அவள் மெய்யாகவே வருந்த,

" என்ன அத்த இப்படி கேக்கறீங்க ... சின்ன வயசுல இருந்து உங்கள பாத்துகிட்டு இருக்கேன் .... நீங்க எவ்ளோ என் மேல பாசமா இருப்பீங்கன்னு எனக்கு தெரியும் ... அப்படிப்பட்ட நீங்க ஜோதியை எனக்கு கட்டிக் கொடுக்க யோசிக்கிறீங்கன்னா காரணம் இல்லாமலா இருக்கும்னு யோசிச்சேன் .... மத்தபடி உங்க மேல எனக்கு என்னைக்குமே கோவம் இருந்ததில்ல....

என இளையவன் பெருந்தன்மையாய் முடித்ததும் எந்நிலையிலும் கணவனான தன்னை விட்டுக் கொடுக்காமல் சூழ்நிலையை கையாண்ட தன்னவளை காதலோடு பார்த்த திவாகரன்,

" உன் அத்தை யாருக்கும் கெடுதல் நினைச்சதில்ல சூரி .... கெடுதல் நினைக்கவும் மாட்டா... பொண்ணு வாழ்க்கை நல்லா அமையனுமேன்ற பயத்துல தான் அன்னைக்கு உன்னை தப்பா நினைச்சுட்டா ..."

என சூர்யாவிடம் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும் போது ,

" என்ன ... நீங்க மூணு பேருமே மாத்தி மாத்தி கொஞ்சி கிட்டு , என்னை டீல்ல விட்டுட்டீங்க ..."

என ஜோதி சமயம் பார்த்து முறுக்கிக் கொள்ள,

" என் ஜோதி பாப்பாவை கொஞ்சாம விட்டுடுவேனா .... " என்றபடி திவாகரன் மகளின் தோள் அணைக்க, அவளும் பாசத்தோடு தந்தையின் தோள் சாய , மனைவி மற்றும் மருமகன் புடை சூழ பயணப் பொதிகளை தள்ளிக்கொண்டு புதுவித சந்தோஷத்தில் கார் நிறுத்தத்தை நோக்கி நடை போட்டான் நாயகன்.


--- பெண்மை மலரும் ....
 
Back
Top