Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 102

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
681
அத்தியாயம் 102

அவனது பிறப்புக்கு காரணமானவர்களில் இருந்து காட்சி முதலில் விரிவடைய தொடங்கியது ....

" சங்கையா ... நானும் என் பொண்டாட்டியும் நித்தமும் இந்த மாயோன் கோவிலே கதியா இருக்கோம்.... பல தடவை பாலகிருஷ்ண மண்டபத்துலயும் தங்கிட்டு வந்துட்டோம் ... இன்னமும் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கலையே...."

" கவலைப்படாதே ஈஸ்வரா ...
தன்னை நம்பியவர்களை ஈசன் ஒருபோதும் கைவிட்டதில்ல.... நீயும் உன் மனைவியும் யாருக்கும் தீங்கு நினைச்சதில்லை ....
ஏதோ ஒரு விஷயத்துக்காக தான் உன்னை காத்திருக்க வச்சிருக்கான் ....
கூடிய சீக்கிரம் அது உனக்கு தெரிய வரும் .... நாளைக்கு நான் படி பூஜை செய்ய போறேன் நீயும் உன் மனைவி உமா தேவியும் வாங்க ..."

மறுநாள் சங்கையா படி பூஜை செய்து கொண்டிருக்கும் போது, உடன் அவரது நண்பன் ஈஸ்வரனும் அவன் மனைவி உமா தேவியும் உதவி செய்து கொண்டிருந்தனர்.

அங்கு திடீரென்று தோன்றிய பித்து சித்தர், ஈஸ்வரனை நெருங்கி,
செய்யுள் வடிவத்தில் சில வரிகளை கூறி கேள்வி எழுப்ப, அவர் புரியாமல் சங்கையாவை நோக்கினார்.

உடனே சங்கையாவின் முகம் களையிழந்து சோகத்தை அப்பிக்கொண்டது.

" ஈஸ்வரா, இவ்ளோ காலமா ஈசன் உனக்கு குழந்தை பேறு கொடுக்காம இருந்ததுக்கு காரணம்....
உனக்கு குழந்தை பிறந்த மறு நொடி
நீயும் உன் மனைவியும் மரணிக்கனும் விதியாம்.... அதை செய்ய மனமில்லாம தான், குழந்தை இல்லங்கிற ஒரே ஒரு நீங்காத குறைய கொடுத்து அது மூலம் உங்க கர்மவினை கழிக்க பார்த்திருக்கான் ...

ஆனா...." என சங்கையா நிறுத்த,

" எதுவா இருந்தாலும் சொல்லு சங்கையா...." என ஈஸ்வரன் ஊக்க

" உங்களுக்கு பிறக்கப் போற குழந்தை, ஒரு அவதார புருஷன் ...
ஈசனையே ஈசன் விருப்பப்படி தன் கையால பிரதிஷ்ட பண்ற போற குழந்தை ...
அந்த குழந்தையால இந்த மாயோன் மங்கலத்துக்கே பல சிறப்பு வரப்போகுது ...
அதைவிட இந்த மனித சமுதாயத்துக்கு பல நன்மைகள் நடக்க போகுது ...
அப்படி ஒரு அவதார புருஷன் அவதரிக்கனும்னா, அம்மை அப்பனான நீங்க ரெண்டு பேரும் உடனே மரணிக்கணும்னு விதி..."
என சங்கையா முடித்தார்.

ஒரு கணம் கூட யோசிக்காமல்,
கணவன் மனைவி இருவரும் ,

"நாங்க இறந்தாலும் பரவாயில்ல.
இப்படி ஒரு குழந்தையை, இந்த உலகத்துக்கு கொடுத்துட்டு போறதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்..." என்றனர்.

அதற்கு மேல் நாட்கள் பஞ்சாய் பறக்க,
மூன்று மாதங்களுக்குப் பிறகு உமாதேவி கர்ப்பம் தரித்தார்.

இருவரும் ஆகச்சிறந்த சிவ தொண்டர்கள். ஈசனின் உத்தரவு படி தானே அனைத்தும் நடந்தேறுகிறது ...
அதோடு அவர்களது இறப்பிற்கு பின்பு,
அவர்களது ஆன்மா ஈசனின் திருவடிகளில் இளைப்பாற போவதால்,
யாதொரு கவலையுமின்றி காலம் கடத்தினர்.

மாதங்கள் கடக்க, திடீரென்று ஒரு நாள் உமாதேவிக்கு பிரசவ வலி வர,
அதை அவர் உணர்வதற்கு முன்பே,
குழந்தை பிறந்து விட்டது.

பிறந்த குழந்தை மிகுந்த தெய்வாம்சத்தோடு , பறந்து மலர்ந்த தாமரைக் கண்களுடன், கலையான முகவெட்டோடு காட்சியளிக்க,
பெற்றவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.

சங்கையாவும் அவரது தாய் சகுந்தலையும் குழந்தையை கையில் ஏந்தி கொஞ்சி மகிழ்ந்தனர்.

குழந்தை பிறந்து அரை தினம் அழகாகத்தான் கழிந்தது.
திடீரென்று எங்கிருந்தோ முளைத்த
சர்ப்பம், குழந்தையின் தாய் தந்தையை மட்டும் தீண்டி விட்டு
மறைய, அடுத்த நொடியே இருவரும் மரணித்தனர்.

அவர்களது மரணம் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட ஒன்று என்றாலும்,
சங்கையாவுக்கும் அவரது தாய் சகுந்தலைக்கும் மிகுந்த சோகத்தை கொடுத்தது.

குழந்தையை கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், அசரீரி போல் பித்து சித்தரின் குரல் ஒலிக்கத் தொடங்கியது.

கலியுகத்தில் ஜனனத்திற்கு கர்த்தாவும் மரணத்திற்கும் , காரணமும் தேவைப்படுகிறது ....

இந்தப் குழந்தை ஜனிப்பதற்கு ஒரு ஆண் பெண் தேவைப்பட்டனர் ....
அதிலும் அவதாரப் புருஷனான இந்த குழந்தை ஜனிக்க, இரு நல் உள்ளங்கள் தேவைப்பட்டது.
அதற்காகத்தான் ஈசன் இவர்களை
தாய் தந்தையராக தேர்வு செய்தான்.

இவர்கள் இந்த பூமியில் அவதரித்ததற்கான பணி முடிந்து விட்டதால், சர்ப்பம் தீண்டி இறந்து விட்டனர் ....

கலியுகம் என்பதால் இறப்பதற்கும் காரணம் தேவை .... அந்தப் பழியை சர்பம் ஏற்றுக் கொண்டு விட்டது ....

அந்த வாசுதேவ கிருஷ்ணன், அரக்கர்கள் சூழ்ந்திருந்த சிறையில் அவதரித்த உடனேயே பாசமும் நேசமும் பொங்கி வழிந்த கோகுலத்திற்கு சென்றுவிட்டான் ....
ஆனால் இந்த வாசுதேவ கிருஷ்ணன், அன்பும் அறமும் பொங்கி வழியும் இந்த கோகுலத்தில் அவதரித்து,
அரக்கர்களுக்கு இணையாக அவதரித்திருப்பவர்களுடன் சென்று வாழ வேண்டிய கட்டாயம் ...

இதுவே இவனது கர்ம வினை ....

இன்னும் முக்கால் நாழிகையில்,
பேதை ஒருத்தி வருவாள் ....
அவளிடம் கொடுங்கள் ....
குழந்தை சேர வேண்டிய இடம் சென்று சேர்ந்து விடும் ...."

சித்தர் சொன்னது போல், மூர்த்தியார் இல்லத்தில் வேலை செய்து கொண்டிருந்த பாண்டிம்மா சங்கையாவை சந்தித்து,

" மூர்த்தியார் மருமவளுக்கு குழந்தை பொறந்து செத்துப் போச்சு ....
யாருக்கும் தெரியாம குழந்தை பொதைக்கணும்னு ஆள் வேணும்னு கேட்டாக .... நம்ம செவிலிய கூட்டிகிட்டு போலாம்னு வந்தேன் ....பொறந்த
குழந்தை செத்துப் போச்சே...என் வீட்டுக்காருக்கும், மாமனார் மாமியாருக்கும் என்ன பதில் சொல்லுவேன்? எந்த குழந்தையை காட்டுவேன்னு மூர்த்தியார் மருமவ ஒரே அழுகை ...." என்றதும்
அங்கு நடந்த விஷயத்தை சங்கையா கூறிவிட்டு,
" உனக்கு தெரிஞ்ச அனாதை பொண்ணு ஆண் குழந்தையை பெத்து போட்டுட்டு செத்துப் போயிடுச்சுனு சொல்லி இந்த குழந்தையை அங்க சேர்த்துடு ...."

" வாங்கிப்பாங்களா ...."

" அவங்களோட விதி வாங்கி தான் ஆகணும் .... நீ குழந்தையை கொண்டுகிட்டு போ ...." என முடித்தார் சங்கையா.

இப்படிதான் குழந்தை கை மாறியது.

குழந்தை கை மாறியது தெரியாமல்,
மூர்த்தியார் அந்த குழந்தையைக் கண்டு அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சி அடைய, விசாலம் குழந்தைக்கு பெயர் வைக்க ஜோசியரை அழைத்தார்.

" குழந்தை பாக்க அவ்ளோ அழகா குட்டி கிருஷ்ணனாட்டம் இருக்கான் ...

நீங்க 'வ' 'வா' 'வே' இந்த மாதிரியான
எழுத்துல தொடங்குற பெயரை வச்சா அமோகமா வருவான் ....
அருமையான ஜாதகம் அமைப்பு ...."
என ஜோசியர் புகழ,
மூர்த்தியாருக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றாலும், விசாலத்திற்கு நம்பிக்கை உள்ளதால் அவரே அந்த எழுத்தில் பெயரை தேர்வு செய்து வாசுதேவ கிருஷ்ணன் என்று நாமகரணம் சூட்டினார்.


மனத்திரையில் அந்த நிகழ்வைக் கண்டு, அவன் கண்கள் ஆனந்த கண்ணீர் சிந்தியது.

பிறகு அவனது படிப்பு, விடுதி வாழ்க்கை, மாதவியை சந்தித்த தருணம், மனம் திறக்காமல் அவனும் மாதவியும் காதல் வயப்பட்டது,
சாந்தி சுடுவார்த்தையால் மாதவியை சாடியது , அவள் அந்த இல்லத்தில் அனாதையாய் வலம் வந்தது என அனைத்து நிகழ்வுகளும் படக்காட்சிகளாய் நடந்தேற,
நான்கு கண்களும் சோகத்தில் கண்ணீர் சிந்தின.

இறந்த ஆன்மாவிற்கு மட்டுமே சாத்தியமான ஒன்று, தான் வாழ்ந்த காலத்தில் தனக்கு முன்னும், பின்னும்,
உடனும் நிகழ்ந்த நிகழ்வுகளை திரைப்படம் போல் பார்க்கும் வசதி.

அது இங்கு நாயகன் நாயகிக்கு இறவாமலேயே கிடைத்துக் கொண்டிருந்தது.


மாதவியின் மஞ்சள் நீராட்டு விழா, அதற்குப் பின்பான அவர்களது கல்லூரி நாட்கள் .... கல்லூரி நாட்களில் மனம் திறக்காமலேயே மானசீகமாக இருவரும் காதலில் மூழ்கி திளைத்த தருணங்கள் ...
சுஜாதாவை கிருஷ்ணாவுக்கு மணமுடிக்க அவர்களது குடும்பத்தார்
போட்ட திட்டங்கள், சூரிய கிரன் ராஜலட்சுமி கிருபாகரனிடம் கிருஷ்ணாவை பற்றி வசை பாடிய நேரங்கள் ...
என அவன், அவள் சம்பந்தமான, மற்றும் அவர்களைச் சுற்றி பின்னப்பட்ட காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து போனது.

படி பூஜை செய்து கொண்டிருந்த மாதவி உயிரை மாய்த்துக்கொள்ள கானகத்திற்கு ஓடியது, கிருஷ்ணா அவளை பின்தொடர்ந்தது ...
பாவை மண்டபத்தில் இரவை கழித்தது ...பிறகு பஞ்சாயத்து கூடியது ... கிருஷ்ணா மங்கள மண்டபத்தில் அவள் கழுத்தில் மங்கள்யத்தை அணிவித்து மனைவியாக ஏற்றுக் கொண்டது ...
போன்ற காட்சிகள் விரியும்போது,
தனலட்சுமி சொன்ன
ஆதிகேசவ நம்பூதிரி, தனசேகரனின் சந்திப்பும் விரிந்தது ....

பிறகு நாயகனும் நாயகியும் ஷில்லாங்கிற்கு பறந்தது . அவர்களது ஆறு மாத கால அன்னியோன்ய வாழ்க்கை ....

அதை மனத்திரையில் பார்க்க பார்க்க,
பாசம், ஆசை, வெட்கம், காதல் ,நேசம், மோகம், கூச்சம் அனைத்து கலவையாய் இருவர் முகத்திலும் கரைபுரண்டு ஓடியது.


மாதவி மட்டும் ஷில்லாங்கில் இருந்து
மாயோன் மங்கலம் வந்தது ...
அவளை அழைத்து வர தனலட்சுமி தனசேகரன் விமான நிலையத்திற்கு சென்றபோது, ஆதி கேசவ நம்பூதிரி சொன்னதைப் பற்றி அவர்கள் உரையாடியது ...

மாதவி பெரிய வீட்டிற்கு வந்ததும்,
ஜாடை மாடையாக வீட்டில் இருந்த மற்ற மூன்று பெண்கள் சாடியது ....

மாதவி மறு தினம் மாயோன் கோவிலுக்கு சென்ற ,பித்து சித்தரை சந்தித்தது.


பித்து சித்தரைக் கண்டதும் அவள் கரங்கள் தன்னிச்சையாய் வணங்க,

சித்தர் : மழலைகாக வேண்டி நிற்கிறீரா தேவி ....

ஆம் என கண்கள் பனிக்க தலை அசைத்தவள் ,
மனம் உருகி நிற்க,

சித்தர் : கவலைப்பட தேவையில்லை மஹாதேவி...
தங்கள் மானசீக வேண்டுதலை ஈசன் அறிவான்.
ஆனால் அதற்கான கால நேரம் தான் தற்பொழுது இல்லை.


அவள் அதிர்ந்த நோக்க,

சித்தர் : தற்போது தங்களுக்கும் தங்கள் கணவருக்கும் சுற்றமும் காலமும் சரியில்லை.

தங்கள் கணவரை சுற்றி பெரும் மாயைகள் சூழ்ந்துள்ளது .
அவருடைய பிறப்புக் கட்டமும் கர்மாவும் அதற்கு சாதகமாகவே உள்ளது. அவரை அதிலிருந்து காப்பாற்றும் ஒரே சக்தி தாங்கள் தான்.

அவள் புரியாமல் நோக்க
நினைவில் கொள்ளுங்கள் :

கூடிய விரைவில் சூரிய கிரகணம்
வரவுள்ளது.

சூரிய கிரகணத்திற்கு முன்தினம் தீப ஒளித்திருநாள் ... அதற்கு முந்தினம் கரிநாள்.
ஆக அந்த மூன்று தினங்களும் மிகுந்த ஆபத்தானவை.

அத்தினங்களில் கொண்டவனோடு கலவியை தவிர்த்தாக வேண்டும்.

மீறினால் வித்தொன்று முளைக்கும் ...
ஆனால் அது வித்தல்ல வினை ...

ஐந்து திங்கள் மட்டுமே ஆயுளைக் கொண்டிருக்கும் அது, அப்பனின் ஆயுளையும் அள்ளிச் சென்று விடும் ...

அதை கேட்டு அவள் அதிர்ச்சி அடைந்ததோடு அவள் கண்கள் குளம் கட்ட,

உடனே அவள் சிந்தையில்,

கணவன் காதலோடு ஓடோடி வருவான் என்றாலும் , அந்த மூன்று தினங்களை பற்றி எடுத்துரைத்தால் புரிந்து கொள்வான்
என்ற எண்ணம் உதயமாக , உடனே நன்றி செலுத்தி விட்டு அவள் கிளம்ப எத்தனிக்கும் போது ,

" கொண்டவனிடம் தெரிவித்து விட்டால் கர்மாவில் இருந்து தப்பி விடலாம் என்று எண்ணாதீர் மஹாதேவி ...

மன்னவன் மர்மம் அறிய நேர்ந்தால் அவருக்கு மரணம் நிச்சயம் ..." என அவர் முடிக்க, செய்வதறியாத அவள் திகைத்துப் பார்க்க

"நினைவிருக்கட்டும் தேவி, நின் மன்னவனுக்கு துஷ்டர்கள் புறத்தில் இல்லை .... நின் அகத்தில்( வீட்டில்) உள்ளனர் .... சூரிய கிரகணத்தன்று
நின் மணாளனை கொல்ல நாள் குறிக்கப்பட்டுள்ளது ....

கட்டத்தில் இருப்பது தான் திட்டத்தில் நடக்கும் .... ஆனால் திட்டத்தை மாற்ற
விதிகளும் உண்டு .... அவ்விதிகளை கடைப்பிடித்தால் ஏற்படும் விதிவிலக்களால் விதியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் விந்தையை அறியலாம் ... ஆனால் அந்த விதிகளை கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல தேவி ... அதுதான் வாழ்வின் சூட்சமம் ... " என்றவர்

" கடைசியாக ஒன்றை சொல்கிறேன்....
மந்திரம் கால்.... மதி முக்கால் ....
குறிப்பறிந்து நடந்து கொள்ளுங்கள் அரசியே...." என்று உரைத்து முடித்து விட்டு வழக்கம் போல் பார்வையில் படாமல் பறந்து விட்டார்.

ஆதிகேசவ நம்பூரியின் மந்திரம் கால் பங்கு மட்டுமே
உங்களின் மதி முக்கால் பங்கு வீரியம் வாய்ந்தது .... அதனைப் பயன்படுத்தி முறியடிக்க பாருங்கள் ... என அவர் குறிப்பால் உணர்த்தினார்.

ஆனால் கணவனை உயிராய் சுமக்கும் அந்த பேதைக்கு அப்பொழுது அது விளங்கவில்லை .

வீட்டிற்கு வந்து பலமுறை பல வழிகளில் யோசித்துப் பார்த்தாள்.

வினாக்கள் விரிவடைந்து கொண்டே இருந்ததே ஒழிய விடை கிடைப்பதாக இல்லை ...

ஒன்று தன் இல்லம், இரண்டாவது அவன் இல்லம், மூன்றாவது பண்ணை இல்லம் இதைத் தாண்டி அவள் வேறு எங்கும் செல்ல முடியாது தங்கவும் முடியாது.

மூன்று இடமும் தற்போதைய நிலையில் அவனுக்கு சாதகமாகவே உள்ளது.

காதலோடு வருபவனிடம் காரணம் சொல்லாமல் கலவியை தவிர்ப்பது
கடினமான செயல் தான் ...
வேறு வழி இல்லை ...
உடல்நிலை சரியில்லை என்று ஒதுங்கி விட வேண்டும் ... என முடிவு செய்தாள்.

அவனை அவள் நன்கு அறிவாள்.
அவள் உடல் நிலைக்கு கொடுக்கும்
முக்கியத்துவத்தை அவளது மனநிலைக்கு கொடுப்பவன். அவன் தேவைகள் அதிகம் என்றாலும்
அவள் மனம் அறியாமல், இதுவரை அவன் அணுகியதே இல்லை ....
எனவே சித்தர் கூறிய அந்த மூன்று தினங்களையும் அதிக சிரமம் இல்லாமல் கடந்து விடலாம் என்ன முடிவு எடுத்தவளுக்கு தெரியாது
அது ஆகச்சிறந்த கடினம் என.


அதற்கு மேல் கிருஷ்ணா ஷில்லாங்கிலிருந்து மாயோன் மங்கலம் திரும்பியது ....

அவன் மாதவியை அவளது இல்லத்தில் சென்று சந்தித்தது ...

அவள் காதலும் அச்சமமாய் அவனை நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தத்தளித்தது....

சூரிய கிரகணத்தன்று, அவனைக் கொல்ல திட்டம் தீட்டப்பட்டுள்ளது
என சித்தர், கூறியதை சூட்சமமாக புரிந்து கொள்ளாமல், தன் கணவனுக்கு உணவில் விஷம் வைத்து விடுவார்களோ என்றஞ்சி
அவன் தட்டில் அவனுக்கு வைக்கும்
உணவுப் பண்டங்களை எல்லாம்,
அவள் உண்டு ருசி பார்த்தது ....

அன்று இரவு தனலட்சுமி
வசிய மருந்து கலந்த பாலை
கிருஷ்ணாவிடம் குடித்தது ....

அதற்கு மேல் நாயகனும் நாயகி
மன்மதனும் ரதியுமாய்
மாயவலையில் சிக்க, மனம் மயங்கிய நிலையில், கிரகண இரவில் நாயகியின் வயிற்றில்
அவர்களது பிரிவுக்கான வித்தினை
விதைத்து முடித்தான் நாயகன்.


- மாயோனின் மாயங்கள் தொடரும்
 
Back
Top