Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 104

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
681
அத்தியாயம் 104


வழக்கம் போல் மூர்த்தியார், அதனை மூட நம்பிக்கை என்று கூறி,
மனம் மாற வந்தவனை வழி மாற விடாமல் அரசியல் களத்தில் இறக்க முடிவு செய்தார்.

அறைக்கு வந்தவனின் மனதில், ஏகப்பட்ட குழப்பங்கள் .....மூர்த்தியார் அடுக்கிய காரணங்கள் ஒருபுறம் சரி என்றே பட்டாலும், அவனை சுற்றி நடந்தவைகளை சாதாரணமாக கடந்து போக முடியவில்லை ....

உடனே மனையாளிடம் பேசிப் பார்க்க எண்ணி ,

"மது, சதா ஏதோ ஒரு சிந்தனைல பயந்துகிட்டே இருக்க... என்ன பயம்....எதுக்காக நான் அரசியலில் இறங்க கூடாதுன்னு நினைக்கிற...
உன் மனசுல ஏதோ இருக்கு .... ஆனா அதை வெளிய சொல்லாம, நான் அரசியலுக்கே போவக்கூடாதுனு மறைமுகமா கெஞ்சி கேட்கற...
ப்ளீஸ் மது... உன் மனசுல இருக்குறத
வெளிப்படையா சொல்லு ..."
என்றவனை கண்கள் பனிக்க பார்த்தவள்,

" நீங்க கேக்குற கேள்விக்கு எனக்கு பதில் சொல்ல தெரியல ....
ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நீங்க அரசியல்ல இருக்க கூடாது .... அது நமக்கு வேணாம்..."

" அதான் ஏன்னு கேட்கிறேன் மது....
இந்த கால அரசியல்ல அடிதடி வெட்டு குத்து எல்லாம் சகஜம் டி ....
அதுக்கெல்லாம் பயந்தா வேலைக்கு ஆவாது... " என்றவனை பார்த்து மீண்டும் அவள் கண்ணீர் வடிக்க,

" ஒன்னு சொல்லட்டுமா ..... நீ என் கூட இருக்கிற வரைக்கும், என்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது ....
நீதான்டி என்னோட பலமே ...
நீ என்னை விட்டுப் போயிட்டா... என்னால ஒண்ணுமே பண்ண முடியாது ..." என அவன் விழி கலங்கி கூற,
அப்போது அவளது சிந்தனையில் சுருக்கென்று ஒரு யோசனை தோன்றியது.

என்னை விட்டு அவனை விலகி செல்ல சொல்வதை விட, நானே அவனை விட்டு விலகிச் சென்றால்....
என்ற எண்ணம் தோன்ற, அதற்கு செயல் வடிவம் கொடுக்க எண்ணினாள்.

அவனுடன் வாழும் கடைசி நாள்,
என்பதை முடிவு செய்தவள்,
அவன் யாசித்த அன்பினை அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு, அவன் வாழ்க்கையை விட்டே வெளியேற எண்ணி அந்த வீட்டை விட்டு வெளியேறி தன் வீட்டிற்கு சென்று விட்டாள்.

பிறகு அவன் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளுக்கு முன்னதாகவே கிடைப்பது போல் திட்டமிட்டு
விவாகரத்து பத்திரத்தை அனுப்பி வைத்தாள்.

விவாகரத்திற்கான காரணத்தை தேர்வு செய்வதற்குள் அவள் பட்ட பாடு அவள் மட்டுமே அறிவாள்.

அவனுடன் வாழ்ந்த ஆறு மாத கால வாழ்க்கையில் அவளை
தோழியாய், மழலையாய், மனைவியாய், மகாராணியாய் எனப் பலவாறு போற்றி பாதுகாத்தவனை என்ன சொல்லி விளக்கி வைப்பது ...
என ஏகத்துக்கும் சிந்தித்தவள், குழந்தை பிறப்பிற்காக தகவல்களை திரட்டும் பொழுது இணையத்தில்
எங்கோ எப்போதோ படித்த வார்த்தை அவள் மனக்கண் முன் வந்து போக,
அதையே பயன்படுத்த முடிவு செய்தாள்.

விவாகரத்து பத்திரத்தை அனுப்புவதற்கு முன்பாக கடைசி முறையாய் கர்ம வினையில் இருந்து தப்பிக்க வழி உண்டா ..... என்பதை ஈசனிடம் மன்றாடி அவள் கேட்க,

" தேவி, ... நின் வேந்தனை இம்மண்ணில் பலியிடும் சூழ்நிலை உள்ளது ....
நின் கொற்றவன்
கர்ம காலத்தில் இங்கிருந்தால் காலன் அண்டி விடுவான் ....
காலநிலை மாறும் வரை கரை கடந்திருப்பது தான் நின் காவலனுக்கு உகந்தது ...
ஆதலால்
நின் கோமகன் புலம் பெயர வழிவகை செய்யுங்கள் ..."

" வேற வழியே இல்லையா ....
எங்க பிரிவு ஒன்னு தான் இதற்கு தீர்வா .... ..."

என ஏகப்பட்ட மனகலேசத்துடன்,
அவள் கதறி அழ,

" தேவி .... தங்களின் மாறா பிரேமையும், நின் கொற்றவனின் தீரா காதலும் தங்கள் இருவரையும் நிச்சயம் சேர்த்து வைக்கும் .... கர்ம வினையால் காலதாமதமாக நடக்கும் அவ்வளவே..." என முடித்துக் கொண்டது.

உடனே தனக்குள் உதித்த அந்த வார்த்தையையே விவாகரத்துக்கு காரணமாக குறிப்பிட்டாள்.

அதை பயன்படுத்தினால் தான்,
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் .... போல்
ஆதிகேசவ நம்பூதிரியின் வாக்கை பொய்யாக்கி விடலாம் .... தன் கணவனிடம் இருந்தும்
துரிதமாக விவாகரத்து பெற்றுவிடலாம் ...என்றெண்ணி
வழக்கறிஞரை சந்தித்து விவாகரத்து பத்திரத்தை வேண்டுமென்றே கட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தாள்.

அது கிருபாவின் தீவிர விசுவாசியான செந்திலிடம் கிடைக்க, அவன் அதனைக் காட்டுத் தீ போல் பரப்பத் தொடங்கினான் ....

செய்தி அறிந்து துடித்துப் போன கிருஷ்ணா, அவளை சந்திக்க அவள் வீட்டிற்கு படை எடுத்தான்.

விவாகரத்திற்கு முன்பான அவர்களது கடைசி சந்திப்பு நடைபெற்றது ...

ஏதேதோ சொல்லி அவனது மனதை உடைத்தாள்.
அவனுடன் வாழ்ந்த வாழ்க்கை நடிப்பு, நாடகம் என்றாள்....
அவனைப் பழி தீர்ப்பதற்காகவே மணந்து கொண்டதாக இட்டுக்கட்டினாள் ....

இவை அனைத்தையும்
ரணமாய் கொதிக்கும் இதயத்தோடு,
துக்கம் தொண்டையை அடைக்க, கண்கலங்க, மனதிற்குள் தன்னவன் காக்கப்பட வேண்டும் என்பதை மந்திரம் போல் உரு ஏற்றிக் கொண்டே ,
வெளியில் அவர்களது உறவை பிரிக்க நாடகமாடிக் கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்தில் கிருஷ்ணா,

" மது... இப்ப எனக்கு புரிஞ்சிருச்சு.... நான் அரசியல்ல இறங்க கூடாதுனு தானே இப்படி எல்லாம் பேசற... செய்யற ... சரி டி எனக்கு அரசியல் வேணாம் ...
நீயும் நானும் இந்த ஊரை விட்டே பழையபடி ஷில்லாங் போயிடலாம் ....
நீ என்ன சொன்னாலும் கேட்கறேன் மது... என்னோட வீட்டுக்கு வா...மது..."

என்று அவன் எதிர்பாராது எய்த அஸ்திரம்
அவளது அடிப்படையை ஆட்டம் காண செய்ய, ஒரு கணம் சுதாரித்தவள்

" வரமாட்டேன் ... இந்த முடிவை
நீ முன்னாடியே எடுத்து இருந்தா கூட,
நான் இப்படித்தான் செஞ்சு இருப்பேன் .... அதனால நீ உன் வழியை பார்த்துகிட்டு போ ..." என்றாள் அளவுக்கு அதிகமான உதாசீனத்தோடு.

அவனுடன் இருந்தால், அந்த சிசுவிற்கு அழிவு கிடையாது ....
ஆனால் அவனுக்கு அழிவு நிச்சயம் ...
அவன் விலகிச் சென்றால் அடுத்த கணமே, அந்த சிசு தன்னிச்சையாய் கரைந்து விடும் ...
என்பதால், அவனை விளக்க நினைத்து அவ்வாறு முடித்தாள் .

அதன் பின் அவன் வழக்கறிஞர் அம்பிகாவை வைத்து விவாகரத்து வழக்கை பதிவு செய்தான்.

ஷில்லாங்கிலிருந்து பணி மாற்றம் வாங்கிக் கொண்டான் ...

திருமணமாகி 7 மாத வாழ்க்கையை வாழ்ந்து விட்டதாலும், வழக்கு சம்பந்தமான பிரச்சனைகள் ஏதுமில்லாததாலும்
ஐந்து மாதத்திற்குள்ளாகவே அவர்களுக்கு விவாகரத்து கிட்டியது.

விவாகரத்து கிட்டிய சில தினங்களிலேயே மூர்த்தியார்
சிவலோகப் பதவி அடைய, அவரைத் தொடர்ந்து அவரது பாரியாளும்
இறைவனடி சேர்ந்தார்.

பெற்ற தாய் தந்தையை விட அவளை அதிகமாக பேணிக்காத்தது
அவளது பாட்டனும் பாட்டியும் தான் ....

அவர்களது இறப்பிற்கு கூட அவளால் வர முடியாத நிலை....

காரணம் 5 மாத சிசுவை அவள் சுமந்து கொண்டிருக்க,
மரணம் நிகழ்ந்த வீட்டிற்கு வர நேர்ந்தால் ,
அவளை அகமும் புறமுமாய் அணு அணுவாக அறிந்து வைத்திருப்பவன்
அவளைப் பார்த்த நொடியே கண்டு கொண்டு விடுவான் ....

பிறகு இத்துணை காலம் போராடியது அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராய் ஆகிவிடும் ....

அவள் வீட்டிலேயே தன் அறையை விட்டு வெளியே வராமல் பிற கண்களில் படாமல் கர்ப்பத்தை மறைத்துக் கொண்டிருக்கிறாள் ...
என்கின்ற நிலையில் சபை அறிய எப்படி வருவாள் ....

சாந்தி கேட்டதற்கு கூட
மூர்த்தியார் மற்றும் விசாலத்தின் மீது கோபம் இருப்பது போல் அவள் காட்டிக் கொள்ள, அதைக் கண்டு மகிழ்ந்த சாந்தி, மரணம் நிகழ்ந்த வீட்டில் கிருஷ்ணாவின் காதுகளில் படும் அளவிற்கு பலர் அறிய அதனை கூறி உள்ளுக்குள் மகிழ்ந்து போனாள்.

அனைத்தும் முடிந்தது ...

விசாலத்திற்கு 16 ஆம் காரியத்தை முடித்துவிட்டு ,

இனிமேல் தனக்கும் இந்த ஊருக்கும் சம்பந்தம் இல்லை .....
இனிமேல் இங்கு வரப்போவதும் இல்லை ....

மனையாளோடு உறவு முடிந்தது போல் இந்த மண்ணோடும் உறவு முடிந்து விட்டது என எண்ணிக்கொண்டு
அவன் மனம் நொந்துபடி கிளம்பி
ஊர் எல்லையில் இருக்கும் கன்னியம்மனை கடக்கையில்,
5 மாதங்கள் ஆகியும் உரு பெறாத
அந்த சிசு, சித்தர் சொன்னது போல்
குருதி பிண்டமாய் கரைந்து ஓட,
துடித்து தேங்கி விட்டாள் பாவை.

அரை தினத்திலேயே அவளது அடி வயிறு காலியாகி போக,
வாழ விருப்பம் இல்லாமல் முடிவைத் தேடிக் கொள்ள நினைக்கும் போது , பித்து சித்தரின் குரல் அவளுள் ஒலிக்கத் தொடங்கியது .


" தேவி, முன்பே செப்பியது போல் ,
இது தற்காலிக பிரிவு தான் ....
நின் கொற்றவனின் இந்த யாத்திரை கூட
அவனது கர்ம வினையை கழிக்கத்தான் ....

நின் அரசனுக்கு தார தோஷம் உண்டு தேவி ....

ஓர் மழலை , உயிர் வாழ நின் மாயவனின் வரவை எதிர்நோக்கி அவன் போக்கிடத்தில் காத்திருக்கிறது ...

பிறிதோர் ஆன்மா இம் மேதினியில் ஜனனம் கொள்ள ஈன்றவனுக்காக காத்திருக்கிறது ...

அந்த ஆன்மா வேறு யாருமல்ல தங்களை விட்டுச் சென்ற தங்கள் சிசு தான் ....

தங்களின் சோதரியின் மழலையாய் ஜனிக்க காத்திருக்கிறது ....

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் நிகழும் அற்புதம் பிரம்ம பௌர்ணமி ...
அது அடுத்த ஐந்து ஆண்டுகளில் வரவிருக்கிறது .... அப்போது
நின் மன்னவன், இம்மண்ணை நோக்கி வருவான் ....
தாங்கள் நின் மன்னவனோடு வாழும் சந்தர்ப்பமும் அமையும் ..."

" ஏன் என் குழந்தைக்கு கர்ப்பத்துலயே கலையக்கூடிய இந்த நிலைமை ...." என அவள் கண்கலங்க,

" கொற்றவையே.... அந்த சிசுவின் ஆன்மா பரிசுத்தமானது ஆனால் அது ஜனித்த நேரம் பிழையானதால் ,
அற்ப ஆயுளுக்கு உள்ளாகிப் போனது ..
தேன் மதுர பலாசுளை மேல் தேனை ஊற்றாமல் விஷத்தை தடவினால் ....
தடவியவன் மீது பிழையே ஒழிய பலாசுளை மீது அல்ல .... அது போல் தான் ...." என அந்த குரல் பேச்சை முடித்துக் கொள்ள,

தன் கணவனுக்கு வேறொரு தாரம் உண்டு,
அந்த தாரத்தின் மூலம் ஒரு மழலை உண்டு என்பதை மட்டும் சித்தர் வாக்கிலிருந்து புரிந்து கொண்டாள் ...



அனைத்து காட்சிகளையும் திரைப்படம் போல் நாயகனும் நாயகியும் பார்த்து முடிக்க, குடத்தில் இட்ட விளக்காய் இருந்தவைகள், குன்றிலிட்ட விளக்காய் விளங்கிப் போனது.

அழுது சிவந்த முகத்தோடு அருகில் காட்சி அளித்த மனையாளை காதல் பொங்க பார்த்தவன்,

" என்னைக் காக்க என்னையே இழந்திருக்க.... பாப்பா ...
இதெல்லாம் தெரிஞ்சுக்காம உன்னை எவ்ளோ கஷ்டப்படுத்திட்டேன்....
குழந்தையை பத்தி பேசும் போது ரொம்ப அசிங்கமா பேசிட்டேன்...
சாரி கேட்க கூட எனக்கு தகுதி இல்லடி ..."
என்றவன்

" இப்ப இல்ல புரியுது ..... உன்னை விட்டுப் போன நம்ம குழந்தை, உன்னை மாதிரியே மயூக்குட்டியா பொறந்திருக்குனு .... அது தெரிஞ்சுக்கத்தான், டே கேர்ல குழந்தை பின்னாடியே சுத்தனயா ..."

அவள் ஆம் என்பது போல் தலையசைக்க, இருவரும் மௌனமாக பார்வையால் ஸ்பரிசித்துக் கொண்டிருந்த நேரத்தில்,

" வேந்தே, பௌர்ணமி முடிவதற்குள் நீர் ஆற்ற வேண்டிய கடமை காத்திருக்கிறது ... நீரும் நீன்
தேவியாரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆத்மார்த்த காதலர்கள் ....
உங்களது காதல் தூய்மையானதால், இத்துணை ஜென்மங்கள் கடந்தும்
நிலைத்து நிற்கிறது ...."

" எங்க ரெண்டு பேரோட காதலுக்கு நடுவுல அப்ப ஏன் மித்ரா வந்தா ..."
என்றவளின் கேள்வி அவனுக்கு குழந்தைத்தனமாய் தெரிய, உடன் சிரிப்பும் எழ,

" வாசுதேவ கிருஷ்ணனை காதலித்த கோபியர்கள் அதிகம் .... ஆனால் அந்த கிருஷ்ணனே காதலித்த ஒரே கோதை
அவன் ராதை தான் ....

புராண காலத்து மீராக்கள் போல், இந்த மித்ராக்கள் யுகம் யுகமாக கண்ணனின் பால் இருக்கும் அன்பால் ஒரு தலை காதலோடு பிறக்கிறார்கள் ஒரு தலை காதலோடே மடிக்கிறார்கள் ...."

" நாங்க ரெண்டு பேரும் ஏன் பிறப்பு எடுத்துக்கிட்டே இருக்கோம் ... இவ்வளவு ஜென்மங்களாகியும் எங்க ரெண்டு பேருக்கும் ஏன் மோட்சம் கிடைக்கல ...." என்றாள் மாதவி.

" தேவி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நின் கொற்றவன் செய்து கொண்ட தற்கொலை தான்,
பிறவி சுழற்சி ஏற்பட்டுள்ளது ....
துர் மரணத்திற்கும், தற்கொலைக்கும் பிறப்பு சுழற்சி இருந்து கொண்டே இருக்கும் .....
அந்தந்த பிறவிக்கான கடன்களை ஒத்தி வைக்காமல் நேர்மையான முறையில் செய்து விட்டு, ஈசன் போட்ட
ஆயுள் வரை பூவுலகில் கழித்து விட்டால், பிறகு பிறவி சுழற்சி ஏது ...
கர்மாவை கழிக்க தானே, பிறப்பெடுப்பதே..."

அவர்கள் இருவரும் உறைந்து நிற்க,

" அரசே, தங்கள் சற்று முன் தெரிந்து கொண்ட பிரவேச மந்திரத்தை பயன்படுத்தும் தருணம் வந்துவிட்டது ...
மாயோன் கோவிலுக்கு சென்று மூலவரை வழிபட்டு உத்தரவு கேளுங்கள், அந்த சிலை தானாக நகர்ந்து சுரங்கத்திற்கான வழியை காட்டும், அதில் தாங்களும் தங்கள் பிராட்டியாரும் பயணித்து ரகசிய அறையை அடையுங்கள்.

அங்கு தாங்கள் அறிந்து கொண்டிருக்கும் பிரவேச மந்திரத்தை சொல்லுங்கள் ...
ரகசிய அறையின் மாயக்கதவுகள் தானாக திறக்கும் ....

அங்கு ஏகப்பட்டஉயிர் காக்கும் மூலிகைகள் ....
மனித வாசம் படாமல் தூய்மையாக இருக்கும் ....

பிறகு பனிப்பாறை, நீர்வீழ்ச்சி , செம்மண் நிலம் என
அங்கிருக்கும் சூழல்களை கடந்து சென்றால்,
மூலவ மூர்த்தியாய் பஞ்சமுக நாகத்தின் பாதுகாப்பில் இருக்கும் மரகத லிங்கங்கள், நவபாஷாண லிங்கங்கள் காணலாம் ....

ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட நூறு கிலோ எடை கொண்டது என்றாலும்
அதனைத் தாங்கள் சுமக்க நினைத்து
மனதில் ஈசனை வேண்டி தொட்டாலே போதும் ....
உங்களது கை விரல்களின் அளவிற்கு
அதன் அளவு குறைந்து விடும் ...
பிறகு அதனை தூக்கி வந்து
மூலவருக்கு அருகில் பிரதிஷ்டை செய்யலாம் ...." என முடித்ததும்

" எனக்கு கொஞ்சம் சிவ நேத்திர மூலிகைகள் வேணும் .... அங்க போகும்
போது அத பறிச்சுக்க முடியுமா ..."

" எதுக்கு ....." என்றான் நாயகியைப் பார்த்து நாயகன் புரியாமல் .

" டாக்டரோட வைஃப் மாதவிக்கு ஆக்சிடென்ட் ஆகி கிட்டத்தட்ட ஆறு மாசமா கோமால இருக்காங்க ....
பார்க்காத டாக்டர் கிடையாது ....
ஆனா பலன் ஒன்னும் இல்ல ....
அப்பதான் மாதவியோட அப்பா ராஜகோபால் அங்கிள் சோழி பிரசன்னம் பாக்க போயிருந்தாரு...கூட நானும் போயிருந்தேன் ....
என் முகத்தைப் பார்த்த உடனே
அந்த ஆச்சாரியாவுக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு ...
அவர் தான் பிரம்ம பௌர்ணமியை அன்னைக்கு சிவ நேத்திர மூலிகையை
பறிச்சுக்கிட்டு வந்து , சூரிய ஒளி நிலத்துல படறதுக்கு முன்னாடி
கோமால இருக்கிற டாக்டரோட வைஃப் மாதவிக்கு கொடுத்தா, குணமாகும்னு சொல்லி இருக்காரு ...." என அவள் முடிக்க

" அரசியாரே, கோவிலிலே தங்களுடையது தானே ...
நினைத்த நேரத்தில் உயிர்காக்கும் மூலிகைகளை பறித்துச் சென்று உதவலாம் ...
ஆனால் ஒன்று இறப்பை தடுத்து நிறுத்தும் சஞ்சீவினி மூலிகையை மட்டும் பறிக்கக் கூடாது ...."
என அந்த மலையரசி கூறி முடித்தது.

--- மாயோனின் மாயங்கள் தொடரும்
 
Back
Top