Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

எபிலாக்-2

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
640
எபிலாக் - 2

நாட்கள் அழகாக நகர்ந்தன ...

மழலையின் ஒவ்வொரு தின வளர்ச்சியையும் மகள் அலைபேசியின் வாயிலாக அனுதினமும் பகிர, தாமரை திவாகரன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.

இந்நிலையில் இந்திராவின் மகள் சந்தியா தன் கணவனோடும் குழந்தையோடும் தன் தந்தையான கர்னலின் இருதய அறுவை சிகிச்சைக்காக ஊருக்கு வந்திருந்தாள்.

தாய் இந்திராவுக்கு ஆதரவாகவும் , தந்தையின் அறுவை சிகிச்சைக்கு உறுதுணையாகவும் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியிருந்து ஒத்தாசை செய்துவிட்டு, தந்தை வீடு திரும்பியதும், ஒரு மாதம் அவருடன் இனிமையாக கழித்து விட்டு , இடையில் மேஜரையும் திவாகரனையும்
சந்தித்து மனமார நன்றி தெரிவித்துவிட்டே
அமெரிக்காவுக்கு பயணப்பட்டிருந்தாள்.

பிறகு வந்த நாட்கள் ஆமை போல் நகர்ந்தாலும் வெகு அழகாக நகர,
மகளின் சீமந்தத்திற்காக திவாகரனும் தாமரையும் அமெரிக்காவிற்கு பயணப்பட்டனர்.

அங்கு உற்றார் உறவினர்கள் புடை சூழ, ஜோதிக்கு சீமந்தம் வெகு விமர்சையாக நடந்தேறியது ....

ஏழாம் மாதத்திலேயே சீமந்தம் நடந்தேறியதால், மேலும் இரண்டு மாதங்கள் பிரசவத்திற்காக தங்கியிருந்து மகளை கண் போல் பார்த்துக் கொண்டனர் திவாகரன் தம்பதியர்.

பிரசவ தினமும் வந்தது ....

மருத்துவமனையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேர போராட்டத்தில், ஆண் குழந்தையை சுகப்பிரசவத்தில் ஈன்றெடுத்தாள் ஜோதி .

தன் மகள் பிறந்த போது, செவிலியரிடமிருந்து அவளைக் கைகளில் வாங்கிய தருணம் தான், திவாகரனின் கண் முன்னே விரிய, ஆனந்தத்தில் கண் கலங்கிப் போனான்.

பேரனை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த தினத்திலிருந்து, அவனை இம்மி அளவு பிரியாமல் , பொத்தி பொத்தி பார்த்துக்கொண்டாள் தாமரை.

சூர்யா மற்றும் ஜோதியின் சரிவிகிதக் கலவையாக பிறந்திருந்தான் அவர்களின் நந்தன்.

பெயர் சூட்டு விழாவை சிறப்பாக நடத்தி, சூரியனைக் குறிக்கும் பெயர்களான திவாகரன் , சூர்யா , ஜோதி என்ற வரிசையில்
அனைவரும் ஒரு மனதாய் தேர்ந்தெடுத்திருந்த ஆதித்யன் என்ற பெயரை குழந்தைக்கு சூட்டி மகிழ்ந்தான் திவாகரன்.

குழந்தைக்கு மூன்று மாதங்கள் ஆனதும்,
அருகில் இருந்த சுற்றுலா தளங்களுக்கு தன் தாய் தந்தை கணவனோடு உற்சாகமாய் பயணித்து நேரம் செலவழித்தாள் ஜோதி.

ஓரிரு சமயங்களில் தாய் தந்தைக்கும் தனிமையை கொடுத்து, சுற்றுலா தளங்களுக்கு தனியே அனுப்பியும் வைத்தாள்.

இப்படியாக மேலும் இரண்டு மாதங்கள் அழகாக கழிய, பேரனை விட்டு பிரிய மனம் இல்லாமல் அழகிய நினைவுகளை சுமந்தபடி தாமரையும் திவாகரனும் ஊர் திரும்பினர்.

தன் பேரனுடனான புகைப்படங்களை மேஜர் தம்பதியர் மற்றும் இந்திரா தம்பதியருக்கு அவர்கள் பகிர்ந்து மகிழ,

" இவ்ளோ ஹாண்ட்சமான தாத்தாவும்
இவ்ளோ பாந்தமான பாட்டியும் இதுவரைக்கும் யாருக்குமே அமைஞ்சதில்ல... நீங்க ரெண்டு பேரும் ஆதித்யாவுக்கு தாத்தா பாட்டி மாதிரியே தெரியல ..." என இந்திரா மனமார பாராட்ட,

"ஆமா திவா.... மாமி சொல்றது கரெக்ட் தான் .... ஆதித்யா உங்களோட குழந்தை மாறி இருக்கான் .... உன்னோட பேரன்னு சத்தியம் பண்ணாலும் யாரும் நம்ப மாட்டாங்க ..."

இப்படி மேஜரும் புகழாரம் சூட்ட, ஒருவித கூச்சத்துடன் புன்னகைத்தனர் திவாகரன் தம்பதியர்.

தொடர்ந்து வந்த நாட்கள் வழக்கம் போல் கழிந்தாலும் கடந்த
ஆறு மாத காலம் அமெரிக்காவிற்கு சென்று வந்ததால், திவாகரனின் பணிச்சுமை , எப்பொழுதையும் விட இரண்டு மடங்கு கூடி போய் இருக்க, நேரம் காலம் தெரியாமல் பம்பரமாய் சுழல ஆரம்பித்தான்.

வேலை நாட்களில் காலை 7 மணிக்கு கிளம்பினால், இரவு 11 மணியை கடந்தே அவன் வீடு திரும்புவதால், கணவன் மனைவிக்கிடையே நின்று பேசக்கூட நேரமில்லாமல் போயிருக்க, ஒரு ஞாயிற்றுக்கிழமை, மணி எட்டை கடந்தும் படுக்கையை விட்டு எழுந்து கொள்ள மனமில்லாமல் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கி இருந்தான் திவாகரன்.

அப்போது அருகில் உறங்கிக் கொண்டிருந்த அவன் மனையாள் மெல்ல நகர்ந்து வந்து,
அவனது தோளின் மீது தலை வைத்து அவனை அணைத்துக் கொள்ள, அதில் லேசாக சுயம் உணர்ந்தவன்,

" என்ன தாமரை .... ஏதாவது வேலை இருக்கா ... கொஞ்ச நேரம் தூங்கலாமே ..."
என்றபடி அவளை மேலும் தன்னோடு புதைத்துக் கொண்டு அவன் உறக்கத்தை தொடர , அவளிடமிருந்து பதில் வரவில்லை என்றதும் முற்றிலுமாக கண் விழித்தவன் ,

" என்னடி உன் உடம்பு ஒரு மாதிரி சூடா இருக்கு ... இவ்ளோ நேரம் நீ தூங்க மாட்டியே ... என்ன பண்ணுது ..." என்றான் அவசரமாய்.

" என்னமோ உடம்பே ஒரு மாதிரி இருக்கு ... எழுந்துக்கவே முடியல ... தலை சுத்துற மாதிரி இருக்கு .... கொஞ்சம் டீ போட்டு குடுங்களேன் ..." என்றவள் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு மேலும் ஒன்ற,

" சரி , போட்டு தரேன் ... ஆனா அன்னைக்கு மாதிரி திட்டக்கூடாது ...."

" ரெண்டு அண்டா, மூணு குண்டான வெச்ச எல்லாம் போடாதீங்க ... டீ மேக்கர்ல போடுங்க ... இல்லன்னா சாதாரண பாத்திரத்துல போடுங்க..." என சொல்லிவிட்டு அவள் மேலும் அவனோடு ஒன்றிக்கொள்ள,

" இப்படி கட்டி கிட்டா எப்படி டி நகர்றது..." என்றவன் மனையாளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு தன் மார்புச் சூட்டில் புதைத்துக் கொண்டான்.

இப்படியே மணித்துளிகள் பனிக்கூழாய் கரைய , கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு பிறகு,

" நீ ரெஸ்ட் எடு ... நான் பிரஷ் ஆயிட்டு, டீ போட்டுக் கொண்டாறேன்..." என அவனாகவே எழுந்து செல்ல , சற்று நேரம் அவள் கண்ணயர்ந்து விட்டு பிறகு புத்துணர்வு பெறுவதற்காக குளியலறையை நாடினாள் நாயகி.

" ம்ம்ம்... ரொம்ப நல்லா டீ போட்டு இருக்கீங்க .... இனிமே நீங்களே டீ போட்டு குடுங்களேன் ...."

" நீ உஷார் டி ... டீ போடற வேலையை என் தலையில நைசா கட்ட பாக்கறியா..."
அவன் மென் புன்னகையோடு தேநீர் பருகிக் கொண்டே சொல்ல, அவளோ கையில் இருந்த தேநீரை திடீரென்று உணவு மேஜையின் மீது வைத்து விட்டு அப்படியே தன் தலையை இரு கரங்களால் தாங்கி பற்றிய படி குனிந்து கொள்ள, பதறியவன்

" என்ன பண்ணுது தாமரை .... " என்றான் தவிப்பாய்.

" தல சுத்துதுங்க ...."

"லோ பிபி யா இருக்கும் .... வா டாக்டரை போய் பார்த்துட்டு வந்துடலாம் ..."
என துரிதமாக செயல்பட்டு அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றான்.

மருத்துவ பரிசோதனையில் அவள் மாசமாக இருப்பது தெரிய வர, அதுவும் நான்கு மாத கர்ப்பம் என்று தெரிய வந்ததும் இருவரும் மகிழ்ச்சியில் திக்கு முக்கு ஆடிப் போயினர்.

"நிஜமாவே நான் மாசமா இருக்கேனா டாக்டர் ... இந்த வயசுல குழந்தை உண்டாகுமா ... ஏன் கேட்கறன்னா , கடந்த ரெண்டு வருஷமா பீரியட்ஸ் ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை இல்ல மூணு மாசத்துக்கு ஒரு தடவை தான் வருது ..."

அவள் தன் மகிழ்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மேன் மேலும் கேள்விகளை அடக்க,

" ஒய் நாட் .... உங்களுக்கு 41 வயசு தானே ஆகுது .... இந்த வயசுல பெரி மெனோபாஸ்னு நெனச்சு உங்கள மாதிரி எத்தனையோ பேர் ஏமாந்திருக்காங்க ... ஹெல்தி பாடி அண்ட் மைண்ட் இருந்தா 50 வயசு வரைக்கும் கூட நேச்சுரலாவே ப்ரெக்னன்ட் ஆக முடியும் ...
என்ன ஒன்னு, 20% பேருக்குத்தான் அப்படி ஒரு ஆப்பர்சுனிட்டி அமையுது ..."
என்றவர் அவர்களது குடும்பப் பின்னணியை கேட்டு அறிந்து கொண்டதும், ஆச்சரியத்தில் கண்களை விரித்து ,

" ஒரு குழந்தைக்கும் ரெண்டாவது குழந்தைக்கும் இடைவெளி வேணும்னு சொல்லுவாங்க ... ஆனா ஒரு பேரன் பொறந்ததுக்கு அப்புறம், நீங்க கன்சீவ் ஆகி இருக்கிறத பார்த்தா ரொம்ப பெரிய இடைவெளி விட்டுட்டீங்க போல இருக்கே ..."

என குறும்பாக சிரித்த மருத்துவர்,

" சாரி .... ஜோக்ஸ் அப்பார்ட் ... நான் உங்க ரெண்டு பேருக்கும் இது முதல் குழந்தைனு நினைச்சேன்... இப்படி ஒரு ஸ்டோரி இருக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ..... இந்த குழந்தை உங்களுக்கு வேணும் தானே...." என்றார் பார்வையை இருவர் மீதும் ஒரு சேரப் பதித்து.

" ஆமா டாக்டர் .... நிச்சயமா வேணும் ..."
தாமரை ஆர்வமாக சொல்ல,

" அப்ப நான் குடுக்குற மெடிசன்ஸ் அண்ட் டயட்ட ஃபாலோ பண்ணுங்க ... எவ்ரி மந்த் செக் அப்க்கு வந்துடுங்க .... பேபியோட குரோத் ரொம்ப நல்லா இருக்கு ... வொரி பட வேண்டிய அவசியம் இல்ல..."

என மருத்துவர் முடித்ததும்,

" எந்த காம்ப்ளிகேஷனும் இல்லையே டாக்டர் ..." திவாகரன் லேசான அச்சத்தோடு வினவ,

" இருந்தா நிச்சயமா சொல்லுவேன் ... அப்படி எதுவும் இல்ல... கவலைப்படாதீங்க ... இருந்தாலும் ஏஜ் அதிகமா இருக்கிறதால டபள் கேர் எடுத்துக்கிட்டா நல்லது..." என மருத்துவர் முடிக்க, மிகுந்த மகிழ்ச்சியோடு மனையாளின் கரம் பற்றிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்து

" தாமரை, ஏதாவது சாப்பிடறியா ...." என்றபடி அவள் முகம் பார்த்தவன் , அவளது விழிகளில் தேங்கியிருந்த கண்ணீரைப் கண்டு அதிர்ந்து ,

" என்ன ஆச்சு டி ... ஏன் அழுவுற ...." என்றான் லேசான பதற்றத்தோடு.


" வசி ....." என்று அழைப்பை தொடங்கியவளால் மேலும் பேச முடியாமல் போக, கண்களில் கண்ணீர் அருவியாக கொட்ட, அப்படியே அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

" வசி ..." என்று
எப்பொழுதும் அழைக்க மாட்டாள் எப்பொழுதாவது அழைப்பாள் ...

அதுவும் அவர்களுக்கே உரிதான தனிமையில் தான் அந்தப் பிரத்தியேக வார்த்தையை பயன்படுத்துவாள் ...

அப்படிப்பட்டவளின் அந்த அழைப்பும்
அழுகையையும் கண்டு கலவையான உணர்வுகளில் சிக்கித் தவிக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு அவன் அமைதி காக்க, ஓரிரு கணத்திற்கு பிறகு,

" இப்படி ஒரு சந்தோஷம் இந்த ஜென்மத்துல கிடைக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல .... உங்களை பழி வாங்க நினைச்சு, அப்படி ஒரு அபத்தத்தை செஞ்சிட்டேனேனு நான் உள்ளுக்குள்ள மருகாத நாளே கிடையாது ... ஆனா கடவுள் என்னை கைவிடல ... " என லேசான விம்மலோடு சொன்னவள்,

" அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, கொஞ்சம் பிரச்சனை வந்ததால டாக்டர் காப்பர்-டிய எடுத்துட்டாங்க ... அதுக்கப்புறம் எந்த பிரச்சனையும் வராததால நான் அதை பத்தி மறந்தே போயிட்டேன் .... இப்ப நாம சேர்ந்து ஒரு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சா, இனிமே மாசமாக சான்ஸ் இல்லனு தான் நினைச்சுகிட்டு இருந்தேன் ...
ஆனா இப்ப இப்படி ஒரு நல்ல செய்தி வரும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல .... இத்தனை நாளா மனசுக்குள்ள எங்கேயோ உறுத்திக்கிட்டு இருந்த குற்ற உணர்வு இப்ப மொத்தமா போயிடுச்சிங்க ..." என மனநிறைவோடு முடிக்க, மென் புன்னகை பூத்த படி மனைவியின் தலைகோதி மார்போடு அணைத்துக் கொண்டான்.

அவர்களது மறு இணைவிற்குப் பிறகு, மனதின் ஒரு மூலையில் மனையாள் மீண்டும் கர்ப்பம் தரிக்க மாட்டாளா .... என்ற ஏக்கம் , அவனுள் இல்லாத நாட்களே கிடையாது ....

அதனை வாய்விட்டு கேட்க நினைத்து, தொண்டை வரை கொண்டு வந்து விழுங்கிய நாட்களும் உண்டு ...

அவனது மனையாட்டி அவனை முழுமையாக மன்னித்திருந்தால் , மழலையை பற்றி மீண்டும் மனம் திறப்பாள் என்று எண்ணி அவன் காத்துக் கிடக்க, அவனது கண்ணாட்டியோ குற்ற உணர்வில் சிக்கி தவித்துக் கொண்டிருக்க, ஆனால் கடவுள் அவனையும் மன்னித்ததற்கு சாட்சியாக அவன் இல்லாளுக்கு தாய்மையை கொடுக்க,
ஆனந்தத்தில் கண் கலங்கி போனான்.

பிறகு மருத்துவமனை கேண்டீன்ல உண்டு முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் தான்,
உணர்வு ரீதியான பேச்சுக்கள் மறைந்து, மெல்ல நிதர்சனத்தை எதிர்கொள்ள நினைக்கும் போது இருவருக்குமே வெட்கமாகத்தான் இருந்தது ...

மகளிடம், மருமகனிடம் , குறிப்பாக வெளி உலகத்திடம் எப்படி சொல்லப் போகிறோம் என்ற கேள்வி தாமரையை வெகுவாக குடைய,

" எனக்கு வெக்க வெக்கமா இருக்குங்க ..." என்றாள் தாமரை புன்னகைத்துக் கொண்டே நாணி கோணி.

" அடியேய் ... இது ஹாப்பியா இருக்க வேண்டிய நேரம் .... இதுக்கு போய் எதுக்கு வெக்கப்படற ... நாளைக்கே இந்த நியூஸ எல்லாருக்கும் சொல்லிடறேன் பாரு ..."

என குதூகலமாய் சொன்னவன் முதலில் மகளை அழைத்து விஷயத்தை பகிர்ந்தான்.

" வாரே வா ..." என கூக்குரலிட்டு உற்சாகமாகி போன ஜோதி தாய் தந்தையர் இருவருக்கும் வாழ்த்துக்களை வகைத்தொகை இல்லாமல் வாரி வழங்க,
சூர்யாவும் மனம் மகிழ்ந்து,
" கங்கிராஜுலேஷன்ஸ் மாமா ..." என ஆரவாரிக்க, செய்தி அறிந்த காமாட்சி, நாகேந்திரன் , அகல்யா உட்பட அனைவருமே மனம் நிறைந்து ஆசி கூறியதோடு தாமரையை இணைப்பில் எடுத்து வாழ்த்து கூறி மகிழ்ந்தனர்.

குடும்ப உறுப்பினர்களுக்கு பிறகு, அவன் மேஜரிடம் விஷயத்தை லேசான கூச்சத்தோடு பகிர, உற்ற நண்பனைப் போல் வாழ்த்து தெரிவித்தவர், பிறகு போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு அவனை கேலி கிண்டலால் துளைத்து எடுத்துவிட்டு
ஒரு கட்டத்தில்,

"சும்மா கலாய்ச்சேன் திவா ..... உண்மைலயே ரொம்ப சந்தோஷமா இருக்கு ..... நீயும் செல்வியும் பட்ட கஷ்டத்துக்கு இது வெகுமதினு தான் சொல்லணும் ... இத பத்தி நீயோ செல்வியோ வெட்கப்பட வேண்டிய அவசியமே இல்ல ...

இப்ப எல்லாம் பெரும்பாலானவங்க 40 வயசுல தான் கல்யாணமே பண்ணிக்கிறாங்க .... அதனால இந்த வயசுல குழந்தை பெத்துகிறதெல்லாம் பெரிய விஷயமே இல்ல ...

நீ உன் குழந்தையோட எதிர்காலத்துக்காக சம்பாதிக்க போற... செல்வி நல்லபடியா குழந்தையை பெத்து கொடுக்கப் போவது ... அதை நீங்க ரெண்டு பேரும் கண்ணும் கருத்துமா வளக்க போறீங்க ... இதுல மத்தவங்க செய்யறதுக்கோ சொல்றதுக்கோ ஒண்ணுமே இல்ல ...

உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையை நீங்க முடிவு பண்ணி வாழ போறீங்க ... இதுல உங்க பொண்ணு மாப்ளைகோ, உங்க அம்மா அப்பாவுக்கோ, ஏன் இந்த உலகத்துக்கோ எந்த ரோலுமே இல்ல ....

நம்ம ஊர்ல எவனாவது பொண்டாட்டிய நடு ரோட்ல போட்டு அடிச்சு சண்டை போட்டான்னா , அது அவங்க குடும்ப பிரச்சனைனு நம்ம மக்கள் சாதாரணமா கடந்து போயிடுவாங்க ...

ஆனா எவனாவது சந்தோஷமா அதே நடு ரோட்ல பொண்டாட்டி தோள் மேல கை போட்டுக்கிட்டு போனான்னு வை, உடனே இந்த கலாச்சார காவலர்கள் எல்லாம்
வந்து,

என்னது இது .... இப்படி பப்ளிக்கா பொண்டாட்டி தோள் மேல கைய போட்டுக்கிட்டு ரோட்ல போறான்னு பொங்க வைப்பாங்க ...

அவங்கள சொல்லி தப்பில்ல ... நம்ம ஆளுகளுக்கு அழகுக்கும் அசிங்கத்துக்கும் என்னைக்குமே வித்தியாசம் தெரியாது ... அதான் இங்க பிரச்சனையே ...

இங்க மொத பொண்டாட்டி இருக்கும் போதே, ரெண்டு மூணு கட்டிக்கிறவனையும் , 60 வயசுலயும் கள்ளக்காதல் பண்றவனையும் நம்ம ஆளுங்க ஈசியா கடந்து போயிடுவாங்க ...

ஆனா எவனாவது யோக்கியமா ஒரே பொண்டாட்டியோட வாழ்ந்து, பேரன் பேத்தி எடுத்ததுக்கு அப்புறம் குழந்தை பெத்துக்கிட்டா, வித்தியாசமா பாப்பாங்க ...

அப்படிப்பட்ட கூறு கெட்டவங்கள பத்தி எல்லாம் கவலைப்படாம, செல்வியை நல்லபடியா உடம்ப பாத்துக்க சொல்லு ... நீயும் எத பத்தியும் யோசிக்காம சந்தோஷமா உன் வேலையை பாரு ... "

என அவர் முடிக்க, மனதின் எங்கோ ஒரு மூலையில் துரும்பாய் உறுத்திக் கொண்டிருந்த விஷயம் முற்றிலுமாய் துடைத்தெறிந்தது போல் தோன்ற, மிகுந்த மகிழ்ச்சியோடு அடுத்த கட்ட வேலைகளில் மூழ்கிப் போனான் திவாகரன்.

விஷயம் அறிந்த இந்திரா, பரமு, லதா நாயர், லூசி ஆகியோர் தாமரையை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க, மனம் மகிழ்ந்து போனாள் மாது.

மாதம் ஏற ஏற
ஒன்றுக்கு இரண்டு உதவியாளர்களை வைத்து, தன்னவளை தாங்கு தாங்கு என்று தாங்கினான் திவாகரன்.

ஒன்பதாம் மாதத்தில், மகள் மருமகனுடன் உற்றார் உறவினர்களையும் அழைத்து வெகு விமர்சையாக சீமந்தத்தை நடத்தி முடித்தான் ....

சீமந்தம் முடிந்த பத்தாவது நாளில், ஒரு பௌர்ணமி திதியில் திவாகரனின் மறு பதிப்பாக சுகப்பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள் தாமரை.

போராடி கிடைத்த பொக்கிஷம் அல்லவா,
மகனை கையில் ஏந்தும் போது தன்னையும் மீறி கண் கலங்கிப் போனான் திவாகரன்.

அதே நீர் திரையிட்ட கண்களோடு அருகில் சோர்ந்தமர்ந்திருந்த மனையாளை காதலோடு பார்த்தவன்

" எப்படியோ போயிருக்க வேண்டியவன் .... இழுத்து பிடிச்சு கூட்டிகிட்டு வந்து இன்னைக்கு எங்கயோ நிறுத்திட்ட .... தேங்க்ஸ் தாமரை ..." என்றான் மனம் நிறைந்து.


பெண்மையோ , ஆண்மையோ
நேர்மை மட்டும் இருந்தால் நிச்சயம்
ஒரு நாள் வாழ்க்கையில் மேன்மை அடையலாம் ....

தாமரை திவாகரனின் வாழ்க்கை அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.


-சுபம் -


வணக்கம் நட்புகளே,

First of all loads of sorry and tons of thanks to all....

இந்த கதையை எழுதி முடிக்கிறதுக்குள்ள ஏகப்பட்ட தடங்கல்கள் ....

ஏற்கனவே எனக்கு எழுதறதுக்கு டைம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் .... இதுல ஒண்ணுத்துக்கு ரெண்டு தடவை MRI எடுக்கிற அளவுக்கு உடம்பு மோசமாயிடுச்சு ....

சைட்ல வேற ஆயிரம் பிரச்சனைகள் ....
போன ரெண்டு வாரம் சைட் வேலையே செய்யல ...

ஆனா அந்த நிலையிலயும் என்னால முடிஞ்ச வரைக்கும் வாரத்துக்கு ரெண்டு எபிசோட் இல்ல மூணு எபிசோட்ட அப்லோட் பண்ணிக்கிட்டே வந்தேன் ...

அதுக்கு முக்கிய காரணம், கமெண்ட்ஸ் மூலம் நீங்கள் கொடுத்த ஆதரவு தான் ...
அதுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும் ...

இப்ப இந்த " இன்று தான் பெண்மைக் கொண்டேன் " கதையை பத்தி ஒரு சில வார்த்தைகள் சொல்லனும்னு தோணுது ...

எனக்கு பொதுவா ஆன்ட்டி ஹீரோ கதைகள் பிடிக்காது ....

ஏன்னா பெரும்பாலான எழுத்தாளர்கள் (நான் படித்தவரையில்) ஆன்ட்டி ஹீரோக்களை அரக்கத் தனமாவும், ஆபாச பேச்சுக் கொண்டவனாவும், நெறியற்றவனாவுமே காட்டினதால, அந்த Genre பிடிக்காமலே போயிடுச்சு ...

ஆன்ட்டி ஹீரோவுக்கும் வில்லனுக்கும் வித்தியாசமே தெரியாம
ஆன்ட்டி ஹீரோன்னாலே , பெரும் பணக்காரனா இருக்கணும் ... உலகத்துல உள்ள எல்லா கெட்ட பழக்கங்களும் அவன்கிட்ட இருக்கணும் .... நாயகியை பாலியல் வன்புணர்வு செய்யணும் ....
இல்லன்னா காண்ட்ராக்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டு அவளை அடிச்சு கொடுமைப்படுத்தணும்... இப்படிப்பட்ட கதாபாத்திரத்தை அவ்ளோ கொடுமைகளுக்கு அப்புறம், நாயகி அப்படியே மன்னிச்சு ஏத்துப்பாங்க ...
அவன் செய்த கொடுமைகளுக்கும் அவன் விளக்கம் கொடுக்கவே மாட்டான் .... ஏன்னா அவன் ஆன்ட்டி ஹீரோ ...
இதைத் தாண்டி வேற மாதிரியான ஆன்ட்டி ஹீரோ கதைகள் என் கண்ணுல படவே இல்ல...


என்னைப் பொறுத்த வரைக்கும்,
ஆன்ட்டி ஹீரோன்னா, அவன்கிட்ட ஹீரோவுக்கான எல்லா Virtue qualityயும் இருக்கும் ஆனா சந்தர்ப்ப சூழ்நிலையால் தெரிஞ்சோ தெரியாமலோ தப்பு பண்ணிடுவான் ....
அந்தத் தப்பிலிருந்து வாழ்க்கை பாடத்தை கத்துக்கிட்டு ஒரு கட்டத்துல நல்லவனா மனசு மாறிடுவான் .... அதை அடிப்படையாக வச்சு தான் இந்த கதையை எழுதினேன் ...

நீங்க இதுவரைக்கும் கொடுத்துக்கிட்டு வர ஆதரவிலிருந்தே இந்த கதை உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்குன்னு தெரியுது ...

நிறைவா முடிச்சுட்டேன்னு நம்பறேன் .

எனக்கு ஒரு மாசம் லீவு கொடுங்க குழந்தைகளா .... அடுத்த கதை நிச்சயமா என்னோட favorite genre crime, thriller தான்... வாரத்துக்கு ரெண்டு எபிசோட் போடற மாதிரி ஓரளவுக்கு எழுதிக்கிட்டு வரேன் ....

இந்த கதை ஆகஸ்ட் 3 வரைக்கும் தான் தளத்தில் இருக்கும் ... அதுக்கப்புறம் படிக்க விரும்புறவங்க பிரதிலிபியில் படிக்கலாம்..


Once again thanks a lot...
Love u All,

Priya Jagannathan
 
Arumai priyaji, thamarai and vasi one type na Jothi and Surya Vera level, intha positivity than unga stories la highlight. Keep it up ma and take care, congrats 🎉 🎉 🎉
 
Back
Top