Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 90

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
681
அத்தியாயம் 90

அவள் உறக்கம் விழிக்கும் பொழுது, சூரியன் மறைந்து இருள் பரவ தொடங்கி இருந்தது .

பசி வயிற்றைக் கிள்ளியது.
உடன் வாந்தி வருவது போன்ற உணர்வும் இருக்க, அருகில் இருந்த குளியல் அறைக்கு சென்று புத்துணர்வு பெற்று திரும்பியவள்,
அப்போதுதான் அந்த வீட்டை ஆராய்ச்சி பார்வை பார்க்க ஆரம்பித்தாள்.

இரண்டடுக்கு கொண்ட பெரிய பங்களா. முன்புற தோட்டம்.
உலகில் உள்ள நவீன வசதிகள் அத்தனையும் தன்னகத்தே கொண்டிருந்தது.

மெதுவாக அவள் படி இறங்கி வரும் பொழுது, கூடத்தில் யாருமே இல்லை.
எங்குமே மங்கலான வெளிச்சம்.

வீட்டில் யாருமே இல்லாத உணர்வு.
மெதுவாகச் சென்று சமையல் அறையை எட்டிப் பார்த்தாள், அங்கு கருவாடு வறுத்து வைக்கப்பட்டிருக்க,
கலைச்செல்வி போல் அசைவம் சாப்பிடும் பழக்கம் இல்லாததோடு,
மசக்கையின் காரணமாக அந்த வாசம் அவள் வயிற்றைப் புரட்ட, அருகில் இருந்த குளியல் அறைக்கு சென்று
வாந்தி எடுத்து முடித்தாள்.

நிற்க முடியாத களைப்பு ஏற்பட, உடன் பசியும் சேர்ந்து அவளை பாடாய்படுத்தி எடுத்தது.

முந்தானையால் மூக்கை அழுந்த மூடிக்கொண்டு, சாப்பிட சாதமாவது கிடைக்குமா ....என்ற நோக்கில் சென்று பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

வறுத்து வைக்கப்பட்டிருந்த கருவாட்டை தாண்டி வேறு எதுவுமே இல்லை.

குளிர்சாதன பெட்டியில் பால் பாக்கெட் இருக்க, அதனைக் காய்ச்சி
குடிக்கலாம் என்றெண்ணி
பாத்திரத்தில் ஊற்றிக் காய்ச்சும் போது, எங்கிருந்தோ வந்த பாட்டி ரெஜினா,

" ஏய், உன்னை யாரு என் கிச்சனை யூஸ் பண்ண சொன்னது .... எதுக்கு இப்ப பால் காய்ச்சற...." என்றார் மலையாள வாடையில் தமிழ் பேசி.

" எனக்கு ஏதாச்சும் சாப்பிடணும் போல இருந்துச்சு... அதனால பால் காய்ச்சினேன் ..... ".

" ஆமா.... உங்க வீட்டில இருந்து தேனும் பாலும் கொண்டாந்துட்ட.... இப்ப பால் வேணுமா உனக்கு ...."

" ரொம்ப பசிக்குது பாட்டி ..." என்று கெஞ்சினாள்.

" கொஞ்சம் வறுத்த கருவாடும், சிக்கன் பிரியாணியும் இருக்கு சாப்பிடறியா...." என்று கேட்கும் பொழுதே ரெஜினாவின் குரலில் ஏகத்துக்கும் நக்கல்.

" ஆ... நோ நோ ... எனக்கு இதெல்லாம் வேணாம் .... மோர் சாதம் , இல்ல ரசம் சாதம் இருக்குமா ..."

" இந்த வீட்டை பார்த்த இல்ல ...
இவ்ளோ பெரிய வீட்டுல வேலைக்காரங்களே கிடையாது ...
நீயும் நானும் தான் வேலை செஞ்சாகணும் ... உனக்கு தேவையானது நீ தான் சமைச்சு சாப்பிடணும் ...." என்றவர் தன் பொறுப்பு கழிந்ததாக எண்ணி,
வறுத்த கருவாட்டை ஒரு பாத்திரத்தில் போட்டு எடுத்துச் சென்று விட்டார்.

வேறு வழி இல்லாமல் காய்ச்சிய பாலை குடித்து முடித்தவள், தன்னவனை காண எண்ணி வீட்டை அலசியப்படி பின்பக்கத் தோட்டத்திற்கு சென்றாள்.

அங்கு அவள் பார்த்த காட்சி,
அடி வயிற்றோடு அவள் மனதையும் பிசைய, ஒருவித அருவெறுப்பும் உடன் தோன்றியது.

பாட்டி ரெஜினா தன் பேரன் தாமசுடன், ஊர் கதைகள், உலக கதைகளை பேசி சிரித்தபடி மது அருந்திக் கொண்டிருந்தார்.

பிறந்து வளர்ந்ததிலிருந்து, அவள் தந்தை புகைப்பிடித்து குடித்து பார்த்ததில்லை. அதே போல்
சுப்பிரமணியத்தின் நட்பு வட்டமும்
மிகவும் கண்ணியமானது.

சினிமா, நாடகங்களில் இம்மாதிரி காட்சிகளை பார்த்திருக்கிறாள். அதுவும் இந்திய ஆண்கள் குடித்துவிட்டு அராஜகம் செய்வது போல் தான் பார்த்திருக்கிறாள்.

ஒரு சில ஆங்கில படங்களில் பெண்கள் மது அருந்துவது போலான காட்சிகளை பார்த்த துண்டு, ஆனால் அது அவர்களது கலாச்சாரம் என்றெண்ணி சுலபமாக கடந்து விடுவாள் .

இப்போது முதன்முறையாக இப்படி ஒரு காட்சியை கண்டதும், அவளுக்கு தூக்கி வாரி போட்டது.

தன்னவன் குடிக்க மாட்டான் என்றெண்ணி இருந்தவளுக்கு, அவனது குடும்பமே குடிகார குடும்பம்
என்று தெரிய வர, தாய் பேசிய ஒவ்வொரு வார்த்தையும்
மனதில் ஓட, கண்கள் குளம் கட்டியது.

அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல், ஒரு வழியாக அவனது படுக்கை அறையை கண்டுபிடித்து அதில் சென்று முடங்கினாள்.

ஒரு மணி நேரத்திற்கு எல்லாம் மீண்டும் வயிறு தன் இருப்பைக் காட்ட,
மசக்கை வாட்டியது.

சாப்பிட எதுவும் இல்லாமல், தவித்தவள், ஒரு கட்டத்தில் மயக்க நிலையில் கண்ணயர்ந்து போனாள்.

ஆழ்ந்த உறக்கத்தில் தன்னை யாரோ ஆக்கிரமிப்பது போல் உணர்ந்தவள்,மெல்ல திமிறி எழும் பொழுது , தாமஸ் அவள் மீது படற,
அவன் வாயில் இருந்து வந்த மது வாடை, அவளுக்கு
வாந்தியை தூண்ட குபீரென்று எழுந்து குளியல் அறைக்குள் ஓடி வாந்தி எடுத்து களைத்துப் போய் வந்தவளை, அவன் தன்னோடு இறுக்கி அணைத்து கட்டிலில் கிடத்த,

" நோ தாமஸ் ... எனக்கு முடியல... ப்ளீஸ் ..." என கெஞ்சினாள்.

அவன் கேட்பதாய் இல்லை .

அடுத்த அரை மணி நேரம் அவள் பேச்சைக் காதில் வாங்காமல், அந்த மிருகம் தன் வேட்கையை தீர்த்துக் கொண்டு விட்டே, அவளை விட்டு விலகி படுத்தது.

அடி வயிறு வலிக்க, ஜுரம் கண்டது போல் மேனி எல்லாம் கொதிக்க,
படுக்கையை விட்டு எழுந்தமரக் கூட முடியாமல், அப்படியே மூர்சாகி விழுந்தாள்.

காலையில் விழிப்பு வரும் பொழுது, அவன் அருகில் இல்லை.

குளியலறைக்கு சென்று காலைக்கடன்கள் முடிக்கும் பொழுது தான், தொடைக்கு நடுவில் குருதி கசிவது போல் இருக்க, துடித்துப்போனவள்
வேக வேகமாக தயாராகி மருத்துவமனைக்கு சென்றாள்.

அவளது உடல்நிலை படு பலகீனமாக இருப்பதாலும், உடன் இள கர்ப்ப காலம் என்பதாலும் உடற் சேர்க்கையை தவிர்க்கும் படி ஸ்கேன் செய்து பார்த்து கூறிய
மருத்துவர்

" நல்லவேளை அபார்ஷன் எதுவும் ஆகல ... உங்க வீட்டுக்காரர் வந்திருந்தா நானே சொல்லி இருப்பேன் .... டேக் கேர் மா ..." என அறிவுரை கூறி
மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.

பசி காதை அடைக்க, மருத்துவமனை கேன்டீனில் வயிறார சாப்பிட்டு முடித்தவளுக்கு, தந்தையிடம் பேச வேண்டும் போல் இருந்தது.

ஆனால் இப்பொழுது இருக்கும் மனநிலையில், அவரது குரல் கேட்டாலே, உடைந்து அழுது விடுவாள் என்பதோடு அவளது தாயை எதிர்கொள்ளும் தைரியமும் இல்லை.

அதோடு அவளுக்கு தாமஸ் மீது கோபம் இருந்தாலும், குடிபோதையில் தெரியாத்தனமாக நடந்து கொண்டு விட்டான் என்று அவன் மீது கொஞ்சமே கொஞ்சமாய் ஒட்டிக் கொண்டிருக்கும் காதல் மனது வக்காலத்து வாங்க, அடக்கி வாசித்தாள்.

அன்றைய இரவும் அவன் குடித்துவிட்டு வந்து அவளை தன் ஆசைக்கு இணங்க வைக்க முயல, விடாப்படியாக மறுத்துவிட்டாள்.

மருத்துவர் கூறியதை அவள் கூற, அதை காது கொடுத்து கேட்கும் நிலையில் இல்லாமல்,

" ச்சே... உன்னை எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டேனோ, அந்த பர்பஸே சர்வ் ஆகலயே .....
உன்ன காலேஜ்ல முதல் நாள் பார்க்கும் போது உனக்கு பிராக்கெட் போடணும்னு முடிவு எடுத்தேன் ...
நீ அழகா இருந்தாலும் பாக்க ஒல்லியா, சாதுவா இருந்ததால, இது என் டேஸ்ட் இல்ல... அப்புறம் பாத்துக்கலாம்னு... விட்டுட்டேன் ....

ஆனா உன் அம்மா ஆடினா பாரு ஆட்டம் .... அன்னைக்கு தான் முடிவு பண்ணேன் அவள நிம்மதியா இருக்க விடக்கூடாதுனு....

என் வாழ்க்கையில இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் மன்னிப்பு கேட்டதே இல்ல .... ஆனா அன்னைக்கு உன் அம்மாவால எத்தனை பேர் கிட்ட மன்னிப்பு கேட்டேன் தெரியுமா ....
சேர்மன், பிரின்சிபல், செகரட்டரி அவன் இவன்னு எல்லாரும் என்னமோ பெரிய யோக்கிய சிகாமணிங்க மாதிரி ஆளுக்கு ஆள் அட்வைஸ் வேற ....
நானே ராஜா நானே மந்திரினு இருந்தவன அப்பாலஜி லெட்டர் எழுதிக் கொடுக்க வச்சு, அவ்ளோ ப்ரோபசர்ஸ்க்கு முன்னாடி தலை குனிய வச்சா ....
அப்பதான் முடிவு செஞ்சேன்....
இனிமே உன் விஷயத்தை தள்ளி போடக்கூடாதுனு, குறைந்தபட்சம் நீ சிக்க ஆறு மாசம் ஆகும்னு நினைச்சேன்... ஆனா ஒரு சின்ன தூண்டில்லயே வசமா வந்து சிக்கிட்ட....
எனக்கு இந்த குழந்தை குட்டி மேல எல்லாம் இன்ட்ரஸ்ட் கிடையாது ....
எனக்கு என் சந்தோசம் தான் முக்கியம் ...
இங்க பாரு இன்னும் உனக்கு ஒரு வாரம் தான் டைம் ...
அதுக்கு மேலயும் இதே காரணத்தை சொன்ன, சும்மா இருக்க மாட்டேன் ...."

என்று பெருங்குரலில், குழறியபடி கர்ஜித்துவிட்டு படுக்கையில் குப்புறப்படுத்து உறங்கிப் போனான்.

இப்படி ஒரு காட்டுமிராண்டியிடம் சிக்கிக் கொண்டு விட்டோமே என்று கலங்கினாள்.

அவளது தாயின் மாதவிடாய் காலங்களில் அவரது தந்தை பார்த்து பார்த்து உதவியது எல்லாம்
நினைவிற்கு வர, கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.

மறுநாள் காலை அவனைக் காணவில்லை. கீழ் தளத்திற்கு சென்று பார்த்தாள் ரெஜினாவையும் காணவில்லை.

மளிகை சாமான்கள் அளந்து வைத்தது போல், மிகக்குறைவாக இருக்க,
உயிர் வாழ வேண்டுமே என்ற எண்ணத்தில் எதையோ செய்து சாப்பிட்டாள்.

பகல் முழுவதும் இருவரையும் காணவில்லை. இரவு ரெஜினா மட்டும்
முன்னதாக வந்த அடுப்பங்கரையில் ஏதோ உருட்டிக் கொண்டிருக்க, சற்று நேரத்திற்கெல்லாம் ஆஜானுபாகுவான ஒரு பெண்ணோடு வந்து இறங்கினான் தாமஸ்.

பெண் என்பதை விட அவளிடம் ஆண் தன்மை அப்பட்டமாய் தெரிந்தது.

அந்த புதிய பெண்ணோடு ரெஜினா சிரித்து சிரித்து பேச, பால்கனியில் இருந்து கண்ணுற்றவளுக்கு அந்தப் பெண் நீண்ட நாள் பழக்கம் என்பது அப்போது தெரிந்து போனது.

சற்று நேரத்திற்கு எல்லாம் அவள் தோள் மீது கை போட்டுக்கொண்டு தன் அறைக்கு வந்தவன்,

" போடி வெளியே ..." என்றான்.

கைப்புண்ணிற்கு கண்ணாடி வேண்டுமா .... அந்தப் பெண்ணின் உடையும், அவனோடு இழைந்து நிற்கும் பாங்கும் அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்ட,

" தாமஸ்... இது தப்பு ..."

" இது என் வீடு.... எது தப்பு எது சரின்னு எனக்கு தெரியும் .... வெளியே போ..." என்றவன் அவள் பின் கழுத்தில் கை வைத்து தரதரவென்று இழுத்து சென்று வெளியே தள்ளினான்.

அதுவே தொடர்கதை ஆகிப்போனது.
அவளது உடலும் மனமும் ரணமாய் கொதிக்க தொடங்கியது.

நாளோரு மேனி பொழுதொரு வண்ணம் பிரச்சனைகள் அதிகமானதே ஒழிய குறைந்த பாடில்லை .

அதன் பிறகு ஒரு வாரம், பாட்டி பேரன் இருவரையும் காணவில்லை.
அவ்வளவு பெரிய வீட்டில் தனியாகவே இருந்தாள்.

அனைத்தையும் விட்டுவிட்டு தாய் தந்தையிடமே சென்று விடலாம் என்ற எண்ணம் கூட தோன்றியது.

ஆனால் பெற்ற தாயை எடுத்துறிந்து பேசியதற்கு அனுபவிக்க வேண்டாமா ... நடப்பவைகள் எல்லாம் தனக்கு தானே கொடுத்துக் கொள்ளும் தண்டனைகள் ... என்றெண்ணி ஏற்றுக் கொண்டாள் .

கலைச்செல்வி, சுப்பிரமணியம், அவளை தொடர்பு கொள்ள முயலவில்லை.

நல்லதோ கெட்டதோ வாழ்க்கை அவளுக்கு புரியட்டும்.

ஒருவேளை அவள் எதிர்பார்த்த படி வாழ்க்கை செம்மையாக அமைந்திருக்கும் பட்சத்தில், தாமசை அறிந்தவர்கள் என்பதால்
தங்களுடைய தலையீடு அவர்களுக்கிடையே தேவையில்லாத சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது
என்றெண்ணி ஒதுங்கியே இருந்தனர்.

அனைத்து மளிகை சாமான்களும் காலியாகி போக, தனக்கு தேவையானதை அருகில் இருந்த கடையில் வாங்கி வந்து உணவு தயாரித்து சாப்பிட முற்படும் போது, அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த ரெஜினா, அவளது தட்டை தூக்கி வீசி எறிந்ததோடு, அவள் சமைத்து வைத்திருந்ததையும் எடுத்து சென்று குப்பைத் தொட்டியில் கொட்டினார்.

அது நாள் வரை பொறுத்துப்போனவளுக்கு அன்று கோபம் கரையை கடக்க,

" இது என் காசுல, நான் வாங்கிட்டு வந்த மளிகை சாமான்ல, நானே சமைச்ச சாப்பாடு ... இதை எடுத்துக் கொட்ட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு ...."

" உரிமையை பத்தி பேச உனக்கு என்ன உரிமை இருக்கு ..."

" உங்க பேரனோட பொண்டாட்டி ...."

" அத அவன் சொல்லட்டும் .... இந்த வீட்டை பொருத்தவரைக்கும் நீ வேலைக்காரி .... நீ போன் போட்டா எடுக்கிறானா... இல்லையே ... தினமும் வீட்டுக்கு வரானா... இல்லையே ... உன்னோட முகம் கொடுத்து பேசறானா... இல்லையே..இங்க பாரு
போட்டத சாப்பிட்டு இந்த வீட்டுல யார் கண்ணுலயும் படாம இருந்துக்க...
அதான் உனக்கு நல்லது ..."

" நான் எதுக்காக அப்படி இருக்கணும் ... நான் அவரோட லீகலி வெட்டட் வைஃப் ... உங்களை விட இந்த வீட்ல எனக்கு தான் உரிமை ஜாஸ்தி ..."
என்றவள் பேசி முடிப்பதற்கு முன்பே, புயல் போல் வீட்டிற்குள் வந்த
தாமஸின் கரங்கள் அவள் கன்னத்தை பதம் பார்த்தது.

" உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் பாட்டியையே எதுத்து பேசுவ... " என்றவன் அவளை
கண்ணு மண்ணு தெரியாமல் பெல்டால் விளாசி எடுத்து விட்டான்.

உடலும் உள்ளமும் ஒருசேர மரத்துப் போனதால், சதை கிழிந்து ரத்தம் வருவதை கண்டு கூட அவளது மனம் பதறவில்லை .

தளர்ந்த நிலையில் நடக்க முடியாமல் நடந்து, கிடைத்த அறையில் முடங்கினாள்.

பிறகு தொடர்ந்து வந்த இரண்டு நாட்கள், அவனைக் காண முடியவில்லை.

மூன்றாவது நாள் அவன் வரவில்லை,
குடித்துவிட்டு வண்டி ஒட்டிச் சென்றதால் சாலை விபத்தில் இறந்து போனதாக செய்தி மட்டும் வந்தது.

அதனைக் கேட்டு அவள் பதறவில்லை.
மாறாக இத்துணை நாட்களாக பிடித்திருந்த சாத்தானிடமிருந்து
விடுபட்டுவிட்டோம் என்ற உணர்வை பெற்றாள்.

ஆனால் ரெஜினா அழுது புலம்பினார்.
உடனே வீடு முழுவதும் நண்பர்கள் கூட்டம் கூட, மருத்துவமனை மற்றும் காவல் நிலையத்தில் மற்ற சடங்குகள் அனைத்தும் முடிந்து உடற்கூறாய்வு செய்த அவனது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட, நீண்ட நாளைக்கு பிறகான நிறைந்த நிம்மதியில்,
பிணமான அவன் முகத்தையே
ஆழ்ந்த நோக்கிக் கொண்டிருந்தாள் மித்ரா.

அவள் கண்களில் தெரிந்த பளபளப்பும், முகத்தில் காணப்பட்ட
தெளிவுமே அவள் மனதினை சொல்லாமல் சொல்ல, அதனைக் கண்டு கொண்ட ரெஜினா அவளை வாய்க்கு வந்தபடி ஏச ஆரம்பித்தார்.

" இந்த ராசி கெட்டவளை கட்டினதால தான் என் பேரன் செத்துப் போயிட்டான் ..."

" பாட்டின்னா பேரனுக்கு புத்திமதி சொல்லி வளப்பாங்கன்னு பேரு.... ஒன்னா சேர்ந்து தண்ணி அடிச்சா ...
இப்படித்தான் ஆக்சிடென்ட் ஆகும் .." என்றாள் பதிலடி கொடுக்கும் விதமாக .

" என் பேரனே போயிட்டான் ...இனிமே உனக்கு இந்த வீட்ல இடம் இல்ல வெளியே போ ..."

" மறுபடியும் சொல்றேன் ...இந்த வீட்ல உங்களை விட எனக்கு தான் உரிமை அதிகம்... நான் அவரோட பொண்டாட்டி ...
அவரோட குழந்தையை சுமந்துகிட்டு இருக்கேன் ..."
என்றவளுக்கு அந்த வீட்டின் மீதோ, அவனது சொத்து பத்துக்களின் மீதோ
யாதொரு விருப்பமும் இல்லை.

தாய் தந்தையை மறந்துவிட்டு தன் வாழ்க்கையையே தொலைத்து விட்டு, திருமணம் என்ற பெயரில்
அவனை மணந்து கொண்டு வந்தாள் அல்லவா .... அதற்கான நியாயத்தை தான் அவள் எதிர்பார்த்தாள்.

உடனே ரெஜினா
" உன் வயித்துல வளர்றது அவனோட குழந்தையே இல்ல ...
நீ எவன் கூடயோ சுத்தி பிள்ளை உண்டாயிட்டு, என் பேரனை ஏமாத்தி கல்யாணம் கட்டிக்கிட்டு, இப்ப அவன் இறந்து போனதும் சொத்தை ஆட்டைய போடலாம்னு பாக்குறியா ..."
என்ற போது தான் அவளது தன்மானமும் கௌரவமும் பலர் அறிய அடிபட, துடித்துப் போனவள்,

" இது அவரோட குழந்தை தான் என்னால நிரூபிக்க முடியும் ..." என்றாள் அமர்த்தலாக.

செய்தித்தாள், தொலைக்காட்சி என செய்தி பரவி இருக்க, காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் சுப்பிரமணியத்தின் நண்பர் என்பதால், செய்தி சுப்ரமணியத்தை சென்றடைய பதறி போய் ஓடி வந்தவர்
உருக்குலைந்திருந்த தன் மகளையும் அவளது வாழ்க்கையையும் கண்டு கலங்கி துடித்தார்.

" உன் பொண்ணு போன் பண்ணி சொன்னாளா ... கட்டினவன் செத்துப் போயிட்டான் ... சொத்தை ஆட்டைய போட வானு ...." என்று சுப்பிரமணியத்தை பார்த்து ரெஜினா வன்மத்தை கக்கினார்.

" உங்க சொத்தும் வேணாம் ஒன்னும் வேணாம் ... என் பொண்ண பார்த்தாலே தெரியுது .... அவ இங்க வாழ்ந்த வாழ்க்கையோட லட்சணம் ....
குடிகாரன கல்யாணம் கட்டிக்காதனு பலமுறை நானும் என் மனைவியும் சொன்னோம் ... இவ கேக்காததால
இவ வாழ்க்கையே பாழா போயிடுச்சு .... இனிமே இந்த வீட்டுல ஒரு நிமிஷம் என் பொண்ணு இருக்க மாட்டா...
வா மித்து... நம்ம வீட்டுக்கு போகலாம் ..."
என்றார் சுப்ரமணியம் ஆதரவாக.

" இல்லப்பா நான் வரமாட்டேன் ....
எந்த காரணத்துக்காக நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தேனோ ....
இப்ப அதையே பலர் அறிய கேள்விக்குறியாக்கிட்டாங்க....
எனக்கு சொத்தை விட, என் குழந்தைக்கு தகப்பன் இவரு தானு
நான் ப்ரூவ் பண்ணியே ஆகணும் ..."
என்றாள் வைராக்கியத்துடன்.

அதுவரை அந்த தர்க்கத்தை கவனித்துக் கொண்டிருந்த பாதர் டேனியல்,

" இங்க பாரும்மா.... உன் பக்கம் தான் நியாயம் இருக்கு .... நீ தான் இவனோட லீகலீ வெட்டட் வைஃப் .... உங்க கல்யாணத்தை நடத்தி வச்சது நான் தான் ...உன் வயத்துல வளர்ற குழந்தையும் அவனோடது தான் எல்லாருக்கும் தெரியும் .... கர்த்தருக்கும் தெரியும் ...
அதனால கலங்காத ...
உனக்கான நியாயத்தை நான் வாங்கி கொடுக்கிறேன் ....
மாசமாய் இருக்க .... உன் உடம்புல இருக்கிற ரணத்திலிருந்து சீழ் வடியுது .... முதல்ல இவனுக்கு செய்ய வேண்டியது எல்லாம் செஞ்சிட்டு போய் உன் உடம்பையும் பொறக்க போற குழந்தையும் பாரு... மத்தத ஆண்டவர் பார்த்து பாரு...." என்று திடமான குரலில் கூற,
அங்கு கூடியிருந்த அனைவரும் ரெஜினா உட்பட பெட்டிப் பாம்பாய்
அடங்கிப் போய், அடுத்து ஆக வேண்டியதில் கவனம் செலுத்த தொடங்கினர்.

- மாயோனின் மாயங்கள் தொடரும்
 
Back
Top