Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 98

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
681
அத்தியாயம் 98


" மைதீன் பொண்ணு காணாம போனதை காரணம் காட்டி தொகுதி வேட்பாளராக களம் இறங்க மறுத்த இந்த மூணு பேரும், குறிப்பா வேதாச்சலம்,
மூர்த்தியார் இறந்ததுக்கு அப்புறம் வந்த இடைத்தேர்தல்ல உடனே
களமிறங்கினான்... ஏன் அப்ப கட்சி அடிபொடிங்க, கிருபா விசுவாசிங்க வேதாச்சலத்தோட குடும்பத்து பெண்டு புள்ளைங்களை தூக்க மாட்டாங்களா....

மூர்த்தியார் இருக்கும் போது அவர் கிட்ட விசுவாசமா இருக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டு உண்மையான விசுவாசத்தை கிருபா கிட்ட காட்டிகிட்டு இருந்திருக்கான்....

மூர்த்தியார் இறந்ததும், இடைத்தேர்தல்ல தொகுதி அதிகாரத்தை கைப்பற்றத்துக்காக, கிருபாவை பின்னுக்கு தள்ளிட்டு நேரடி அரசியல்ல இறங்கி இருக்கான் ....

விஷயம் தெரியாத
மூர்த்தியார் விசுவாசிங்க அப்படியே வேதாச்சலத்துக்கு சப்போர்ட் பண்ண,
கிருபா ஆளுங்களுக்கும், அவங்களுக்கும் பெரிய மோதலே வெடிச்சது ....

என் அப்பனும் ஆத்தாளும் என்னை கொள்ளி போட விடாம பண்ணி,
கட்சில என்னை செல்லா காசாக்கிட்டாக ....
இத்தனை நாள் நான் போட்ட எலும்பு துண்டுக்காக மறைமுகமா காவடி எடுத்த பயலுக எல்லாம்,
இப்ப என்னையே தூக்கி எறிஞ்சிட்டு எனக்கு எதிரா களத்துல இறங்குறானுங்கனு கிருபாகரன் அறிக்கை விட்டான் .....

அதுக்கு வேதாச்சலம் எதிர் அறிக்கை விட, இப்படியே சரமாரியா அறிக்கை விட்டு மறைமுகமாக ஒருத்தர ஒருத்தர் தாக்கி பேசிகிட்டாக...அதுக்கு அப்புறம் தான் கட்சியை விட்டு வெளியே வந்து வேற வழி இல்லாம
சுயேச்சையா கிருபாகரன் நின்னு தோத்துப் போனான் ...

இதெல்லாம் அப்ப அரசல் புரசலா தெரிஞ்சது .... ஆனா நான் இருந்த மனநிலையில இவ்ளோ டீடைல்டா அப்ப அனலைஸ் பண்ண முடியல ..." என கிருஷ்ணா முடித்தான்.


" என் பெரியப்பா சொல்லுவாரு ...
அரசியல்ல இருக்கிறவங்க அவங்க நிழல கூட நம்ப கூடாதுனு.... அது
எவ்ளோ சரியான வார்த்தைனு இப்பதான் டா தெரியுது..." என செர்ரி சொல்ல

" நல்லா சொல்லுங்க ... அப்பவாச்சும் இவருக்கு ஏறுதான்னு பார்க்கலாம் ..."
என்றாள் மாதவி தன் நீண்ட நாள் கோபத்தை வெளிப்படுத்தி.

அவள் கண்களை உறுத்து பார்த்தவனுக்கு அப்போது பழைய சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வர...
ஒருவேளை வேதாச்சலத்தையும் சுதாகரனையும் மாதவி இனம் கண்டு கொண்டதால் தான்
தன்னை அரசியலில் களம் இறங்க வேண்டாம் என்று கூறினாளோ....

என்ற எண்ணம் உதிக்க,
அரசியல் மட்டுமல்ல,
விவாகரத்துக்கு முன்பான ஒரு மாதம் முழுவதுமே
குழப்பமான மனநிலை அவள் இருந்ததும் உடன் வந்து போக,
கூடிய விரைவில் அனைத்திற்குமான தீர்வு கிடைக்கும் என்று அமைதியானான்.

" இப்ப எனக்கு சந்தேகம் வருது தேவா .... மூர்த்தியார் சாகும் போது அவர் கூட அவர் ரூம்ல சுதாகரன் இருந்தான் இல்லையா ..." என செர்ரி சந்தேகத்தை விதைக்க,

" ஆமாண்டா.... மூர்த்தியார் சாகும் போது ஓபன் லிவிங் ரூமை ஒட்டி இருக்கிற வராண்டால நின்ன படி சுதாகரன் போன்ல பேசிக்கிட்டு இருந்தான் ....அப்பதான் நானும் மைதீன் ஐயாவும் மூர்த்தியார பாக்க அங்க போனோம் ....
ஏற்கனவே நடக்க முடியாம, பேச முடியாம கஷ்டப்பட்டுகிட்டு இருந்தவரோட முகத்துல திடீர்னு வியர்வை, அளவுக்கு அதிகமான அதிர்ச்சி, கை கால்ல நடுக்கம், வீல் சேர விட்டு எழுந்துக்க முயற்சி பண்றாரு .... முடியல, கடைசியா தன் ரெண்டு கையும் கூப்பி மைதீன் ஐயா கிட்ட மன்னிப்பு கேக்கற மாதிரி செய்துட்டு இறந்துட்டாரு டா...
ஒருவேளை சுதாகரன் ஹசீனாவை கடத்திய விஷயத்தை பத்தி யார்கிட்டயோ போன்ல பேசிகிட்டு இருந்திருக்கான் போல .... அதை மூர்த்தியார் கேட்டுட்டு தான் அப்படி நடந்துக்கிட்டாரோனு,
இப்ப எல்லா விஷயத்தையும் வச்சு
யோசிச்சா தோணுது ..."

என அனைத்து புள்ளிகளையும் ஒன்றாக இணை கூட்டி
துரிதமாக ஒரு வடிவத்தை உருவாக்கினான் கிருஷ்ணா.

" வெரி குட் கேச் ....." என்றாள் மதுரா .

" என்னையும் மைதீன் ஐயாவையும் பாசத்தோடயும் பரிதாபத்தோடயும் பார்த்தவரு, கடைசியா சுதாகரனை பார்த்த பார்வைல ஒருவித கோபம் இருந்தா மாதிரி இருந்துச்சு ....
மூர்த்தியாரால முன்னை மாதிரி எழுந்து நடக்க முடியாது ...
காது கேட்டாலும் , வார்த்தை சரியா வராது ... பத்தாததுக்கு மூர்த்தியாரை பக்கத்துல இருந்து பாத்துக்கிட்ட மாரி அண்ணா வேற அங்க இல்லாம போனதால,
எதைப் பத்தியும் கண்டுக்காம , வந்த போனை அட்டென்ட் பண்ணி சுதாகரன்
தெளிவா பேசி இருக்கான் போல...." என்றான் கிருஷ்ணா, அது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் தான் மாதவியும் சுதாகரனை இனம் கண்டு கொண்டாள் எனத் தெரியாமல்.

அங்கிருந்த அனைவருக்கும் இத்துணை நாட்களாக மனதில் அழுத்திக் கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் ஓரளவிற்கு விடை கிடைத்தது போல் இருக்க,
சிறு ஆயாசத்துடன்

" நான் கிளம்புறேன் தேவா ..."
என விடைபெற்றான் செர்ரி.

மதுராவால் அவன் மனநிலையை
மிகச்சரியாக புரிந்து கொள்ள முடிந்தது.

கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே கடிகார பெண்டுலம் போல் அவனது மனம் இத்துணை காலம் ஆடி ஆடி களைத்துப் போயிருந்தது.

இவ்வளவு காலம் அவன் மனதை அரித்துக் கொண்டிருந்த சரளாவின்
மரணத்திற்கு ஏதோ ஒரு வகையில்
தீர்வு கிடைக்கப் போவதே தற்போது அவனுக்கு இதத்தை கொடுத்திருக்க,
தடுமாறி தவித்துக் கொண்டிருந்தவனின் மனம் லேசாக இளைப்பாற தொடங்கியதை
எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டவள்,
சரளாவின் கொடூர மரணத்திற்கு
செர்ரியின் கைகளாலேயே குறைந்தபட்ச தண்டனையாவது கொடுத்து அவன் மனதை மேலும் நிம்மதியுற செய்ய வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டாள்.

மாதவி படுக்கை அறைக்குச் சென்று உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் முகத்தை லயித்துப் பார்த்து, அதன் தலை கோதிவிட்டு
வந்து,

" நானும் கிளம்பறேன் கிருஷ்ணா...
நான் சொன்ன மாறி, நாளைக்கு ஒரு நாள் எங்கன போனாலும் சிவசாலிகிராமம் உங்க கூடவே இருக்கட்டும் ..." என அறிவுறுத்தி விட்டு விடை பெற்றாள்.

மறுநாள் மீண்டும் பரபரப்பாக தொடங்கியது.

காலை உணவை சங்கையா வீட்டிலிருந்து கொண்டு வந்த செங்கோடன், மதுரா, கிருஷ்ணாவிற்கு பரிமாறிக் கொண்டிருக்கும் போது மதுராவிற்கு அழைப்பு வந்தது.

" வாவ் குட் ...." என்றாள் அலைபேசியை அனுமதித்து காதில் பொருத்தியதுமே.

" வேர் ......... ஓ...... குட் ஜாப்....வீ வில் வெயிட் ..." என கடைசியில் முடித்துக் கொண்டவள்,

" தனசேகரன், சுதாகரன் ரெண்டு பேரும் சிங்கப்பூர் தப்பிச்சு போக பார்த்திருக்காங்க .... மும்பை போர்ட்டுல மும்பை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம்.... மதியத்துக்குள்ள அவங்கள இங்க
கொண்டு வந்துறாங்களாம்... " என்றாள் மிகுந்த மகிழ்ச்சியில்.

உடனே செர்ரியை தொடர்பு கொண்டு ,

" இன்னும் பத்து நிமிஷத்துல நீங்க இங்க இருக்கணும் ...." என்று கட்டளை இடுவது போல் கூறிவிட்டு அழைப்பை துண்டித்து, அவன் வரவுக்காக காத்திருந்தாள்.

அடுத்த 15 நிமிடத்தில் செர்ரி அங்கு வந்து சேர்ந்தான் .

அனைத்தையும் மேம்போக்காக கூறிய மதுரா கிருஷ்ணா மற்றும் செர்ரியை பார்த்து ,

" அக்யூஸ்ட்ட போலீஸ் கஸ்டடில எடுத்த 24 மணி நேரத்துக்குள்ள மேஜிஸ்ட்ரேட் முன்னாடி ப்ரெசென்ட் பண்ணி வெளிய விட்டா சாட்சியை கலைச்சிடுவாங்கன்னு சொல்லி மறுபடியும் போலீஸ் கஸ்டடி கேக்கணும் .... அதுக்காக தான் நேத்து
அவங்கள அடிக்காம மேம்போக்கா விசாரிச்சது ... இன்னைக்கு எப்படியும்
மேஜிஸ்திரேட் போலீஸ் கஸ்டடிய கிராண்ட் பண்ணிடுவாரு ... அதுக்கப்புறம் நீங்க ரெண்டு பேரும் சுதாகரன் சூரிய கிரனை மட்டும் சந்திக்க ஏற்பாடு செய்றேன்.... வெளிய ரத்தம் வராம ரத்தம் கட்டுற அளவுக்கு நாலு அஞ்சு அடி ஆசை தீர அடிச்சுக்குங்க .. அப்புறம் ஜூடிசியல் கஸ்டடிக்க போனா முடியாது ...

செர்ரி.... உங்களுக்கு தான் முக்கியமா சொல்றேன் ... அவங்கள அடிச்சே கொன்னுடாதீங்க ....
உங்க மன சாந்திகாக தான் இந்த ஏற்பாட்டையே செய்றேன்... ஞாபகத்துல வச்சுக்கோங்க ..." என முடித்தாள்.

மதுரா மற்றும் பாண்டி துரையின் முன்னிலையில்
அதிக மெனக்கடல்கள் இல்லாமல்,
மேம்போக்கான காவல்துறை கவனிப்பே தனலட்சுமி, மீனாட்சியால்(ஈரோட்டில் இருந்து மாயோன் மங்கலம் கொண்டு வரப்பட்டார்) தாள முடியாமல் போக உண்மையைப் பேச தொடங்கினர்.

எடுத்த எடுப்பிலேயே

" சுஜாதா, வைஷ்ணவிக்கு வீட்ல ஏதோ பூஜை செய்யறாங்கன்னு மட்டுந்தேன் தெரியும் ... மத்தபடி அர்த்த ராத்திரில மலையடி வாரத்துல இருக்க காட்டுக்குள்ள நரபலி கொடுக்கிறது ...
கொடுத்து முடிச்சதும் அந்த சவத்தை
கொண்டுகிட்டு போய் கல்குவாரி பக்கத்துல இருக்கிற இடத்துல புதைச்சது எதுவும் தெரியாது ..."
என திட்டவட்டமாக வாக்குமூலம் கொடுத்தார் தனலட்சுமி.

உடனே மதுரா

" வயசு பொண்ணுங்கள நரபலி கொடுத்து இருக்கீங்க ...?.."

" இல்ல ...பொறந்த தலைச்சன் குழந்தைகள அமவாச ராத்திரில நரபலி கொடுத்தா, நாம நினைச்சது நடக்கும் ...." என்ற தனலட்சுமியின் முகம் இதுவரை காணாத அளவிற்கு
வக்கிரமும் அமானுஷ்யமும் சூழ,
மஞ்சள் குங்குமத்தோடு தெய்வீக களையோடு வலம் வந்து கொண்டிருந்தவர் ,தற்போது முற்றிலும் வித்தியாசமாகவும், குரூரமாகவும் காட்சியளித்தார்.

அவரது பேச்சும், கண்களும், நீண்ட நாட்களாக மனச்சிதைவில் இருந்த
விசித்திரமான மன நோயாளியாய் அவரைப் பறைசாற்ற,

" அப்படி என்ன நடக்கணும்னு நீங்க நரபலி கொடுத்தீங்க .... " என்ற கேள்விக்கு ஓரிரு கணம் அமைதி காத்தவர்,

" மாயோன் கோவில்ல ரகசிய அறையில் இருக்கிற நவபாஷாண லிங்கம், மரகதலிங்கத்தை
எடுக்கத்தான் இந்த பூஜையே..."

" எதுக்காக அதெல்லாம் உங்களுக்கு வேணும் ...."

" மரகதலிங்கம் , நவபாஷாண லிங்கம் எல்லாம் ரொம்ப சக்தி வாய்ந்தது .... அது நம்ம வீட்ல இருந்தா நாம நெனச்சதெல்லாம் நடக்கும் ... நெனச்ச பதவியை அடையலாம் ....
உடம்புக்கு நோய் நொடியே வராது, அதைவிட சாவே அண்டாது ... அப்படியே செத்தாலும் சொர்க்கம் கிடைக்கும் ...
ஓலைச்சுவடில ரகசிய அறையில்
நிறைய நவபாஷாண லிங்கம் மரகதலிங்கம் இருக்கிறதா சொல்லப்பட்டு இருக்கு ...
எங்களுக்கு தேவையானதை எடுத்துக்கிட்டு மீதிய வெளிநாட்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு விக்கிறதுக்காகத்தேன்..."

" சரி இந்த மாறி நரபலி கொடுத்தா,
ரகசிய அறையில் இருக்கிற மரகத லிங்கமும் நவபாஷாண லிங்கமும் தானா வெளியே வந்திடுமா ...." என்றாள் மதுரா கோவத்தை அடக்கிக் கொண்டு.

" ரகசிய அறைக்குள்ள நுழையனும்னா பிரவேச மந்திரம் தெரியணும் ...
அந்தப் பிரவேச மந்திரம் தெரிய வரணும்னா 21 தலைச்சன் குழந்தைகளை அமாவாச ராத்திரில தெற்கு திசையை பார்த்து பலி கொடுக்கணும் ...."

" இதுவரைக்கும் எத்தனை குழந்தைகளை பலி கொடுத்து இருக்கீங்க ...." உள்ளுக்குள் பொங்கிய கோபத்தை கட்டுப்படுத்திய படி மதுரா கேட்க

" ஏழு குழந்தைகள பலி கொடுத்திருக்கோம் ....
ஏன்னா தலைச்சன் குழந்தைங்க கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்...."

" எப்போதிலிருந்து கொடுக்க ஆரம்பிச்சீங்க ...ஐ மீன் எத்தனை வருஷமா .... இந்த வேலையை செஞ்சு கிட்டு இருக்கீங்கன்னு கேக்குறேன் ..."

" கடந்த ரெண்டு வருஷமா தான் ....
முதல்ல மரகதலிங்கம் நவபாஷண லிங்கத்தை எடுக்க வேற வேற வழிகளை கையாண்டோம்.... எதுவுமே பலனளிக்கல .... அதனால தான் இந்த வழியை தேர்ந்தெடுத்தோம் ..."

" ஏன் திடீர்னு ரெண்டு வருஷமா மரகதலிங்கம், நவ பாஷாண லிங்கத்தை எடுக்கணும்னு நினைச்சீங்க ...."

" திடீர்னு இல்ல .... ரொம்ப வருஷமாவே இந்த லிங்கங்களை எடுக்கணும்னு போராடிகிட்டுதேன் இருக்கோம் ... ஆனா மூர்த்தியார் இருக்கும் போது இதெல்லாம் செய்ய முடியாது.... ஊர்ல அவருக்கு தெரியாம ஒரு விஷயம் நடக்காது எப்படியாச்சும் கண்டுபிடிச்சிடுவாக....
கடைசி காலத்துல தான் சில விஷயங்களை கண்டுபிடிக்க முடியாம போயிட்டாக ..."

அப்போது மதுராவிற்கு, கிருஷ்ணா தனசேகரன் மற்றும் தனலட்சுமியை பற்றி கூறியவைகள் அனைத்தும் நினைவிற்கு வந்தது.

கிருஷ்ணா ஷில்லாங்கில் இருந்த சமயத்தில் அந்த ஆறு மாத காலத்திற்குள்ளாகவே திடமாக இருந்த மூர்த்தியாரின் உடல்நிலை காரணமே இல்லாமல் மளமளவென மோசம் அடைந்தது ....

அவன் தலை தீபாவளிக்கு வந்த சமயத்தில்,
சுதாகரன் ஒரு பையில் எலுமிச்சம்பழம், கருப்பு கயிறு, கருப்பு துண்டு சகிதமாக செய்வினை செய்தது போல் எதையோ கொண்டு வந்து மூர்த்தியாரின் பண்ணை இல்லத்தில் மறந்து விட்டுச் செல்வது போல் சென்ற மறுநாளே மூர்த்தியாரின் கால்கள் முற்றிலும் சுவாதீனமற்று
அவர் சக்கர நாற்காலியில் அமரும் நிலை வந்ததெல்லாம் .... அவள் மனதில் வந்து போக,

" எனக்கு இந்த செய்வினை, பில்லி, சூனியம் மேல எல்லாம் நம்பிக்கை இருந்ததில்ல .... ஆனா இப்ப சில விஷயங்களை கேள்வி படும் போது அதெல்லாம் உண்மையோனு தோணுது ....
திடீர்னு மூர்த்தியாரோட உடல்நிலை அடி வாங்கினது, அவர் நகரவே சக்கர நாற்காலியை பயன்படுத்துற அளவுக்கு மோசமடைஞ்சது...
கை கால் அடிச்சுபோய் , பேச முடியாம
இறந்து போனது ....
சரியா சொன்னா நல்லா இருந்த மனுஷன் ஒரு ஆறு ஏழு மாசத்துக்குள்ளையே இவ்ளோ ஹெல்த் இஷூஸ சந்திச்சு செத்து போயிருக்காரு.... இப்ப எனக்கு லேசா டவுட் வருது .... அவர் சாவணும்னு ஏதாவது மந்திரம் , மாயம் பண்ணிங்களா ..."

" அப்படி எல்லாம் எதுவும் இல்லை ..." என மீனாட்சி குறுக்கே பாய,

" நான் உன்னை கேட்கல ...
வாங்கின அடி போதாதா ...
ஒழுக்கமா பதில் சொல்லிடுங்க இல்ல அடி வாங்கி சாவீங்க ..." என்ற மதுராவின் கரம் மீனாட்சியின் கன்னத்தை பதம் பார்க்க, பயந்து போய் தனலட்சுமி பேசத் தொடங்கினார்.

" ஆமா .... மூர்த்தியாருக்கு செய்வினை தான் செஞ்சோம் .... "

" அவ்ளோ நாளா இல்லாம திடீர்னு ஏன் செஞ்சீங்க .....என்ன காரணம் ..."

" ரொம்ப நாளைக்கு முந்தியே அவருக்கு செய்வினை செய்யனும்
நினைச்சுக்கிட்டு தான் இருந்தோம் ...
ஆனா அவர் ஜாதகத்தை பார்த்த நம்பூதிரி, அவருக்கு நேரம் ரொம்ப நல்லா இருக்கு ..... இப்ப அவருக்கு செய்வினை வச்சா அந்த செய்வினை நமக்கு தான் திருப்பி அடிக்கும்னு
சொல்லிட்டாரு ...
அதனால தான் மூர்த்தியாரோட ஜாதகத்துல கெட்ட நேரம் வர வரைக்கும் காத்துக்கிட்டு இருந்து வச்சோம் ..."

" காரணம் என்ன ..."

" ரொம்ப வருஷமா கட்சில இருக்கிற என் புருஷனுக்கு எந்த பதவியும் கொடுக்கல ... அவருக்கு பதிலா யார் யாரையோ தொகுதி வேட்பாளரா அறிவிக்கணும்னு ஆசைப்பட்டாரு... எவ்வளவோ நானும் என் புருஷனும் கேட்டு பார்த்துவிட்டோம் ....
எங்கள அவர் கண்டுக்கவே இல்லை ...
அவர் செத்தா தான் என் புருஷனுக்கு பதவிங்கிற நிலை வந்ததும்தேன்
இந்த வேலையை கையில் எடுத்தோம் ..."

மதுராவிற்கு மட்டுமல்ல உடனிருந்து கேட்டுக் கொண்டிருந்த பாண்டிதுரைக்கு கூட
பதவிக்காக சொந்த இல்லத்து மனிதர்களை ஏறக்குறைய கொலை செய்த அந்த பெண்மணியை கண்டு
கோபம் கொந்தளித்தது.

" ஆனா லாஜிக் இடிக்குதே.... மைதீன் தொகுதி வேட்பாளரா நிற்க கூடாதுனு தான் அவர் பொண்ணு ஹசினாவ கடத்தனீங்க.... உடனே மைதீனும் பயந்து போய் பின் வாங்கிட்டாரு ...
அப்புறம் மூர்த்தியார் உங்க பையன் வாசுவை தானே நிறுத்தினாரு...
பின்ன என்ன பிரச்சனை உங்களுக்கு ..."

தனலட்சுமியும் மீனாட்சியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

" என்ன சிக்னல் போகுது .... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க ..."

" வாசு எனக்கு பொறந்தவன் கிடையாது... "

மதுரா அதிர்ச்சியில் உறைந்து போக,

" என்ன சொன்னீங்க ..... திருப்பி சொல்லுங்க... வாசு உங்க பையன் இல்லையா ..."

" இல்ல ....
என் தல பிரசவம் இந்த ஊர்ல தான் நடந்துச்சு ...
எனக்கு தலைச்சன் ஆண் குழந்தை பொறந்துச்சு ... பொறந்து அரை நாளுக்கு மேல நல்லா தான் இருந்துச்சு ...திடீர்னு மூச்சு விட முடியாம துடிச்சி உடனே செத்துப் போச்சு ....
குழந்தை பொறந்ததும் சந்தோஷத்துல
என் அண்ணன் தனசேகரன் என் வீட்டுக்காரருக்கு போன் பண்ணி சொல்லிட்டான் ....
அவரு அப்ப அந்த பொம்பளையோட(ராஜலட்சுமி) வெளியூர்ல எங்களுக்கு சொந்தமான தோட்டத்துல இருந்தாரு...
மத்தா நாள் குழந்தையை பார்க்க ஊருக்கு வரேன்னு சொல்லிட்டாரு....
அப்ப எனக்கும் என் புருஷனுக்கும் நல்ல உறவு கிடையாது ...அவருக்கு என்னைய கண்டாலே புடிக்கவே புடிக்காது ...
பொறந்த குழந்தை இறந்து போச்சுன்னு சொன்னா எங்க உறவு நிலைக்காம போயிடுமோன்னு பயம் வந்துருச்சு ...
அதோட அந்த பொம்பள ராஜலஷ்மி கிட்ட நான் தோத்த மாறி ஆயிடும் ... அவளுக்கு அப்ப சூரிய கிரன் 6 மாச குழந்தை ...
என்ன செய்யலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கிற சொல்ல தான், என் நிலைமைய புரிஞ்சுகிட்ட அப்ப எங்க வீட்ல வேலை செஞ்ச பாண்டியம்மா
அவளுக்கு தெரிஞ்ச ஒரு அனாதை பொம்பள ஆண் குழந்தையை பெத்து போட்டு செத்துப் போயிட்டானு அந்த குழந்தைய கொண்டுட்டு வந்து கொடுத்தா ....

என் வாழ்க்கையில் நான் தோத்து போவக்கூடாது, என் வாழ்க்கையை நான் காப்பாத்திக்கணும்னு நெனச்சு அந்த குழந்தையை தான் எனக்கு பிறந்த குழந்தையா என் வீட்டுக்காருக்கும், மதுரைக்கு கல்யாணத்துக்கு போயிட்டு வந்த என் மாமனார் மாமியார் கிட்டயும் காட்டினேன்... வைஷ்ணவி மட்டும்தான் எனக்கு பொறந்தவ..." என முடித்தார் கூடுதல் தகவலோடு.

" கிருபாகரனுக்கு தெரியுமா வாசு உங்களோட குழந்தை கிடையாதுன்னு .."

" இப்ப வரைக்கும் தெரியாது .... அதோட அவருக்கும் சின்ன வயசுல இருந்தே ஏனோ வாசுவைக் கண்டாலே புடிக்காது ....."

மதுரா ஒரு ஆயாச பெருமூச்சை வெளியிட ,

" மேம், ஏதோ மர்ம கதை கேக்குற மாதிரி இருக்கு ..." என்றார் பாண்டித்துரை லேசான அதிர்ச்சியோடு.

" சரி.... இதுல யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்காங்க ..."

" என் பொண்ணு வைஷ்ணவி என் அண்ணன் பொண்ணு சுஜாதாவை தவிர மத்த எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரியும். ..."

" ஓ மை காட் .... ஒரு பெரிய அரசியல் குடும்பமே இவ்ளோ பெரிய சமுதாய அவலத்தை செஞ்சிருக்கே....
சரி... இந்த பூஜை எல்லாம் நடத்தறது யாரு ..."

" உக்ர ராயர் நம்பூதிரி ...."

" அந்த ஆளு எங்க இருக்காரு ..."

" கேரளால கொல்லத்துக்கு போற வழியில இருக்கிற காட்டுல இருக்காரு ... அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போவாரு ...
தேவைனா நாங்களும் அங்க போவோம் .."

அவர் பேசப் பேச, அவரது முகம் காண சகிக்காமல் சூனியக்காரி முகம் போல் மேலும் விகாரமாக மாறிக்கொண்டே சென்றது.



- மாயோனின் மாயங்கள் தொடரும்
 
Back
Top