Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 102

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
640
அத்தியாயம் 102


காலனியை அடைந்து திவாகரன் காரை நிறுத்தியதுமே , அதிலிருந்து இறங்கிய
ஜோதி, சூர்யா ஜோடியை கண்டு மிகுந்த உற்சாகத்தில் பரமு, மேஜர், இந்திரா ஆகியோர் புடை சூழ்ந்து கொண்டு நலம் விசாரிக்க, ஏற்கனவே தாய் தந்தை மூலமாக அவர்களைப் பற்றி அறிந்திருந்ததால், அவர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் அதே ஆரவாரத்துடன் இளையவர்களும் எதிர்வினை ஆற்ற,
ஏதோ நெருங்கிய சொந்த பந்தங்களின் சந்திப்பு போல் , அங்கு கலகலப்பிற்கு பஞ்சம் இல்லாமல் போனது.

"ஜோ, நீ அச்சு அசலா உன் அப்பா மாதிரியே இருக்க .... உன் அடர்ந்த தலைமுடியும் , கொஞ்சம் படர்ந்த நெத்தியும் மட்டும் தான் உங்க அம்மா மாதிரி இருக்கு ... பொம்பள புள்ளைங்க அப்பா மாறியே இருந்தா அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க ... அது மட்டும் இல்ல அப்பாவும் அவங்க மேல ரொம்ப அன்பா இருப்பாங்கன்னு சொல்லுவாங்க .... அதான் திவா தம்பி, எப்பவுமே உன்ன பத்தியே பேசிகிட்டு இருக்கு போல ..." என பரமு திருஷ்டி கழிப்பது போல் ஜோதியின் கன்னம் வழித்து பெருமை பேச,

" ஐயோ ஆண்ட்டி ... தப்பா சொல்றீங்க.... என் அப்பாவுக்கு எப்பவும் என் அம்மாவை தான் புடிக்கும் .... அவங்கள பத்தி தான் பேசிகிட்டு இருப்பாரு ... அவங்கள பத்தி தான் நினைச்சுக்கிட்டே இருப்பாரு .... நீங்க சரியா கவனிக்கல ..."

ஜோதி திவாகரனை பார்த்து குறும்புத்தனமாய் கண் சிமிட்டு விட்டு பரமுவை பார்த்து சொல்ல,

" சரியா சொன்ன ஜோ .... மாமாவுக்கு எப்பவுமே அத்தை மேல தான் அக்கறை ஜாஸ்தி ... பொண்ணு எல்லாம் ரெண்டாம் பட்சம் தான் .... "

என சமயம் பார்த்து சூர்யா அவளுக்கு ஆதரவு கரம் நீட்ட, தாமரை வெட்கத்தில் லேசாக நெளிய,

" என் பொண்ணும் மாப்ளயும் சரியா தான் சொல்றாங்க .... எனக்கு தாமரை தான் எல்லாமே .... அவ வந்ததுக்கு அப்புறம் தானே என் பொண்ணு பொறந்தா.... அதுக்கப்புறம் தானே வசதி வாய்ப்பு எல்லாமே வந்தது .... " என திவாகரன் மிகுந்த பெருமையோடு சொல்லிக்கொண்டே தன்னவளின் தோள் மீது கை போட, அவளோ லேசான கூச்சத்தோடு வெடுக்கென்று விலகிக் கொள்ள,

" உங்களுக்கு கொஞ்சமும் சலிச்சவ இல்ல செல்வி .... நீங்க சீக்கிரம் காலையில பேக்டரிக்கு கிளம்பி போயிட்டா போதும்... உடனே பரமு கிட்ட போய் , அக்கா அவர் சாப்பிட்டு போனாரானு கேட்க ஆரம்பிச்சிடுவா .... அதே மாதிரி நைட் 9 மணி ஆயும் நீங்க வரலன்னா , நேரம் ஆயிடுத்தே மாமி , ஏன் இன்னும் இவர் வரலனு என்கிட்ட கேக்க ஆரம்பிச்சிடுவா ..."

என தாமரையின் சார்பாக இந்திரா பேச,

" அப்ப என்னை பத்தி என்னை தவிர எல்லார் கிட்டயும் போய் விசாரிச்சு இருக்கேன்னு சொல்லு ..."

திவாகரன் குறும்போடு தாமரையை பார்த்து வினவ, அவளோ வெட்கத்தில்
களுக்கென்று சிரிக்க, உடன் அனைவரும் இணைந்து கொண்டனர்.

இப்படியாக திருமணத்திற்கு இரண்டே நாட்கள் இருக்கும் நிலையில் இளையவர்களின் வருகையால் ஏதோ பெரும் பண்டிகைக்கு தயாராவது போல் இந்திராவின் இல்லம் மற்றும் மேஜரின் இல்லமும் உற்சாகத்தால் நிரம்பி வழிய தொடங்கின.

பரமுவின் இல்லத்தில் அன்றைய இரவு விருந்தினை கலகலப்பாக கலந்துரையாடிய படி முடித்துக் கொண்டு தாய் தந்தை மற்றும் கணவனோடு தாயின் குடியிருப்பிற்கு வந்த ஜோதி, பெற்றவளுக்காக பிரத்தியேகமாக அலைந்து திரிந்து வாங்கி வந்திருந்த புத்தாடைகள், ஆபரணங்கள் , அழகு சாதன பொருட்களை ஆனந்தமாக காட்ட, திவாகரனும்
தன்னவளுக்காக பிஸ்தா பச்சையில் கரு நீல நிற அன்ன வடிவ தங்க ஜரிகை கொண்ட காஞ்சி பட்டு அதற்கு பொருத்தமான ஆரி வேலைப்பாடுகள் செய்த கரு நீல நிற ரவிக்கை மற்றும் மரகதமும் வைரமும் கலந்து செய்யப்பட்ட அணி மணிகள் ஆகியவற்றை வரிசைப்படுத்த , மகளின் பாசத்திலும் கணவனின் காதலிலும் திக்கு முக்காடி போனவள் ,

"இதெல்லாம் எப்ப வாங்கனீங்க... " இருவரையும் ஒருசேர பார்த்து கேட்க,

"அப்பா , ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே இந்த பிளான் எல்லாம் சொல்லிட்டாரு ... அப்பவே கொஞ்சம் கொஞ்சமா ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சிட்டேன் ..."

என மகள் முடித்ததும், தாமரை தன்னவனை ஆச்சரியத்தோடு நோக்க ,

" போன தடவை ஊருக்கு போய் இருந்தேனே ஞாபகம் இருக்கா .... அப்பவே அங்க இந்த புடவைய எடுத்து, உன்னோட அளவு பிளவுஸையும் கொடுத்து, இந்த மாதிரி ஆரி வொர்க் எல்லாம் பண்ண சொல்லி கொடுத்துட்டு வந்துட்டேன் ... அவங்க கிட்டத்தட்ட ஒரு மாசம் எடுத்துக்கிட்டு, நேத்து தான் கொரியர்ல அனுப்பினாங்க... நகை எல்லாம் இங்க தான் எடுத்தேன் ... புடிச்சிருக்கா ..."

என ஆவலாய் அவன் கேட்க, தனக்காக திட்டமிட்டு சிறு சிறு விஷயங்களில் கூட கவனம் செலுத்தி நேர்த்தியாகவும் சிறப்பாகவும் செய்து முடித்து விட்டு கருத்து கேட்கும் கணவனை காதலோடு பார்த்து,

" ரொம்ப நல்லா இருக்குங்க .... சரி ... எனக்கு வாங்கினத காட்டிட்டிங்க .... உங்களோடதெல்லாம் எங்க ..." என்றாள் ஆர்வமாய்.

" இதோ ... இந்த பட்டு வேட்டி சட்டை என்னோடது ... இது சூர்யாவோடது... இந்த லெமன் எல்லோ வித் பர்பிள் பார்டர் பட்டு புடவை ஜோ பாப்பாவோடது... எப்படி என் செலக்ஷன்..."

அவன் மிகுந்த நாட்டத்தோடு காட்டிக் கொண்டே செல்ல, நடக்கவிருக்கும் திருமணத்தின் மீதும், குடும்ப உறுப்பினர்களின் மீதும் அவனுக்கு இருக்கும் பற்றும் பாசத்தையும் கண்டு லயித்து போனவள்,

" ரொம்ப அருமையா இருக்கு வசி .." என்றாள் தன்னை மறந்து அவனது விழிகளுக்குள் நோக்கியபடி வெகு லேசான கிறங்கிய குரலில்.

மனையாளின் புதுவித முக மாற்றமும், குழைந்த பேச்சும் அவனை வெகுவாகக் கவர,

" என்னது அது ... வசி.... " கண்களில் குறுகுறுப்போடு அவன் அவளை நெருங்கி வினவ, அவளோ தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் மகள் மருமகளை பார்வையால் சுட்டி காட்டி

" அப்புறம் சொல்றேன் ..."

லேசான வெட்கத்தோடு சொல்ல , அதுவரை கண்டிராத தன்னவளது நாண முக பாவமும் , ரகசிய பரிபாஷையும் அவனுக்கு வியப்பை தர, தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகமாக,

" என்ன தாமரை .... சொல்லுடி ..."

அவன் குழைவான குரலில் நெருங்கி சன்னமாக வினவும் ,

" அப்பா , இந்த மெஹந்தி மாடல்ஸ் எப்படி இருக்குன்னு பாருங்க .... நானும் அம்மாவும் நாளைக்கு போட்டுக்க போறோம் ...."

என மகள் இடை வெட்டவும் சரியாக இருக்க,

" பொண்ணு கேக்கறா இல்ல .... அது என்னன்னு பாத்து சொல்லுங்க... இதெல்லாம் எனக்கு தெரியாது ..."

மென் புன்னகை பூத்தபடி தாமரை தருணத்தை மடைமாற்ற ,
அவளை முறைக்க முயன்று தோற்றபடி சிரித்துக் கொண்டே மகளுடனான உரையாடலில் மூழ்கிப் போனான் மன்னவன் .

பிறகு இரவு 11 மணி வரை கலகலப்பிற்கு பஞ்சம் இல்லாமல் மருமகன் , மகள் மனைவியுடன் நேரம் செலவழித்தவன்,

" நாளைக்கு நிறைய வேலை இருக்கு ... காலையில சீக்கிரமே எழுந்துக்கணும் .... இப்ப போய் படுத்த தான் முடியும் ... நான் கிளம்பறேன்... குட் நைட் ..." என அனைவரையும் ஒரு சேரப் பார்த்து சொல்லிவிட்டு விடைபெறும் போது தான் , தாய் தந்தைக்கிடையே மிச்சம் இருக்கும் இடைவெளி ஜோதிக்கு புரிய வர , அவளுக்கும் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகி இருந்ததால் கணவன் மனைவிக்கிடையேயான உணர்வு பரிமாறல்களை பற்றிய மனமுதிர்ச்சியும் சற்றே கூடியிருந்ததால், தன் தாய் தந்தையின் இந்த பிரிவிற்கு தன்னுடைய திருமணத்தைத் தாண்டி வேறு ஏதோ காரணம் இருப்பதாக தோன்ற , உடனே அதனை வெளிப்படையாக தாயிடம் கேட்டாள்.

" எல்லா குடும்பத்துலயும் நடக்கிற சொத்து பிரச்சனை தான் ஜோ ... உங்க அப்பாவை வீட்டு விஷயத்துல உங்க பாட்டி தாத்தா அத்தை எல்லோரும் ஏமாத்திட்டாங்க ... அந்த விஷயத்தை உங்க அப்பா என்கிட்ட இருந்து மொத்தமா மறைச்சிட்டாரு ... ஒரு கட்டத்துல ஏதோ ஒரு பிரச்சனை வரும் போது தான் அது எனக்கு தெரிய வந்தது ... நான் அவர் கிட்ட என்னைக்குமே எதுவுமே மறைச்சதில்ல... ஆனா அவரு இவ்ளோ பெரிய விஷயத்தை என்கிட்டே இருந்து மறைச்சிட்டாரேனு ஒரு கோவம் .... கணவன் மனைவிக்குள்ள எப்பவுமே ஒளிவு மறைவு இருக்கக் கூடாதும்மா ... அதனால தொடங்கின பிரச்சனை தான் இது ... உன் கல்யாண விஷயத்துலயும் அவரு என் பேச்சை கேட்கல ... அதான் அவருக்கு நான் முக்கியம் இல்ல போலனு அவர் வாழ்க்கையை விட்டே விலகனும்னு அப்படி ஒரு முடிவு எடுத்தேன் .... "

என 90% பொய்யும் , 10% மெய்யும் கலந்து தாமரைக் கோர்வையாய் சொல்லி முடிக்க,

" இப்ப தான் உங்க வலி எனக்கு புரியுதும்மா ... சூர்யா எல்லாரையும் விட எனக்குத்தான் முன்னுரிமை கொடுக்கணும்னு எனக்கு தோன்ற மாதிரி தானே, உங்களுக்கும் தோணி இருக்கும் ... ஆனா அப்பாவுக்கு எல்லாமே நீங்க தாம்மா... அதை இப்ப நீங்க புரிஞ்சுகிட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன் ....."

என மகள் நயந்து கூற ,

" புரிஞ்சுகிட்டேன் டா ...." என்றபடி அவளை தழுவிக் கொண்டாள் தாமரை.


மறுதினம் இந்திரா வீட்டில் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட , மிகுந்த கலகலப்போடு அந்த விருந்து களைகட்ட, , மாலையில் தாயும் மகளும் அழகு கலை நிபுணரை அழைத்து தங்கள் கைகளுக்கு மெஹந்தி போட்டுக்கொள்ள, மறு தினத்திற்கான நிகழ்ச்சி நிரல்கள் குறித்த உரையாடல்கள் ஒருபுறம் நடக்க என
முந்தைய தினம் போலவே அன்றைய தினமும் குதூகலமாக கழிய,
பதின் பருவத்தில் நடந்த திருமணத்தில் பட்டாம்பூச்சிகள் அடிவயிற்றில் பறந்த அதே மனநிலையில் தாமரை இருக்க,
அப்போதைய தன் மனநிலைக்கும் , தற்போதைய மனநிலைக்குமான வித்யாசத்தை எண்ணி வியந்து கொண்டிருந்தான் திவாகரன்.

எந்தப் பெண்ணை ஊர் நாட்டுக்காக திருமணம் செய்து கொண்டானோ ....

எந்தப் பெண்ணைத் தன் வாழ்க்கையில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும் ... என்று கங்கணம் கட்டிக் கொண்டே தாலி கட்டினானோ , அந்த பெண்ணால் தான் இவ்வளவு உயர்ந்து, அந்தப் பெண்ணிற்காகத்தான் தான் இவ்வளவு செய்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணும் போது, வாழ்க்கையே வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் தெரிய, அதில் அவனது அன்பிற்கினியவளின் பொறுமையும் பொறுப்பும் புரிய வர, அந்த நாற்பதுகளில் இருக்கும் முதிர் வாலிபனின் மனது, இருபதுகளாய் ஆரவாரிக்க, அதில் மூழ்கியப்படியே நித்திரையில் ஆழ்ந்து போனான்.


மறுதினம் பத்மநாபசுவாமி கோவிலின் கிழக்கு மாடவீதியில் அமைந்திருந்த அந்த அழகிய சிறிய திருமண மண்டபத்தில், படிய தலைவாரி, மல்லிகை பூ பந்தை நீண்ட கூந்தலில் சுற்றி முடிவில் குஞ்சலமிட்டு, பிஸ்தா பச்சையும் கரு நீல ஜரிகையும் கொண்ட பட்டுப் புடவையை வெகு பாந்தமாக தரித்து, நெத்திச்சுட்டியில் இருந்து ஒட்டியாணம் வரையிலான ஆபரணங்களை நேர்த்தியாக பூட்டிய மணப்பெண்ணாய் நாணத்தோடு தாமரை அமர்ந்திருக்க, அவளுக்கு அருகே பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாய் வீற்றிருந்த திவாகரன், உற்றார்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க, அனைவரின் அட்சதையோடும் ஆசியோடும்
மனம் கொள்ளா நிறைவுடன் மாங்கல்யத்தை தன் மனதிற்கினியவளின் மணி கழுத்தில் கட்டி தன்னவளை மீண்டும் தன்னுடையவளாக்கி கொண்டான்.

ஆயிரம் ஹாசியங்கள் பேசியபடி நாத்தனார் முடிச்சை கம்பீரமாய் போட்ட பரமு,

" இந்த உலகத்துலயே விநாயகருக்கு அப்புறம் அம்மா அப்பா கல்யாணத்த பக்கத்துல இருந்து நடத்தி வச்சி இப்படி ஆசை தீர பார்த்தது நீதான் ..." என ஜோதியை பார்த்து சொல்ல, அவளும்

" அட .. ஆமா இல்ல ..." என ஆர்ப்பரிக்க,

" திவா, நீயும் செல்வியும்
இப்ப தான் மொதல் முறையா கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி, அவ்ளோ அருமையா இருக்கீங்க ...." என மேஜர் மனமார பாராட்ட,

" உண்மையிலயே இவாளுக்கு இவ்ளோ பெரிய பொண்ணு இருக்கானு சொன்னா, யாருமே நம்ப மாட்டா ... ரெண்டு பேருமே இந்த மணக்கோலத்தில் அவ்ளோ அம்சமா இருக்கா.... "

என இந்திரா மனமார மெச்ச, காலனியில் இருந்து வருகை தந்திருந்த பெரும்பாலானோரின் மனதிலுமே அப்படியான எண்ணமே தோன்ற , அதை பலர் வெளிப்படையாகவே கலகலப்புடன் பகிர, திருமணமே திருவிழா போல் கலகலப்பிற்கு பஞ்சம் இல்லாமல் களை கட்ட தொடங்கின.

அன்று அவதூறு பேசிய
லதா நாயர், லூசி , ரமணி அம்மா போன்றவர்கள் அங்கு வந்திருந்து பார்வையாலும் தங்களது வாழ்த்தின் மூலமும் மறைமுகமாக மன்னிப்பு வேண்ட, அதற்கு

"நீங்க எல்லாரும் வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் ..." என்று சொல்லி அவர்களின் குற்ற உணர்வை போக்கி, அவர்களை வெகு இயல்பாக உணர வைத்தான் திவாகரன்.

"திருமண வாழ்த்துக்கள் அண்ணே .... நீங்களும் அண்ணியும் 20 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திங்களோ, அப்படியே தான் இப்பவும் இருக்கீங்க ... இன்னும் சொல்லனும்னா அதைவிட ரொம்ப நல்லா இருக்கீங்க ... உங்க ரெண்டு பேருக்கு மட்டும் வயசே ஆகாதா .... "

என வேம்பு தன் மனையாள் குழந்தைகளோடு வந்திருந்து வாயார வாழ்த்த,

" ஆமா தம்பி, நீங்களும் அம்மாவும் அப்படியே தான் இருக்கீங்க .... ஜோதி பாப்பாவ உங்க பொண்ணுனு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க ... அது உங்க தங்கச்சி மாதிரி தெரியுது ..."

என ஓட்டுனர் பழனிசாமியும், தன் குடும்பத்துடன் வந்து வாழ்த்து கூறி மகிழ,

தன் நிறத்தை முற்றிலுமாய் மாற்றும் அதிக ஒப்பனை தாமரைக்கு பிடிக்காது என்பதால், அழகு கலை நிபுணர்களை யாரையும் வைக்காமல் , ஜோதியே வெகு இதமாக, கண்களை உறுத்தாமல் தன் தாய்க்கு முக ஒப்பனை செய்திருக்க, அதில் வெகு அழகாய்
மிளிர்ந்த மனையாளை கண்டு சொக்கிய திவாகரன்,

"தாமரை, வீட்டுக்கு போனதும் உனக்கு சுத்தி போடணும் ... அவ்ளோ அழகா இருக்க ..." என அவன் சன்னமாக ஜொள்ள,

" நீங்களும் தான் ..... எல்லாரும் உங்களையே தான் பார்த்துக்கிட்டு இருக்காங்க ... " என்றாள் அவன் நாயகி மென் புன்னகையோடு.

பிறகு மணமக்கள் மணக்கோலத்தில் பத்மநாபசுவாமியை தரிசித்து விட்டு வர,
அதற்கு மேல் நண்பர்களுடன் ஆரவாரம் திருமண விருந்து, உற்றவர்கள் விடை பெறுதல் ஆகியவற்றில் நேரத்தை செலவழித்து விட்டு இறுதியில் மிகுந்த மன நிறைவோடு வீடு வந்து சேர்ந்தனர்.

இந்திரா ஆரத்தி எடுத்து இருவரையும் வரவேற்க,
பால் காய்ச்சுதல், விளக்கேற்றுதல் போன்ற சடங்குகள் இனிதாக நடந்தேறி முடிந்ததும்,
சற்று நேரம் தாய் தந்தையுடன் அளவளாவி விட்டு,

" அப்பா, நானும் மாமாவும் இப்பவே கொச்சினுக்கு கிளம்பறோம் .... இன்னும் ஒரு வாரம் கேரளா முழுசும் சுத்தி பாக்க போறோம் ... " என்றாள் ஜோதி குதூகலத்தோடு.

" ஏன்டா இப்ப கிளம்பற ... உனக்கு கொச்சினுக்கு தான போகணும் .... நாளைக்கு நாம எல்லாரும் போலாம் ..."
திவாகரன் மகளிடம் வாஞ்சையாய் சொல்ல,

" அப்பா ... இப்ப தான் உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு ... அம்மாவோட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க ... நானும் மாமாவும் கேரளாவ சுத்தி பாத்துட்டு, பொள்ளாச்சிக்கும் போய் ஒரு வாரம் இருந்துட்டு வரோம் .... அது வரைக்கும் என்ஜாய் யுவர் பிரைவசி ... "

" நாங்க எப்பவும் ஒண்ணா தான் இருக்கோம் .... நீங்க ரெண்டு பேரும் தான் ஊர்ல இருந்து வந்திருக்கீங்க ... எங்க கூட கொஞ்ச நாள் இருக்கணுமில்ல ... "
தாமரை வெள்ளந்தியாய் கேட்க

" ஐயோ அம்மா.... உங்களுக்கு மட்டும் கல்யாணம் ஆகல ... எனக்கும் தானே ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆயிருக்கு ... எனக்கும் பிரைவசி வேணும்ல ... அதான் பக்கத்து இலைக்கு பாயசம்னு சொன்னேன் ..."

ஒற்றை கண் சிமிட்டி ஜோதி குதூகலமாய் சொல்ல, திவாகரனும் சூர்யாவும் வெடித்து சிரிக்க ,

" அடிப்பாவி ... என்னமா பேசுற ..." என தாமரை அசந்து போக,

" கிளம்பறோம்மா ...." என்றபடி பெற்றவர்களின் தாழ் பணிந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு மிகுந்த நிம்மதியோடு தன் கணவனுடன் புறப்பட்டாள் ஜோதி .


--- பெண்மை மலரும் ...
 
Back
Top