Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

இறுதி அத்தியாயம்

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
640
105 இறுதி அத்தியாயம்

சிவபோக சக்கரத்திலிருந்து இறங்கிய கிருஷ்ணா , மாதவியோடு அதனைப் மூன்று முறை வலம் வந்து வணங்கிவிட்டு, கிளம்ப எத்தனிக்கும் போது,

" வேந்தே, நந்தி தேவர் மலைக்கு வந்து சிவபோக சக்கரத்தை தரிசிப்பதென்பது, சாமானியனுக்கு கிட்டாத வரம் ..... அது தங்கள் இருவருக்கும் கிட்டியது, தங்கள் பூர்வ ஜென்மத்தின் பலன் ...
வானில் மின்னி மறைந்த சர்வேஸ்வரனை தரிசித்ததற்கு அடையாளமாக தங்கள் இருவரது நெற்றியிலும் சிவத்திலகம் உருவாகும், அது தாங்கள் யார் என்பதை பிறருக்கு அடையாளப்படுத்தவும், சுரங்கத்தில் பயணிக்கும் போது பூதகணங்கள் தங்களை அறிந்து கொண்டு உதவுவதற்கும் பயன்படும்...."
என்று கூறிய மாத்திரத்தில்
இருவரது நெற்றியிலும் அம்சமான சிவத்திலகம் உருவாக

" மன்னா, இதுவரை தாங்கள் கடந்து வந்த கரடு முரடு பாதைகள் எல்லாம் பூப்பாதைகளாய் மாறி இருக்கும் ..
சிரமங்கள் ஏதுமில்லாமல் மாயோன் கோவிலை துரிதமாக அடைவதற்கு அது வழி வகுக்கும் ..." என்ற மலையரசியிடம் நன்றி தெரிவித்துவிட்டு இருவரும் மாயோன் கோவிலை நோக்கி பயணப்பட்டார்கள்.

மாதவியும் கிருஷ்ணாவும் மாயோன் கோவிலை அடையும் முன்பே, பத்து அர்ச்சகர்களால் மேள தாளங்கள் முழங்க சிறப்பான முறையில் அபிஷேக ஆராதனைகள் ராக்கால பூஜையாக
மூலவர் சன்னதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பிரம்ம பௌர்ணமி என்பதால், வெளியூர் உள்ளூர் என பிரித்தறிய முடியாமல்
அந்த ராக்கால பூஜையில் கூட்டம் கூட்டமாக மக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

செர்ரி, மதுரா மற்றும் சங்கையா பக்தி பெருக்கில் அந்த மாயோனை தரிசித்துக் கொண்டிருக்க, குழந்தை மயூரி செர்ரியின் தோளில் தூங்கிக் கொண்டிருந்தாள்.

பூஜை முடியும் வரை, மாதவியும் கிருஷ்ணாவும் மக்களோடு மக்களாக கலந்து கண் மூடி தியானித்திருந்தனர்.

பூஜை முடிந்ததும் அனைவருக்கும் குங்குமம்,
தீர்த்தம் வழங்கியபடி வந்த அர்ச்சகர்,
கிருஷ்ணா மாதவியின் நெற்றியில் இருந்த சிவ திலகத்தை கண்டு ஒரு கணம் நிதானித்து,

" நீங்க ரெண்டு பேரும் ....." என தொக்கி நிறுத்தி,

" நந்தி தேவர் மலைக்கு போயிட்டு வரேளா..." என்றார் ஒருவித பரவசத்தோடு.

நிரம்பி வழியும் கூட்டத்திலும் அவரது பார்வையில்
அந்த சிவத்திலகம் பதிந்தது ஆச்சரியத்தை தர,

" ஆமா ...." என ஆரம்பித்து
ஓரளவிற்கு அனைத்து தகவல்களையும் கிருஷ்ணா கூறி முடிக்க, கேட்டுக்கொண்டிருந்தவரின் முகத்தில் அதிசயமும் ஆச்சரியமும் போட்டி போட, பக்தியில் அவர் மெய் சிலிர்த்து

" சர்வேஸ்வரா ..... ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி ரகசிய அறையில நந்தி தேவரால் வைக்கப்பட்ட நவபாஷாண லிங்கம்,
அப்பவே சுயம்புவா உருவான மரகத லிங்கத்தையும் என் கண்ணால தரிசனம் பண்ண போறதும் இல்லாம அன்றாடம் பூஜையும் செய்யப் போறேனே...
இதைவிட நேக்கு வேற என்ன பாக்கியம் வேண்டும் ...." என்று
ராதே கிருஷ்ணா சிலைக்கு அருகில் இருக்கும் சிவலிங்கத்தை பார்த்து
பக்தி வெள்ளத்தில் உணர்ச்சிப் பிழம்பாய் கூறியவர், உடனே
கிருஷ்ணாவிடம்,

" இந்த வருஷத்தை குறிப்பிட்டு அப்ப வர பிரம்ம பௌர்ணமிக்கு
மரகத லிங்கம், நவ பாஷாண லிங்கம் பிரதிஷ்டை பண்ணப்படும்னு ஓலைச்சுவடியில் இருக்கிறதா என் தோப்பனார் சொன்னதுண்டு ...

அவர் தன்னோட 102 வது வயசுல, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் சிவலோகப் பதவி அடைஞ்சேர்...
அது பலிக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ..."
என்றவர் அவர்கள் இருவரையும்
தம்பதி சமேதராய் மூலவருக்கு முன் நிறுத்தி, முதல் மரியாதை செய்து
முடிக்க, மலையரசி கூறியது போல்
கிருஷ்ணாவும் மாதவியும்
மானசீகமாக மூலவரிடம் சுரங்கத்தில் பயணிக்க அனுமதி கேட்க,
அடுத்த கணமே, மூலவர் சிலை
தானாக நகர, அதற்கு அடியில் இருந்த சுரங்கம் தெளிவாக பளிச்சுட்டது.

" செர்ரி, நீ குழந்தை இங்கேயே வச்சிக்க..... "

" அதுக்கென்ன தேவா.... "
என்ற செர்ரியின் பேச்சை இடைவெட்டி,

" அமோகமா போயிட்டு வாங்கோ ...
இங்க இருக்கிற எல்லாரும் உங்களோட வரவுக்காக காத்துண்டு இருப்போம்.... நீங்க திரும்பி வந்து லிங்கங்களை பிரதிஷ்டை பண்றதை பார்க்காம நாங்க யாரும் போக மாட்டோம் ...." என்றார் அந்த தலைமை அர்ச்சகர்.

ஆயிரம் ஆண்டுகள் மூடியிருந்த சுரங்கமாய் அது தெரியவில்லை.

தினமும் கூட்டிப் பெருக்கி சுத்தத்தை கடைபிடிக்கும் இடம் போல் காணப்பட்டது ...

பிரம்ம பௌர்ணமியின் ஒளிவெள்ளம் எங்கிருந்தோ பொழிந்து
அற்புதமாய் வழிகாட்ட, யாதொரு சிரமமும் இல்லாமல் 11 கிலோ மீட்டரை அரை மணி நேரத்திலேயே கடந்து ரகசிய அறையின் மாயக் கதவை அடைந்தனர்.

பிறகு பிரவேச மந்திரத்தை உச்சரித்ததும், அந்த மாயக் கதவு திறக்க, உள்ளே தேவலோகம் போல் இருந்தது ....

மனித வாடயே படாமல் பச்சை பசேல் என்றிருக்கும் இயற்கை சூழல் ...

பொய்மான்கள் போல் மின்னி மின்னி மறையும் மூலிகை தாவரங்கள் ....

ஒருபுறம் பனிப்பாறை .... மறுபுறம் சத்தமே எழுப்பாமல்
மென்மையாக வளைந்து ஓடும் நதி ...
அவைகளைக் கடந்து செல்ல செம்மண் நிலங்கள் .... என இயற்கையே ஒன்றோடு ஒன்று உறவு கொண்டு திளைக்கும் காட்சி .....
காண காண தெவிட்டாத இன்பமாய் இருக்க ....

" சிவ நேத்திர மூலிகை வேண்டும் ..." என்று மாதவி கண்மூடி பிரார்த்திக்கும் போது,
மின்னி மறைந்த மூலிகைகள், அவளது பிரார்த்தனைக்கு கட்டுப்பட்டு,
கூப்பிய கரங்களுக்குள் தஞ்சம் அடைய, அவள் மெய்சிலிர்த்துப்போக,

" தேவி ... பொதுவாக 'தம்பணா மந்திரம்' தெரியாமல் மாய மூலிகைகள் வசப்படாது ... ஆனால் தாங்கள் நெற்றியில் இருக்கும் சிவ திலகத்தை கண்டு தான்
இம் மூலிகைகள் தங்கள் கரம் தேடி வந்துள்ளது ..." என விவரித்தது அங்கு இருக்கும் ஒரு பூத கணம்.

மேலும் அவர்கள் தொடர்ந்து பயணிக்க,
ஆதிசேஷன் போல் பஞ்சமுக நாகம் வாசுகி அகன்று விரிந்து படுத்திருக்க,
அதன் பரந்து விரிந்த பஞ்ச முகத்தின் கீழ், மரகத லிங்கங்களும் நவபாஷாண லிங்கங்களும்
மிகுந்த ஜ்வாலையோடு காட்சியளிக்க,
அருகில் சென்று நாயகனும் நாயகியும் ஈசனை வேண்டி அதனை தொட்டதும், கிட்டத்தட்ட 100 கிலோ பெருமானமுள்ள ஒவ்வொரு லிங்கங்களும் சுண்டுவிரல் அளவிற்கு சுருங்க, நன்றி தெரிவித்துவிட்டு
இருவரும் தங்களது கரங்களில்
அள்ளிக்கொண்டு,
மூலவர் சன்னதிக்கு திரும்பினர்.

லிங்கங்களை பிரதிஷ்டை(சக்தியூட்டுவது ) செய்வதற்காக போட்டு வைக்கப்பட்டிருந்த ஆசனங்களில்
அவைகள் வைக்கப்பட்டு, மேள தாளங்கள் முழங்க, தலைமை அர்ச்சகரின் வழிகாட்டுதலின்படி கிருஷ்ணா
அபிஷேக ஆராதனைகளை மேற்கொள்ள தொடங்கியதுமே
லிங்கங்கள் தன் சுய உருவத்தை
பெற்று கம்பீரமாக காட்சி கொடுக்க,

மக்கள் வெள்ளம் ஒரே குரலில்
" ஓம் நமசிவாய ......" என்று உணர்ச்சிப் பெருக்கில் முழங்க,
அந்த தெய்வீக ஒலி விண்ணைப் பிளக்க, பூரண சந்திரனுக்கு அருகில்
அரைக்கணம் அந்த அஞ்சப்பன் காட்சி கொடுத்துவிட்டு மறைந்தான்.


மறுநாள் காலை காலைகதிர் மண்ணில் படுவதற்கு முன்பு, ஆச்சாரியாவின் அறிவுறுத்தலின்படி
சிவ நேத்திர மூலிகைகளை கசக்கி பிழிந்து சாறு எடுத்து,
ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல்
கோமாவில் படுத்திருந்த , டாக்டரின் மனைவி மாதவியின் நெற்றியில் கிருஷ்ணா தடவினான்.

உடனே ராஜகோபால் மகிழ்ச்சி பெருக்கில் கிருஷ்ணாவின் கரங்களைப் பற்றிக் கொண்டு

" நீங்க என்னை விட வயசுல சின்னவங்க ... இல்லன்னா உங்க கால்லயே விழுந்திருப்பேன் ....
உங்க மனைவியோட முகத்தை பார்த்ததுமே , சோழி பிரசன்னம் போட்டு எல்லாத்தையும் சொல்லிட்டாரு ஆச்சார்யா ....
உங்களை மலை போல நம்பி தான் இந்த மலைக்கே வந்தோம் ....
நல்லது நடந்துடுச்சு ...
108 நாள் இதே மாதிரி
மூலிகைச் சாற பயன்படுத்தினா,
என் பொண்ணு குணமாயிடுவாளாம்..."

உடனே மதனகோபாலும்
ஏகத்துக்கு கிருஷ்ணாவை பாராட்டி
நன்றி கூற,

" உங்க ரெண்டு பேருக்கும் நானும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் ...
நான் என் மனைவியோட இருக்க முடியாத நேரத்துல, நீங்க ரெண்டு பேரும் அவளைத் தந்தையா தமயனா
பாதுகாத்து வழிநடத்தி இருக்கீங்க ....."
என்றான் அளவுக்கு அதிகமான நன்றி உணர்வுடன்.

அன்றைய தினம் காலை 10 மணி அளவில் கிருஷ்ணாவை பேட்டி எடுக்க பத்திரிகை ஊடகங்கள் வந்திருந்தன ....

தோண்ட தோண்ட கிடைத்த பிணங்களால், மாயோன் மங்கலத்தை பற்றி
இல்லாதது பொல்லாததை பத்திரிக்கை தர்மம் என்ற பெயரில்
பெரும்பாலான பத்திரிகைகள் மனம் போன போக்கில் எழுதி காசு பார்த்திருந்தனர் ....

கிருஷ்ணாவிடம் பேட்டியை தொடங்கி
மரகதலிங்கம், நவபாஷாண லிங்கம், சுரங்கம் , ரகசிய அறை என கேள்விகள் நீண்டு கொண்டே செல்ல
சலிக்காமல் பதிலளித்தான் நாயகன்.


நிருபர் : இங்க ஏகப்பட்ட பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டதால , மாயோன் மங்கலத்துக்கு முன்ன போல இல்லாம மக்கள் வரவு குறைஞ்சிருக்கா.... ஐ மீன் ...
மாயோன் மங்கலத்தோட மகிமை குறைஞ்சிருக்கா ....

கிருஷ்ணா : இங்க வர்றவங்க எல்லாம் பெரும்பாலும் அன்றாடங்காய்ச்சி,
சாதாரண நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவங்க தான் ....

நீங்க சொல்ற இந்த கொலைகளை செஞ்சவங்க எல்லாரும் அரசியல்ல பெரும் பதவி கிடைக்கிறதுக்காகவும், ஆடம்பரமாக வாழறதுக்காகவும் அரசியல் பின்புலம் உள்ள பெரும் பணம் படைத்த கூட்டங்கள் தான் ...
அந்தக் கூட்டங்களைக் கூண்டோட பிடிச்சாச்சு ....

எப்பவுமே காமன் மேனுக்கு எதிர்பார்ப்புகள் ரொம்ப கம்மி ....
இயல்பான வாழ்க்கை வாழறவங்க ....
அவங்களால எந்த பிரச்சனையும் யாருக்கும் வராது ...
அப்படியே வந்தாலும் இப்படி உலகமே திரும்பிப் பார்க்கிற அளவுக்கான பிரச்சனையா அது இருக்காது ....

நாட்டுல நடக்குற பாதி பிரச்சனைகளுக்கு காரணம் அரசியல் பின்புலம் உள்ள பணம் படைச்ச முதலைகள் தான் ..

அப்புறம் நீங்க கேட்ட கேள்விக்கு நேரடியான பதில சொல்லனும்னா,

குற்றங்களுக்கும் தெய்வங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல...

இந்த உலகத்துல ஏதாவது ஒரு இடத்தை சொல்லி, அங்க திருட்டு, கற்பழிப்பு ,கொலை , கொள்ளை எதுவுமே நடக்கலன்னு உங்களால சொல்ல முடியுமா ....
முடியாவே முடியாது ...

ஏன்னா இம்மாதிரியான அநீதிகளை செய்யறது மனிதர்களோட வக்கிர சிந்தனைகளே ஒழிய எந்த தெய்வங்களும் கிடையாது ....

வழிபாட்டுத்தலங்களுக்குள்ள போகும் போது மட்டும் தெய்வத்தை நினைச்சுகிட்டு போகாம வெளி உலகத்துக்கு வரும் போதும் தெய்வத்தை நினைச்சா இது மாதிரியான பிரச்சனைகள் எல்லாம் வரவே வராது ...

என் தாத்தா அடிக்கடி சொல்லுவாரு
பக்திக்கும் ஆன்மீகத்துக்கும் வித்தியாசம் உண்டு ....

பக்திங்கிறது தெய்வத்தை தேடி பூஜை புனஸ்காரம் செய்து, தினமும் வழிபாட்டு தளங்களுக்கு போயிட்டு வரது ....

ஆனா ஆன்மீகங்கிறது தெய்வத்தை நம்ம மனசுக்குள்ள தேடறது ....

அதை மக்கள் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிட்டா பிரச்சனையே இல்லை ....

நிருபர் : நீங்க யாரையோ சொல்ற மாதிரி சொல்றீங்களே, உங்க வீட்டு ஆளுங்க தானே இந்த கொலைகளுக்கு எல்லாம் காரணம் ...

கிருஷ்ணா : இந்த கேள்விக்கு ஒரே ஒரு வரில பதில் சொல்றேன் ...
என் வீட்டு ஆளுங்கன்னு நான் நினைச்சிருந்தா, இந்த கேஸ் இந்த அளவுக்கு உலகம் முழுக்க பரவி இருக்காது ...

சற்று அமைதி காத்த நிருபர்,

" நீங்க வேலைய விட போறதா கேள்விப்பட்டோம் ....உண்மையா ..."

" ஆமா ... என் தாத்தா வாழ்ந்த பண்ணை வீட்டை இலவச சித்த மருத்துவமனையா மாத்த போறேன் ...
நிறைய தரமான சித்த மருத்துவர்கள
பணியில் அமர்த்த போறேன்...

உலகத்துலயே பாவப்பட்ட ஜென்மம் ஒன்னு பசியில் இருக்கிறவங்க..
இன்னொன்னு நோய்ல இருக்கிறவங்க.....

அதைவிட மோசமான ஒன்னும் இருக்கு .... சாப்பாட்டுக்கே வழியில்லாம இருக்கும் போது , கொடிய நோயில சிக்கி வைத்தியம் பார்க்க முடியாம கஷ்டப்படுறவங்க...

அவங்களுக்கெல்லாம் இலவசமா தங்க இடம், மூணு வேளை வயிறார சாப்பிட ஆரோக்கியமான சாப்பாடு ,

யார் கண்ணுலையும் படாத, யாருக்கும் கட்டுப்படாத உயிர் காக்கும் மூலிகைகள் எனக்கு கட்டுப்படுறதால,
தூய்மையான அந்த மூலிகைகளைக் வச்சு
இலவச சித்த மருத்துவம்னு திட்டம் வச்சிருக்கேன்...

அதோட ஆயிரம் வருஷ பழமையான மரகதலிங்கம் நவபாஷன லிங்கத்துக்கு நடக்கிற அபிஷேக ஆராதனைகள கண்களால் பார்த்தாலோ அந்த தீர்த்தத்தை குடிச்சாலோ பெரும் வியாதி எல்லாம் குணமாகும்......

அதனால முன்ன போலவே மாயோன் மங்கலம், மகத்துவத்தோடு தான் இருக்க போகுது .... " என பேட்டியை முடித்துக் கொண்டான்.

நடந்து முடிந்த நிகழ்வுகள் அனைத்தையும் கேள்விப்பட்டு கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு
சுப்பிரமணியம் கலைச்செல்வி மாயோன் மங்கலத்திற்கு வந்தனர்.

அவர்கள் பிறந்து வளர்ந்த ஊரின் சுதந்திரக் காற்றை சுவாசிக்க
இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழல் ....

வந்தவர்கள் முதலில் தேடி சென்று பார்த்தது மாதவியை தான் ...

மாதவியை ஆத்மார்த்தமாக அணைத்து கொண்டு கண் கலங்கினார் கலைச்செல்வி ....

" உனக்கு அம்மாவா நான் ஒண்ணுமே பண்ணதில்லை மாதவி ....
உன் போட்டோ பாக்குற வரைக்கும்,
கூடையில சின்ன குழந்தையா
உன்னை விட்டுட்டு போன ஞாபகம் தான் என் மனசுல இருந்தது ...
மித்ரா போனதுக்கு அப்புறம் தான் உன்னை பாக்கணும்னு விதி போல ...."
என்றார் ஆத்மார்த்தமாக.

சுப்பிரமணியத்திற்கு இறந்த மித்ராவே மறுஜென்மம் எடுத்து வந்தது போல் இருந்தது ....

" உன் குழந்தை பருவம் சந்தோஷமா அமையலன்னு எங்களுக்கு தெரியும் .... அதுக்கு நாங்க தான் காரணம் .... அதுக்கு எல்லாம் சேர்த்து
இனிமே உன் வாழ்க்கை அமோகமா இருக்கும் மா.... " என்றார் உணர்ச்சி பெருக்கில்.

சங்கையா மற்றும் அவரது தாயார் சகுந்தலையை சென்று சந்தித்தனர் ...
நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் விட்டு பேசி மகிழ்ந்தனர் ....

பிறகு செர்ரி மற்றும் அவன் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தனர் ...
கலைச்செல்விக்கு செர்ரியை மிகவும் பிடித்து விட்டது.

அவனது மேல்பூச்சு இல்லாத பேச்சு ...
நன்னடத்தை, நல்ல ஒழுக்கம் , குடும்ப உறுப்பினர்களை அரவணைத்துச் செல்லும் பாங்கு என அனைத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றான்.

மதுரா மாயோன் மங்கலத்து வழக்கை ஏற்று நடத்துவதால், அவளுக்கு சுலபமாக சேலத்திற்கு இடமாற்றம் கிடைக்க,
உடனே இரு குடும்பத்தாரும் பேசி முடித்து செர்ரி மதுரா திருமணத்தை
மாயோன் சன்னதியில் அருமையாக நடத்தி வைத்தனர்.

டாக்டரின் மனைவி மாதவி பூரணமாக குணமடைந்து இயல்பான வாழ்க்கை வாழ ஆரம்பித்து இருந்தார்.

அவர்கள் கட்டிக் கொண்டிருக்கும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை இலவச சித்த மருத்துவமனையாக மாற்ற முடிவெடுத்தனர் ...

கிருஷ்ணாவும் மாதவியும் பெரிய வீட்டுக்கு குடிபெயர்ந்தனர் ...

கிருஷ்ணா பேட்டியில் சொன்ன படி மூர்த்தியார் வாழ்ந்த அந்த பெரிய பண்ணை வீட்டை சித்த மருத்துவமனையாக மாற்ற
பூமி பூஜையை கோலாகலமாக செய்து முடித்த அன்றே மாதவியின் மாங்கல்யத்தில் இருந்த நாகரத்தினம் கொண்ட சிவ முத்திரை மாயமாய் மறைந்து போனது ..

கிருஷ்ணா மாதவி இருவருக்கும் அது பலத்த அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் கொடுக்க, உடனே சங்கையா

" நாகரத்தின சிவ முத்திரை எதுக்காக உங்க ரெண்டு பேர் கைக்கு வந்ததோ
அந்த வேலையை நீங்க தொடங்கிட்டதால, அது உங்களை விட்டு மறைஞ்சிடுச்சு ...." என்றார்.


மூன்றாண்டுகளுக்குப் பிறகு ....


மாயோன் மங்கலத்து வழக்கில் வைஷ்ணவி சுஜாதாவிற்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டு வேதாச்சலத்தோடு அவர்களுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட , மற்ற அனைவருக்கும் சைமன் உட்பட தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

சூரிய கிரனை மணந்த ஒரே காரணத்திற்காக மூன்றாண்டுகள் சந்தியா மற்றும் அவளது தாய் சாந்தி சிறையில் இருந்து தண்டனை அனுபவித்து , பிறகு அவ்வழக்கிற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதை நிரூபித்து விட்டு விடுதலையாகி இருந்தனர்.

மாதவின் பெயரில் இருக்கும் வீட்டில் தங்கிக் கொண்டவர்கள், அவளுக்கு இழைத்த கொடுமைகளை எண்ணி எண்ணி குற்ற உணர்வில் குமைந்தனர் ...

மாயோன் மங்கலத்து வழக்கில் துரிதமாக செயல்பட்டு நீதி வழங்கிய நீதி அரசர்களுக்கு உலகெங்கும் பாராட்டுக்கள் குவிந்தன ...

கிருஷ்ணா மாதவிக்கு ஆண் குழந்தை பிறக்க, மாதவன் என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.

குழந்தை மாதேஷை தாங்களே வளர்த்துக் கொள்வதாக கூறி, உதய்ப்பூர்க்கு அழைத்துச் சென்று விட்டனர் சுப்ரமணியம் தம்பதியர்.

செர்ரி, மதுரா தம்பதிக்கு பெண் குழந்தை பிறக்க " மஹிமா " என்று பெயரிட்டு ரசித்தனர்.

டாக்டர் மதனகோபாலின் மனைவி மாதவி ஆறு மாத கால கர்ப்பிணி .... ராஜகோபால் மதன கோபால் இருவரின் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை...

அவர்கள் கட்டிக் முடித்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இலவச சித்த மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது ...

கிருஷ்ணா தன் தாத்தா மூர்த்தியார் வாழ்ந்த பண்ணை இல்ல இடத்தில் இலவச சித்த மருத்துவமனை கட்டி
பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் உணவு மற்றும் தங்கும் வசதியோடு தரமான இலவச மருத்துவத்தை வழங்கி வருகிறான் ...


எப்பொழுதுமே மயூரியை வம்பு இழுப்பதில்
கிருஷ்ணாவின் புத்திரன் இரண்டு வயது மாதவனுக்கு அலாதி பிரியம் ...

அவளது நோட்டுப் புத்தகங்களை கிழிப்பது, அவளது தலைமுடியை பற்றி இழுப்பது என அவள் வீட்டில் இருந்தால்
அவளை விட்டு இம்மி அளவு நகர மாட்டான் .

ஒரு சில நேரங்களில் மாதவி குரலை உயர்த்தி மயூரியை திட்டி விட்டால் போதும்,
அவன் ஓவென்று அழ ஆரம்பித்து விடுவான் .....

அதை ரசிப்பதற்காகவே அடிக்கடி மாதவி மயூரியை திட்டுவது போல் பாசாங்கு செய்ய, அவன் பாசத்தால் அழ, கிருஷ்ணா மாதவியோடு மயூரியும்
அதனை வெகுவாக ரசிப்பாள்.

ஒரு நாள் இரு குழந்தைகளும் ஏதோ ஒரு காரணத்திற்காக சண்டையிட்டு கொண்டிருக்க,

" இந்த மனுஷன் எங்க போனாரு ...
வீட்ல இருந்தா குழந்தைகளை கவனிச்சுக்கணும்னு கொஞ்சம் கூட எண்ணமே கிடையாது ..." என் புலம்பிக்கொண்டே அவள் அடுக்களையில் ஏதோ செய்து கொண்டிருக்கிற , பின்புறமாக வந்து இறுக்கி அணைத்துக் கொண்டான் அவளது மாயவன்.

" என்னது இது ...."

" தெரியல ..... உன்னை கவனிக்கலன்னு ரொம்ப நேரமா புலம்பிக்கிட்டு இருந்தாயே அதான் இது..."

" ம்ம்ம்ம், நான் என்னை கவனிக்க சொல்லல குழந்தைகளை கவனிக்க சொன்னேன் ..."

" உன்னை கவனிச்சதால தான் டி குழந்தையே பிறந்து இருக்கு ..."

" இது என்ன காலங்காத்தால கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாம..." என்றவளை தன்னை நோக்கி திருப்பி
அவள் கண்களுக்குள் பார்த்து

" காதல் ...." என்றான்...

அப்பொழுது எங்கிருந்தோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது .....

நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது ....

சஹானா சாரல் தூவுதோ ...

என்ற ரஜினி திரைப்பட பாடல் கேட்க,

"இந்த பாட்ட பாடற முழு தகுதி உனக்கு எனக்கும் தான் டி உண்டு " என்ற மாயவனைப் பார்த்து, 'களுக்'கென்று சிரித்தாள் அவன் மோகினி .


சுபம்
 
Back
Top